Aran Sei

மதிய உணவு வழங்கும் ” அட்சய பாத்திரா ” முறைகேடுகள் – அறங்காவலர்கள் பதவி விலகல்

மாதிரி படம்

ள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அட்சய பாத்திரா அறக்கட்டளையின் தணிக்கை அறிக்கை கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அறக்கட்டளையின் 4 உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

பெங்களூருவைச் சேர்ந்த அட்சய பாத்திரா அறக்கட்டளை தமிழ்நாட்டிலும் காலை உணவு வழங்கும் திட்டத்தில் சமீபத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு அட்சய பாத்திரா அறக்கட்டளைக்கு வழங்கியது.

அட்சய பாத்திரா என்ற தனியார் அறக்கட்டளை 20 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 11, 2000 அன்று பெங்களூருவில் தொடங்கப்பட்டது. இந்திய அரசின் மதிய உணவுத் திட்டத்தை தனியார்-அரசு கூட்டு முறையில் அமல்படுத்துவதற்கான முன்னணி பங்காளி நிறுவனமாக அட்சய பாத்திரா தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது அது 12 மாநிலங்களிலும் 2 யூனியன் பிரதேசங்களிலும் 19,039 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 18 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி வருகிறது.

2019-20ம் ஆண்டில் அட்சய பாத்திரா அறக்கட்டளை ரூ 248 கோடியை அரசு மானியமாகவும், ரூ 352 கோடியை நன்கொடைகளாகவும் பெற்றிருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் 50 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணியை எடுத்துக் கொள்வதாக இந்த அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக thehansindia.com இணையதளம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், அட்சய பாத்திராவில் தொடக்கம் முதலே அறங்காவலர்களாக இருந்த முன்னாள் இன்ஃபோசிஸ் இயக்குநர் மோகன்தாஸ் பய், அபய் ஜெயின், வி பால கிருஷ்ணன், ராஜ் கொண்டூர் ஆகியோர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“மிக முக்கியமான நிர்வாகப் பிரச்சனைகளை பல முறை எழுத்து பூர்வமாக முன் வைத்த பிறகும் அவை தீர்க்கப்படவில்லை. மோசமான நிர்வாக பிரச்சனைகளை தீர்க்காமல் இருந்ததாலும், சுயேச்சையான அறங்காவலர்களுக்கு பதிலாக நிர்வாகத் தரப்பு நபர்களை பெரும்பான்மையாக நியமிப்பது ஆகியவற்றைத் தொடர்ந்து பதவி விலகியுள்ளோம்.” என்று மோகன் தாஸ் பய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றும், சுயேச்சையான நபர்கள் பெரும்பான்மையாக இருக்கும்படி அறங்காவலர் குழு மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அட்சய பாத்திராவின் தணிக்கைக் குழுவின் 7 பக்க அறிக்கையிலிருந்து இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது. அதன்படி, அடிப்படையான நிதிக் கட்டுப்பாடுகள் இல்லாமை, நிதி ஒழுங்கு இல்லாமை, அறக்கட்டளைக்கும் கோயில் அறக்கட்டளைகளுக்கும் இடையே போதுமான இடைவெளி இல்லாமலை, நலன்களின் முரண், பதிவுகளும் தணிக்கை முறைகளும் இல்லாமை, ஆகியவற்றை தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை, இஸ்கான், பெங்களூரு, டச்ஸ்டோன் அறக்கட்டளை போன்ற கோயில் அறக்கட்டளைகளின் முக்கியமான நிர்வாகிகள் அட்சய பாத்திரா அறக்கட்டளையிலும் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளது, தீவிரமான முரண்களை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உதாரணமாக, அட்சய பாத்திரா வழங்கும் உணவுக்கான செலவு, பிற நிறுவனங்கள் வழங்கும் அதே போன்ற உணவுக்கான செலவை விட அதிகமாக இருப்பதை தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. “சமையல் கூடங்களை நடத்தும் கோயில் அறக்கட்டளைகள் அட்சய பாத்திரா அறக்கட்டளைக்கு பொறுப்பாக பதில் சொல்வதில்லை” என்று தணிக்கைக் குழு குற்றம் சாட்டுகிறது.

“பல்வேறு அட்சய பாத்திரா மையங்களில் இருந்து முறைகேடுகளை தெரிவிக்கும் புகார்கள் எங்களுக்கு வந்தன. ஆய்வு செய்து பார்த்ததில், சில சரியான குற்றச்சாட்டுகளாக நிரூபணமாயின. மற்றவை இன்னும் ஆய்வில் உள்ளன. இந்தப் பிரச்சனைகள் தீர்க்க முயற்சி செய்வதற்கு பதிலாக இஸ்கான் தொடர்புடைய அறங்காவலர்கள் இது தொடர்பான விசாரணைக்கு தடை போடுவது, பழி வாங்குவது என்று தணிக்கை அறிக்கையின் கண்டுபிடிப்புகளை புறக்கணித்தனர்” என்கிறார் தணிக்கைக் குழுவின் உறுப்பினராக இருந்து பதவி விலகிய ராஜ் கொண்டூர் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அட்சய பாத்திரா அறக்கட்டளையின் தலைமை அறங்காவலர் சஞ்சலபதி தசா தெரிவித்திருக்கிறார். புதிய தணிக்கைக் குழு தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதற்கு டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பதிலளித்த முன்னாள் தணிக்கைக் குழு உறுப்பினரான சுரேஷ் சேனாபதி, “கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் முழு உண்மையை வெளிப்படுத்தவில்லை. மிகத் தீவிரமான இந்த விஷயங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஆனால் இது தொடர்பாக ஊடகங்களில் விசாரணை கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

“அறக்கட்டளையின் தலைவர் மது பண்டிட் தாசாவும், துணைத் தலைவரும் கோயில் அறக்கட்டளைகளின் அறங்காவலர்களாகவும் இருப்பது தீவிரமான முரண்களை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான விசாரணைகளிலிருந்து ஒதுங்கியிருக்க அவர்கள் முன் வராதது நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்கு தடைகளை ஏற்படுத்துகிறது. அத்தகைய விசாரணையின் அடிப்படையில் சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுப்பதையும் அது தடுக்கிறது” என்று தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அட்சய பாத்திராவை சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க நியமித்தது தொடர்பாக மதிமுக தலைவர் வைகோ தமிழக அரசை கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அட்சய பாத்திரா வழங்கும் உணவில் வெங்காயம், பூண்டு சேர்ப்பதில்லை” என்றும் “முட்டையும் தவிர்க்கப்படுகிறது” என்றும் சுட்டிக் காட்டிய அவர், தமிழ்நாட்டில் மதிய உணவில் முட்டை வழங்கப்படுவதை சுட்டிக் காட்டியிருந்தார். உணவு வழங்கும் பணியை அட்சய பாத்திராவுக்கு அளிப்பது “சத்துணவுத் திட்டத்தை மனு தர்ம உணவுத் திட்டமாக மாற்றி விடும்” என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், இது வெற்றிகரமான மதிய உணவுத் திட்டத்தை தனியார்மயமாக்கும் முயற்சி என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

கிரீம்ஸ் சாலையில் 20,000 சதுர அடி, பெரம்பூரில் 35,000 சதுர அடி என இரண்டு சமையல் கூடங்களை அமைப்பதற்கு நிலம் ஒதுக்கியதையும் குறிப்பிட்ட அவர் இந்த ஒப்பந்தம் வழங்குவதற்கான டெண்டர் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ 500 கோடி என்று அவர் கூறியிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்