Aran Sei

“அமைச்சரிடம் விருது வாங்க மனசாட்சி அனுமதிக்கவில்லை” – விவசாயிகளுக்கு ஆதரவாக விஞ்ஞானி

புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, வேளாண்மை விஞ்ஞானி முனைவர் வரிந்தர்பால் சிங், மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிடமிருந்து விருது வாங்க மறுத்திருக்கிறார்.

முனைவர் வரிந்தர்பால் சிங் லூதியானாவில் உள்ள பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகத்தில் முதன்மை மண் வேதியலாளராக பணி புரிகிறார். பயிர் ஊட்டச் சத்து தொடர்பான அவரது பங்களிப்புகளுக்காக, அவருக்கு, இந்திய உர சங்கம் விருது ஒன்றை அறிவித்திருந்தது.

விருது வழங்கும் விழா திங்கள் கிழமை டெல்லியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில், ஒன்றிய இரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முனைவர் வரிந்தர்பால் சிங்-ன் பெயர் அழைக்கப்பட்ட போது, மேடைக்கு வந்த அவர், தனது மனசாட்சி விருதை பெற்றுக் கொள்ள இடம் கொடுக்கவில்லை என்று கூறி விருதை வாங்க மறுத்து விட்டார்.

விவசாயிகள் போராட்டம் : ’பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளித்த கவிஞர்

“நாட்டுக்காக நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று நான் விரும்புகிறேன். அரசு நமது அன்பான விவசாயிகளுக்கு செவி மடுக்க வேண்டும். நான் செய்த பணி நமது விவசாயிகளுக்காகவும், நமது நாட்டுக்காகவும்தான். எனவே, இந்த நேரத்தில் இந்த விருதைப் பெறுவது எனக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது” என்று அவர் மேடையில் கூறினார்.

தனக்கு விருது வழங்கிய உரங்கள் கழகத்தின் தலைமை இயக்குனருக்கு, விருதை பெற மறுப்பதற்காக தனது வருத்தங்களை அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம் : பத்ம விபூஷன் விருதைத் திருப்பித் தர முடிவு – பஞ்சாப் முன்னாள் முதல்வர்

பின்னர், முனைவர் வரிந்தர் பால் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். “அமைதியாக போராடும் இந்திய விவசாயிகளுக்கு இந்திய அரசு கொடுத்த தேவையில்லாத வலிகள் காரணமாக, எந்த ஒரு அரசாங்க பிரதிநிதியிடமிருந்தும் இந்த விருதைப் பெறுவதற்கு எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை” என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு முனைவர் வரிந்தர்பால் சிங் எழுதிய கடிதம்
பிரதமருக்கு முனைவர் வரிந்தர்பால் சிங் எழுதிய கடிதம் – Source : Om Thanvi twitter

புதிய சட்டங்களை வன்மையாக கண்டிக்கும் முனைவர் வரிந்தர் பால் சிங், அமைதியான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காக விவசாயிகளை அவர் பாராட்டியுள்ளார். “நமது அன்ன தாதாக்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் பயங்கரவாதிகள் என்று தேசிய ஊடகங்கள் சித்தரிப்பது மனதை உடையச் செய்வதாக உள்ளது” என்றும் அவர் எழுதியுள்ளார்.

“பணி வாழ்வில் முன்னேறுவதற்காக ஒரு விருதை ஏற்றுக் கொள்வது, விவசாயிகளுக்கும் நாட்டுக்கும் துரோகமிளைப்பதாகி விடும்” என்று வரிந்தர்பால் சிங், இரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கடிதம் - Soure : Om Thanvi in Twitter
அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கடிதம் – Soure : Om Thanvi in Twitter

விவசாயிகள் போராட்டம் : அரசு விருதை திருப்பித்தரும் ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங்

பஞ்சாபைச் சேர்ந்த பலர் ஒன்றிய அரசு வழங்கிய விருதுகளை சமீபத்தில் திரும்பி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல் அமைச்சர் பர்காஷ் சிங் பாதல் தமது பத்ப விபூஷண் விருதையும் மாநிலங்கள் அவை உறுப்பினர் சுக்தேவ் திண்ட்சா பத்ம பூஷண் விருதையும் திருப்பி அனுப்பினர். குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் தனது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அனுப்பப் போவதாகக் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்