Aran Sei

ஊழலற்றதா பாஜக அரசு? – மோசடியாக பரப்பப்படும் கருத்து

Image Credit : thewire.in

ந்தியா ஆசியாவிலேயே மிக அதிக லஞ்சம் மிகுந்த நாடாக இருப்பதாக உலக ஊழல் அளவுமானி (Global Corruption Barometer) காட்டுவதாக பன்னாட்டு வெளிப்படைத் தன்மை அமைப்பின் (Transparency International) அறிக்கை தெரிவிக்கிறது.

ஊழல் எதிர்ப்பு நாளான டிசம்பர் 9 அன்று வெளியான அந்த அறிக்கை, 50% பேரிடம் லஞ்சம் கேட்டு வாங்கப்படுவதாகவும், அதில் தனிப்பட்டத் தொடர்புகளை பயன்படுத்திய 32% பேர் லஞ்சம் கொடுக்காமல், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவம், கல்வி போன்ற சேவைகளை பெற்றிருக்க முடியாது எனத் தெரிவித்ததாகவும் கூறுகிறது.

இந்த அறிக்கையின் முடிவுகள், ‘பரஷ்டாச்சார் முக்த் பாரத்’ (ஊழலில்லா இந்தியா) என்ற முழக்கத்தின் கீழ் ஆட்சிக்கு வந்த மோடி அரசின் மீதான கடுமையான குற்றச்சாட்டு ஆகும்.

பிற உலகநாடுகளில் லஞ்சம் உயர்மட்ட அளவில் மட்டுமாக இருப்பதற்கு மாறாக இந்தியாவில் அந்த கண்ணுக்குப் புலப்படாத கிருமி நிர்வாகத்தின் அடிமட்டம் வரை விரவி நிற்கிறது என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. பெரிய அளவிலான லஞ்ச ஊழல்கள் நமது கவனத்தை கவர்ந்தாலும், எளிய மக்களின் அன்றாட வாழ்வில் சிறு லஞ்ச ஊழல்கள் அவர்களைப் பேயாகப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்றன.

மையப்படுத்தப்பட்ட தீர்வு மூலம் பரவலாக்கப்பட்ட லஞ்சத்தை ஒழிக்க முடியாது. சாதாரண மக்கள் உள்ளூர் லஞ்சத்தை அச்சமின்றி வெளியில் கொண்டு வரும் அவர்களுக்கு வழங்குவதும், இந்தப் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து ஊழல் அதிகாரிகளை பொறுப்பாக்குவதும் ஆகிய அமைப்புகள் தேவையாக உள்ளன.

சிறகொடிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ)

கடந்த பதினைந்து ஆண்டுகளில், ஊழலை வெளிப்படுத்த சாதாரண குடிமக்களுக்குக் கிடைத்த ஒரே பயன்தரத்தக்க ஆயுதம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மட்டுமே என்பது உண்மைதான். இந்த சட்டம் நாட்டின் மூன்று கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குடும்ப அட்டை, ஓய்வூதியம், மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகளை பெறும் ஆற்றலை இந்த சட்டம் அள்ளிக் கொடுக்கிறது என்பதை உணர்ந்த, மிக ஏழ்மையில் உள்ளவர்களும், ஒதுக்கப்பட்டவர்களும் இதனை பயன்படுத்தி உள்ளனர்.

2011-ம் ஆண்டு யேல் பல்கலைக்கழகம் இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வில் அத்தியாவசிய சேவைகள் பெறுவதில் லஞ்சம் கொடுப்பதற்கு நிகராக தகவல் அறியும் உரிமைச் சட்டம் பலனளிக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. இந்தச் சட்டம், உயர்மட்ட பதவிகளில் நடக்கும் அதிகார அத்துமீறல்கள் மற்றும் லஞ்ச ஊழல்களை வெளிக் கொணரவும் பொதுநல உணர்வுமிக்க குடிமக்களால் செயல்திறனுடன் பயன்படுத்தப்பட்டது என்று அது தெரிவிக்கிறது.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

இத்தகைய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அமைப்பை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, கடந்த ஆறு ஆண்டுகளாக மக்களின் தகவல் அறியும் உரிமை மீது பாஜக அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்தும் அமைப்புகளை தொடர்ந்து, விடாப்பிடியாக சீர்குலைக்கும் செயல்கள் நடைபெற்று வருவது, தகவல் அறியும் உரிமையின் மீது தொடுக்கப்படும் மிகப் பெரும் தாக்குதல் ஆகும்.

2019-ல் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. தகவல் ஆணையாளர்களின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றை ஒன்றிய அரசே தீர்மானிக்கும் என அந்தந் திருத்தம் கூறுகிறது. இதன்மூலம், தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் சுதந்திரத்தை அது ஒழித்தது. மேலும் குறித்த காலத்தில் தகவல் ஆணையாளர்களை நியமிக்காமல், அரசுகள் ஆணையத்தின் செயல்பாட்டில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தின.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மிகக் கேவலமாக உள்ளன. மே, 2014 லிருந்து இன்று வரை குடிமக்கள் நீதிமன்றத்தை அணுகாமல் ஒரு ஆணையாளரைக்கூட மத்திய தகவல் ஆணையத்திற்கு அரசு நியமிக்கவில்லை.

உலக ஊழல் மானி, இந்தியாவில் 41% பேர் அரசிடமிருந்து அடையாள சான்றுகள் போன்ற ஆவணங்களை பெற லஞ்சம் கொடுத்ததாகவும், 42% பேர் காவல் துறைக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் காட்டுகிறது. அன்றாட வாழ்வில் எளிய மக்கள் சந்திக்கும் இந்த ஊழலை ஒழிக்க, உள்ளூர் மட்டங்களில், ஊழல் மற்றும் தவறான செயல்கள் தொடர்பான புகார்களை விசாரித்து, முடிவைத் தரும் செயல்திறனுள்ள குறிப்பிட்ட காலத்தில் பயன்தரவல்ல அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

போலி வாக்குறுதிகள்

2011-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குறை தீர்க்கும் நிவாரண மசோதா, மக்களுக்கு அருகாமையில் உள்ள உள்ள நகராட்சி மற்றும் பஞ்சாயத்து வட்ட அளவில் புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதாக இருந்தது. அது, கண்காணிப்பு அமைப்புகளை, குறித்த காலத்திற்குள் புகார்களுக்கு தீர்வு காண்பதற்கு பொறுப்புள்ளவர்களாக ஆக்கியது, அவ்வாறு தீர்வு காணாதவர்கள் மீது தண்டனை நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வழி வகுத்தது.

எனினும், 2014-ல் மக்களவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மசோதா காலாவதியாகிவிட்டது‌. தேர்தலில் தாங்கள் வென்றால் அதனை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது, ஆனால் இதுவரை அதற்காக துரும்பையும் நகர்த்தவில்லை. அத்தகைய ஒரு சட்டம் இருந்திருந்தால், பன்னாட்டு வெளிப்படைத்தன்மை அமைப்பு அறிக்கை கூறுவது போல, மக்கள் அடிப்படை தேவைகள் மற்றும் சேவைகள் பெறுவதை உறுதி செய்வதற்கும், அதிகாரிகள் தனிச்சையாக நடப்பதைத் தடுக்கவும் லஞ்ச ஊழலை குறைப்பதற்கும் ஏதுவாக இருந்திருக்கும்.

உயர்மட்ட அளவில் நடக்கும் ஊழல்களைத் தடுக்க, நீண்டகால, கடுமையான போராட்டத்திற்குப் பின், 2014-ல் நிறைவேற்றப்பட்ட லோக்பால் சட்டமும் முடமாக்கப்பட்டு விட்டது. 2016-ல் பொது ஊழியர்களின் சொத்து விவரங்களையும் கடன்களையும் பொது மக்களுக்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் போன்ற முக்கியமான பிரிவுகளை நீக்குவதற்கான சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு ஐந்தாண்டுகளாகியும் லோக்பால் அமைப்புக்குத் தலைவரும், உறுப்பினர்களும் இதுவரை நியமிக்கப்படவே இல்லை.

இறுதியாக, அரசு சார்பான உறுப்பினர்களே பெரும்பான்மையாக உள்ள ஒரு தேர்வு குழு, லோக்பாலுக்கான உறுப்பினர்களை நியமிப்பது என்ற முறை, அதன் சுயேச்சைத் தன்மையை கேள்விக்குறி ஆக்கி உள்ளது. தொடர்ந்து, ஓராண்டாகியும், அரசு தேவையான விதிகளை வகுக்கவில்லை. இதன் காரணமாக ஒரு லோக்பால் உறுப்பினர் பதவி விலகி விட்டார்.

பெரிய அளவிலான ரஃபேல் ஊழல், பல்வேறு வங்கி ஊழல்கள் போன்றவை நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் போது, லஞ்ச ஒழிப்புத் தீர்ப்பாயம் செயல்படாமலேயே உள்ளது. இவை தொடர்பாக அந்த அமைப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உலகளாவிய ஊழல் மானியின் மற்றொரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்னவென்றால், ஊழல் பற்றி புகாரளிப்பது அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மிக முக்கியமானதாக இருந்தாலும், கருத்து கேட்கப்பட்டவர்களில் 63% பேர் பழி வாங்கப்படுவோமோ என்று ஆழ்ந்த கவலை கொண்டிருந்தனர். இந்த கவலை தவறாக இல்லைதான். குற்றங்களை வெளிக் கொண்டு வருபவர்கள் மீதும், தகவல் அறியும் சட்ட பயனர்கள் மீதும் கொடூரமான தாக்குதல்கள் அதிகார மட்டங்களுக்கு உண்மையை உணர்த்த முயல்பவர்கள் எதிர்கொள்ளும் சவாலை எடுத்துக் காட்டுகின்றன.

2018-ம் ஆண்டில் மட்டும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஊழலை வெளிக் கொண்டு வந்தவர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். இருந்த போதிலும், குற்றங்களை வெளிக் கொண்டு வருபவர்களின் அடையாளத்தை மறைப்பதற்கும், அவர்கள் பழிவாங்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கும் ஒரு சட்டரீதியான கட்டமைப்பை வழங்குவதற்காக 2014-ம் ஆண்டில் இயற்றப்பட்ட குற்றங்களை வெளிக் கொணர்வோர் பாதுகாப்பு சட்டத்த்துக்கான விதிமுறைகளை வகுத்து அதனை செயல்படுத்துவதற்கு அரசு தவறி விட்டது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு எதிரான புகார்களைப் பெறுவதற்கும் விசாரிப்பதற்கும் அந்த சட்டம் ஒரு பொறிமுறையை நிறுவுகிறது.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும், பயனுள்ள சேவை வழங்கலை உறுதி செய்வதற்கும் வாக்குறுதி அளித்து பாஜக ஆட்சிக்கு வந்தது. எனவே, அரசாங்கம் உடனடியாக ஒரு வலுவான ஊழல் எதிர்ப்பு மற்றும் குறை தீர்க்கும் கட்டமைப்பை உருவாக்கி அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த ஆறரை ஆண்டுகளில், முக்கியமான ஊழல் எதிர்ப்பு சட்டங்கள் பலவீனப்படுத்தப்பட்டு விட்டன. பரவலான எதிர்ப்பையும் மீறி ஊழல் பிரச்சினைக்கு உறுதியான தீர்வாக பண மதிப்பு நீக்கம், தேர்தல் பத்திரங்கள் போன்ற மோசமாக திட்டமிட்ட நடவடிக்கைகளை புகுத்தியது.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் போன்ற தொழில்நுட்ப தீர்வுகளை நம்பி இருப்பதற்கான வரம்புகளை ஜார்க்கண்ட் கல்வி உதவித்தொகை மோசடி போன்ற மோசடிகள் அம்பலப்படுத்தி விட்டன. அரசுக்கு அரசியல் ரீதியான விருப்பம் இருக்கும் பட்சத்தில், சர்வதேச வெளிப்படைத்தன்மை (டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்) அமைப்பின் அறிக்கை, அரசு தனது பாதையை சரி செய்வதற்கான தூண்டுதலாக இருக்க வேண்டும்.

– அஞ்சலி பரத்வாஜ், அம்ரிதா ஜோஹ்ரி

(thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்