Aran Sei

மகாராஷ்டிரா: “கொரோனா இருக்கட்டும், கோயிலைத் திற” – பாஜக அமளி

Credits: Twitter

காராஷ்டிர மாநிலத்தில் பக்தர்கள் வழிபாட்டுக்காகக் கோயில்களைத் திறக்க வேண்டும் என மும்பையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திரளாக ஒன்றுகூடி காவலர்கள் அமைத்திருந்த தடுப்பரண்களை மீறிக் கோயிலுக்குள் நுழையும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்ட்ரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், “கோயில்கள் திறப்பதைத் தள்ளிப்போட வேண்டும் என எதுவும் அசரீரி கேட்கிறதா? அல்லது திடீரென நீங்கள் மதச்சார்பற்றவரா மாறிவிட்டீர்களா? உங்களுக்கு அந்த வார்த்தையே பிடிக்காதே.” என்று முதல்வரின் இந்துத்துவக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநரின் கடிதத்துக்குப் பதிலளித்துள்ள முதல்வர் உத்தவ் தாக்ரே, “என் மாநில தலைநகரத்தைப் பார்த்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருக்கிறது என்று கூறியவரை வீட்டுக்கு வரவேற்பது இல்லை என்னுடைய இந்துத்துவம்.” என்று பதிலளித்து நடிகை கங்கனா ரணாவத்துக்குப் பாஜக ஆதரவளித்தது குறித்து கடிதத்தில் சாடியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பிரவீன் தரேகர், ”மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வீட்டுக்கே டெலிவரி செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மன அமைதிக்காக கோயிலுக்குச் செல்ல விரும்புபவர்கள் குறித்து யார் சிந்திப்பார்கள்? ” என்று சாடியுள்ளார்.

இதனிடையே, பாலாசாகேப் விகே பாட்டிலின் சுயசரிதையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”கொரோனா பாதிப்பு இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது.”

”நான் எல்லோரிடமும் கேட்டுக்கொள்வது இதுதான்: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.” என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Credits: Ministry of Information and Broadcasting

இந்தியாவில் கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுவரையில் 40,514 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்