Aran Sei

” அரசியல் சட்டத்தின் மையமான மதிப்பீடுகள் சிதைக்கப்படுகின்றன ” – ஹமீத் அன்சாரி

Image Credit - thehindu.com

மது நாட்டின் மையமான மதிப்பீடுகள் சீர்குலைக்கப்படுகின்றன என்று முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.

ஹமீத் அன்சாரி பல்வேறு நாடுகளில் இந்தியத் தூதராகவும், தேசிய சிறுபான்மையினர் கமிஷனின் தலைவராகவும் பணியாற்றினார். அதன் பின்னர், 2007 முதல் 2017 வரை இரண்டு பதவிக் காலங்களுக்கு குடியரசு துணைத்தலைவர் பதவி வகித்து ஆகஸ்ட் 10, 2017-ல் ஓய்வு பெற்றார்.

அவரது சமீபத்திய புத்தகமான “By Many a Happy Accident: Recollections of a Life”-ல் அவர் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அமளிக்கு மத்தியில் மசோதாக்களை ஏன் நிறைவேற்றவில்லை – ஹமீத் அன்சாரியிடம் கேட்ட மோடி

நாட்டின் அடிப்படை மதிப்பீடுகள் சிதைக்கப்பட்டு வருகின்றன என்றும், மதச்சார்பின்மை என்ற சொல் அரசின் அதிகாரபூர்வ பயன்பாட்டில் “கிட்டத்தட்ட இல்லாமல் போய் விட்டது” என்றும் அவர் கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

இந்த சீர்குலைவுடன் சேர்ந்து, “பிற அரசியல், சமூக சக்திகள் இதன் உண்மையான தன்மையை புரிந்து கொண்டு, அதை எதிர்ப்பதற்கு அவசரம் காட்டாமல் இருப்பது அல்லது எதிர்க்கத் தவறுவது நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

பன்முக கலாச்சாரம், சகோதரத்துவம், அறிவியல் உணர்வு போன்ற அரசியல் சட்ட மதிப்பீடுகள் பற்றிய அரசியல் விவாதம் கிட்டத்தட்ட இல்லாமல் போய் விட்டதாகவும், அவற்றின் இடத்தில், “அவற்றுக்கு மாறான நம்பிக்கைகளும் நடைமுறைகளும் முன்நிறுத்தப்படுகின்றன” என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை வெல்வதற்கும், அதை தக்கவைத்துக்கொள்வதற்கும் ஆன உத்தியாகவும், சதித்திட்டத்தில் செழித்து வளர்வதாகவும், அனைத்து எதிர்க்கட்சிகளையும் குற்றவாளியாக்குவதாகவும், வெளிப்புற அச்சுறுத்தல்களை பயன்படுத்துவதற்குமான ஜனரஞ்சக அரசியல் 2019 பொதுத் தேர்தலில் “தன்னை நிரூபித்துக் கொண்டது” என்கிறார், அவர்.

“சர்வாதிகாரவாதமும், தேசியவாதமும் பெரும்பான்மைவாதமும் இதற்கு உதவியது. ஒற்றை மொழி, ஒற்றை இனம், ஒற்றை மதம், ஒற்றை பிரதேசம், ஒற்றை கலாச்சாரம் ஆகியவை விரும்பத்தக்கவை என்ற இந்த எளிய கருத்தியல் மருந்து வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு வெற்றிகரமாக புகட்டப்பட்டது”என்று அவர் எழுதியுள்ளதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியையும் இந்திய ஜனநாயகம் முன் வைக்கும் கொள்கைகளையும் பெருமைப்படுத்துவதாக இல்லை என்கிறார், ஹமீத் அன்சாரி.

ஜம்மு காஷ்மீர் – உரிமையை இழந்த மக்களின் கதை

“இதேபோல், இப்போதைய அரசு நிர்வாகத்தின் நடவடிக்கைகளை பரிசீலிப்பதில் உயர்ந்த நீதித்துறையின் அணுகுமுறை, பெரிதும் மதிக்கப்படும் ஒரு நிறுவனத்துக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை, பொதுமக்கள் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சேதப்படுத்துகிறது” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, “முந்தைய ஒருமித்த கருத்து” நாட்டில் இனிமேலும் இல்லை.

“சமூக அமைதிக்கும் சமூக மோதல்களுக்கும் இடையிலும், அனைத்து மதங்களுக்கும் இடமளிக்கும் ஒரு மதச்சார்பற்ற சமுதாயத்திற்கும், ஒற்றை மதத்தின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதவாத அரசுக்கும் இடையில், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்துக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே உரியதான சமூகத்துக்கும் இடையே எது வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டியுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்