பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றம், மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் “கலவரம் செய்தவர்களை தடுக்கவே முயற்சித்தார்கள், ஊக்குவிக்கவில்லை” என்று கூறியது. நீதிபதி எஸ்.கே யாதவ், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராக போதுமான சாட்சி இல்லை, சிபிஐ கொடுத்திருக்கும் வீடியோ மற்றும் ஆடியோ சாட்சியின் உண்மைத் தன்மையை நீதிமன்றம் விசாரிக்க முடியாதென்றும் கூறியது.
ஆனால், டிசம்பர் 16,1992 அன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி லிபர்ஹான் குழுவின் அறிக்கையோ, இது ஒரு “கூட்டு சதி நடவடிக்கை” என்றது. அறிக்கையின் முடிவில், “கடவுளின் அவதாரமாகவும், சிறந்த அரசராகவும் கருதப்படும் நீதிவானான ராமர் பிறந்த இடத்தில் டிசம்பர் 6 அன்றும், அதற்கு முன்னரும் நடந்த நிகழ்வுகளில் கூட்டுச் சதி நடவடிக்கையின் தாக்கம் இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
‘மசூதி இடிப்பு கூட்டு சதி நடவடிக்கையே’
‘கூட்டு சதி நடவடிக்கை’ என தலைப்பிடப்பட்டுள்ள பிரிவில், “டிசம்பர் 6-ன் நிகழ்வுகள் துரிதமானதாகவோ, தடுத்திருக்க முடியாததாகவோ இருக்கவில்லை. மத, அரசியல் மற்றும் பிரிவினைவாத குழு தலைமைகளை உள்ளடக்கிய தெளிவான திட்டத்தின் வெளிப்பாடு. மசூதி இடிக்கப்படும் போது பொதுமக்களின் பார்வையில் இருந்து ஒளிந்து கொண்டு கலவரத்தை இயக்கியவர்களின், வெற்றிகரமாக மூடி மறைக்கப்பட்ட திட்டம் அது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், அறிக்கையில் “சாதுக்கள், ஞானிகள் என்று சொல்லப்படுபவர்கள் உட்பட பல தலைவர்களும், எல்.கே.அத்வானி, எம் எம் ஜோஷி, கே எஸ் சுதர்சன், உமா பாரதி, ஹெச் வி ஷேசாத்ரி, ப்ரமோத் மஹாஜன், அசோக் சிங்கல், பரம்ஹன்ஸ் ராம்சந்தர் தாஸ், வம்தேவ் மஹாராஜ், ஆச்சாரியா கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, வினய் கட்டியார், பேராசிரியர் ரஜிந்தர் சிங், சம்பட் ராய், ஆர்.எஸ்.அக்னிஹோத்ரி ஆகியோரும் நீண்ட விசாரணை நடந்த போதிலும் பலரையும் பாதுகாத்தனர் என்பதும் உண்மை” என்று கூறியுள்ளது.
விசாரணைக் குழு, “ஒத்திகை பார்த்த கதைகளையே சாட்சிகள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள்.குறுக்கு கேள்விகள் கேட்ட போது மறந்து விட்டது, தெரியவில்லை என்று சொன்னார்கள். பாஜகவின் அறிக்கையில் இருக்கும் விவரங்களை கூட நிராகரித்தார்கள், ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். எல்.கே அத்வானி, எம் எம் ஜோஷி, ஏ பி வாஜ்பாயி ஆகியோர் அதிகார நிலைகளுக்கு வரப் போவதாக நினைப்பதனால், அவர்களை பாதுகாக்க சாட்சி சொன்னவர்கள் முயற்சித்தார்கள். கே எஸ் சுதர்சன் மற்றும் வம்தேவ் மஹாராஜ் ஆகிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களையும் அவர்கள் பாதுகாத்தார்கள். அதற்கான காரணம் மிக வெளிப்படையானது. லக்னோவில் இருந்து டெல்லிக்கு பயணித்துக் கொண்டிருந்த ஏ பி வாஜ்பாயியை தவிர இவர்கள் அனைவரும் டிசம்பர் 6 அன்று அயோத்தியாவிலும், ராம் ஜனம்பூமி வளாகத்திற்குள்ளும் இருந்தனர்” என்று லிபர்ஹான் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின் இறுதியில், “அதிகாரத்தால் அல்லது செல்வத்தால் ஈர்க்கப்பட்டு, எந்த தார்மீகத்திற்கும் கட்டுப்படாத , எந்த சித்தாந்தத்தாலும் வழிநடத்தப்படாத, எந்த கொள்கைகளுமே இல்லாத தலைவர்கள் பாஜக, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, சிவ சேனா, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளுக்குள் தோன்றியிருக்கிறார்கள் என்பதற்கும் உறுதியான சாட்சிகளை தரவுகள் காண்பிக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பாஜக தலைமையிலான ஆட்சியின் பங்கு !
அப்போதைய உத்தர பிரதேச முதல்வர், அமைச்சரவை உறுப்பினர்கள், உத்தர பிரதேச அரசு அதிகாரிகள், இடிப்பிற்கு சம்பந்தப்பட்ட அமைப்புகள், நிர்வாகங்கள், தனிநபர்கள் குறித்து, “மோசடியான, பொறுப்பற்ற முறையில் இடிப்பு கையாளப்பட்டது. இந்த மாபெரும் நாட்டின் ஒரு மாநிலத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்யக் கூடிய செயல்ல இது” என்று எழுதப்பட்டிருக்கிறது.
மக்களின் ஆணையை தான் தாங்கள் நிறைவேற்றியதாக சொல்லும் பாஜகவின் கூற்றை மறுத்த லிபர்ஹான் கமிஷன், “உத்திர பிரதேச முதல்வரும், அமைச்சர்களும்,உயர் அதிகாரிகளும் மசூதியை இடிக்க வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், சுறுசுறுப்பாகவும் ஒவ்வொரு கட்டத்தில் பொருளுதவி செய்தார்கள். ஆனால் அதை அதிகாரப்பூர்வ நடவடிக்கையாக்கவில்லை என்பது, தாங்கள் செய்யும் குற்றம், சட்டத்திற்கு எதிரனது , தவறானது என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது என்பதையே காட்டுகிறது. மசூதியை இடிக்க வேண்டும் எனும் அவர்களுடைய மறைமுக நோக்கத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் தெளிவாகவே இருந்தார்கள் எனும் முடிவுக்கு வருவது நியாயமானதே” என்கிறது.
“உபி முதல்வரும், அவர் அமைச்சர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அதிகாரிகளும், மனிதனால்-உருவாக்கப்பட்ட பிரளய சூழல்களை படைத்தனர் – மசூதி இடிப்பதை தவிர வேறு வழி இல்லை என, வேறு எந்த விளைவும் உண்டாகாதபடி அவை அமைந்தது. இரண்டு சமூகங்களுக்கு இடையேயான பிரிவை பெரிதாக்கி, நாடு முழுதும் மக்கள் படுகொலை செய்யப்பட காரணமாய் இருந்தது. சட்ட ரீதியான, அற ரீதியான கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி, அநியாயமாக மசூதி இடிப்பிற்கும், அதைத் தொடர்ந்த அராஜகத்திற்கும் வசதி செய்து கொடுத்து உதவினர்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“சுருக்கமாக, 1992 டிசம்பர் 6 அன்று உத்திர பிரதேசம் சட்டத்தை நிலைநாட்ட விரும்பவில்லை; சட்டத்தை நிலைநாட்ட அம்மாநிலத்தால் முடியவில்லை. உத்திர பிரதேச முதல்வரின் அலுவலகத்தில் இருந்து வந்த சலிப்பு கீழ் நோக்கி சென்று மாநிலத்தின் கீழ் நிலையில் இருக்கும் அதிகாரிகளின் அலுவலகங்கள் வரை சென்றது. வெறுப்பை பரப்பும் இந்துத்துவா வகை ஒன்று மீண்டும் பிறந்திருக்கிறது என்பதை அறிவிக்க, இஸ்லாமின் சின்னமாக இருந்த ஒரே காரணத்தினால் தாங்கள் எதிர்த்த மசூதியை இடித்த கூட்டு சதி நடவடிக்கையில் அரசும் ஈடுபட்டே இருந்தது” என்கிறது அறிக்கை.
கல்யாண் சிங் சமீபத்தில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டியில், “நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். அன்று (டிசம்பர் 6) கலவரத்திற்கு மத்தியில், ஆயோத்தியாவின் துணை மாவட்ட மாஜிஸ்திரேட் இடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. 3.5 லட்சம் கர சேவகர்கள் ஒன்று கூடியிருப்பதாக சொன்னார்கள். மத்திய படைகள் அயோத்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் கர சேவகர்கள் அவர்களை சாகெத் கல்லூரிக்கு வெளியே மறித்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். கர சேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அனுமதி கேட்டார்கள். நான் அனுமதி கொடுக்க மறுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தினால் பல உயிர்கள் பறிபோகும், நாடு முழுவதும் கலவரமும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் வரும் என என்னுடைய ஆணையில் சொன்னேன். இன்று அது கோப்புகளில் இருக்கிறது” என்றார்.
அது குறித்து மேலும் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, பத்திரிக்கையாளரிடம், “ நான் எடுத்த முடிவு குறித்து எனக்கு பெருமையே, நான் ஆட்சியை இழந்திருக்கலாம் ஆனால் கரசேவகர்களை காப்பாற்றினேன். இப்போது யோசிக்கும் போது, மசூதி இடிக்கப்பட்டதனால்தான் இப்போது கோவில் அமைய வழி உண்டானது என நினைக்கிறேன்” என்றார்.
சாட்சியங்களை அழிக்க ஊடகங்கள் மீது தாக்குதல்!
பாபர் மசூதிக்கு இடிப்பிற்கு காரணமான நிகழ்வுகளை குறித்து விவரிக்கும் போது, லிபர்ஹான் குழு, “இந்த பிரச்சாரத்தை இயக்கியவர்களுக்கு அவர்கள் செய்ய நினைப்பது எவ்வாறு சட்டத்திற்கு புறம்பானது, அறமற்றது என்பது குறித்து சந்தேகங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. தேசிய அளவில், சர்வதேச அளவில் மற்றும் இந்து சமுகத்தின் பிரிவிற்கு உள்ளேயே தாங்கள் செய்யப் போவதற்கு எதிராக சீற்றம் உண்டாகும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. சம்பவத்தின் போது கிடைக்கப் பெறும் சாட்சியங்களால் பாஜக, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, சிவ சேனா போன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட வாய்ப்பிருந்தது குறித்தும் அவர்களுக்கு தெரிந்தது.” என்று கூறியுள்ளது.
“எதிர்காலத்தில், இந்த விசாரணை குழு உட்பட, குழுக்களின் விசாரணையை தடுக்க, நடந்த நிகழ்வுகளை குறித்து தெளிவான பதிவை அழிக்க வேண்டும் எனும் பொதுவான திட்டத்தை அந்த இடத்தில் தலைமையில் இருந்தவர்கள் வகுத்திருந்தார்கள். அதன் முதல் கட்டம், அப்பகுதியில் இருந்த ஊடகவியலாளர்களின் அடையாளங்களை கண்டுபிடிப்பது. இந்த பொறுப்பு, தொண்டர்களுக்கு கொடுக்கப்பட்டது, அவர்கள் ஊடகவியலாளர்கள் குறித்த துல்லியமான தகவல்களை சேகரித்தார்கள். ஊடகவியலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் அடையாளங்கள், அவர்களின் இடங்கள் குறித்த விவரங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டன.” என்று லிபர்ஹான் அறிக்கை கூறுகிறது.
“திட்டமிடப்பட்ட தாக்குதல் நடக்கத் தொடங்கியதும், ஊடகவியலாளர்கள் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். கடமையை செய்ய தடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களுடைய பாதுகாப்பு குறித்து ஒரு அச்சம் ஊட்டப்பட்டது. சிறிய அறையில் அடைக்கப்பட்டார்கள், அல்லது துன்புறுத்தப்பட்டார்கள், அல்லது அச்சுறுத்தப்பட்டார்கள். இப்படி செய்வதனால், அவர்கள் உயிர் பிழைப்பதில் தான் கவனம் செலுத்துவார்கள், சேகரிக்க வந்த செய்தி மீது கவனம் செலுத்த மாட்டார்கள் எனும் நோக்கில் இது செய்யப்பட்டது” என்கிறது அறிக்கை.
மேலும், “பத்திரிக்கையாளர்களின் ஞாபகமோ, குறிப்போ கூட மறுக்கப்படலாம் (மறுக்கப்பட்டது). ஆனால், புகைப்படங்களும் வீடியோக்களும் தலைமைக்கு அபாயகரமானதாக இருந்திருக்கும். எனவே, புகைப்பட கலைஞர்கள் கரசேவகர்களினால் கொடுமையான வன்முறைக்கு ஆளானார்கள். மசூதி இடிக்கப்படுவதை புகைப்படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதும் வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டது; அவர்களுடைய உபகரணங்கள் தாக்கப்பட்டன, ஃப்லிம்கள் கேமராவில் இருந்து எடுக்கப்பட்டு நாசம் செய்யப்பட்டன. இதனால் தான் வெகு சில புகைப்படங்களும், வீடியோக்களும் மட்டுமே காணக் கிடைக்கின்றன” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசூதி இடிக்கப்பட்டு 25 வருடங்களுக்கு பிறகு, 2017 டிசம்பரில், தி வயர் செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பொது விவாதம் ஒன்றின் போது, மசூதி இடிப்பு குறித்த செய்திகளை சேகரிப்பதிலும், வெளியிடுவதிலும் அந்நாட்களில் எவ்வளவு அச்சுறுத்தலும், சிரமமும் இருந்தது என்பதை பலர் நினைவு கூர்ந்தனர்.
“கரசேவகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பலர் அன்று அந்த பகுதிக்குள் புகுந்து பத்திரிக்கையாளர்களை தாக்க தொடங்கினர், கேமராக்களை உடைத்தனர். திடீரென ஒரு பெரிய திரளான ஆட்கள் மசூதியை நோக்கி போவதையும், அதற்கு காவல்துறையில் எந்த எதிர்ப்பும் காட்டாமல் நிற்பதையும் பார்த்தேன். காவல்துறை அந்த இடத்தில் இருந்து விலகினார்கள்.. அயோத்தியாவிற்கு செல்லும் பிரதான சாலை எரிகின்ற கார்களால் மறிக்கப்பட்டிருந்தது. நான் மசூதிக்குள் சென்ற போது, என்னைச் சுற்றி நிறைய கரசேவகர்கள் நின்றார்கள், சிலர் என்னை அடிக்க நினைத்தார்கள், சிலரோ பிபிசி உலகளவில் பெரிய நிறுவனம் அடிப்பது நல்லதல்ல என்றார்கள்” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் மார்க் டல்லி. அதைத் தொடர்ந்து அவரும் சில இந்திய பத்திரிக்கையாளர்களும் ஒரு தர்மசாலையில் அடைத்து வைக்கப்பட்டதாக சொல்கிறார். “பிறகு பக்கத்து கோவிலில் இருந்து வந்த ஒரு பூசாரி திறந்துவிட்டார்” என்கிறார் மார்க்.
“அரசின் அதிகாரம் முற்றிலுமாக சரிந்தது தான் அவமானத்திற்குரியது.. சொல்லப்போனால், அந்த நாளில் அரசு என ஒன்று இல்லை” என்பவர் அங்கிருந்த மத்திய படைகள் கலவரம் செய்தவர்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மார்க் கூறுகிறார்.
அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு (AILAJ) இது குறித்து மேல்முறையீடு வேண்டும் என சனிக்கிழமை அன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. “சிபிஐ மேல் முறையீடு பதிவு செய்து, இந்த கலாச்சார அழிப்பு செய்தவர்களை நீதியின் முன் நிறுத்தி, ஜனநாயகத்தில் மீண்டும் சட்டம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க்ளிஃப்டன் டி’ரொஸாரியோ கையொப்பமிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“இந்த தீர்ப்பு, நீதித்துறையின் அடித்தளத்திற்கும் அரசியல் சார்பின்மைக்கும் அடியாக வந்திருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் உந்துதலாக இருக்கும் முறையான இயக்கம், அரசியலமைப்புவாதம் மற்றும் நீதியில் இருந்து நாம் விலகிக் கொண்டிருப்பதையே இது பிரதிபலிக்கிறது” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.