Aran Sei

‘தனியார் டிவிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற பாஜக’ – கே எஸ் அழகிரி கண்டனம்

பாகிஸ்தானின் பாலக்கோட் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதல் பற்றி வாட்ஸ் அப்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து மத்திய பாஜக அரசு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் அறிக்கை வெளியிட்டுள்ளர். அதில், “கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ரிபப்ளிக் தொலைக்காட்சி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறது. அதில், ‘இன்னும் 3 நாட்களில் பாகிஸ்தான் மீது மிகப்பெரிய தாக்குதலை இந்திய இராணுவம் நிகழ்த்த இருப்பதாக கூறப்பட்டிருந்தது’. இந்தச் செய்தியை ரிபப்ளிக் தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தி டி.ஆர்.பி. ரேட்டிங்கை பலமடங்கு கூட்டி உச்சத்திற்கு கொண்டு சென்றது.” அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

ராணுவ ரகசியங்களை முன் கூட்டியே அறிந்திருந்தாரா அர்னாப்? – டிஆர்பி முறைகேட்டில் வெளிப்பட்ட அதிர்ச்சியளிக்கும் ஆதாரம்

“இதன்மூலம் ரிபப்ளிக் டிவி விளம்பர வருவாயை அள்ளிக் குவித்தது. அந்தத் தொலைக்காட்சி வெளியிட்ட அறிவிப்பின்படி உண்மையாகவே தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் அமைந்திருந்த பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை தாக்கி, தகர்த்தது. அப்போது இந்த தாக்குதலை மிகப்பெரிய வெற்றியாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. கொண்டாடி மகிழ்ந்தது.” என்று கே.எஸ்.அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் தான் பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தும் என்று ரிபப்ளிக் டிவி முன்கூட்டியே கூறிய செய்தியின் பின்னணி தற்போது வாட்ஸ்அப்பில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஆர்பி வழக்கில் வசமாக சிக்கிய அர்னாப் – பாஜக ஆதரவை பயன்படுத்தி காரியம் சாதித்தது அம்பலம்

மேலும், “இந்த 200 பக்கங்கள் அடங்கிய உரையாடல்களை இணைத்து ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, முன்னாள் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா ஆகியோர் மீது டி.ஆர்.பி. மோசடி வழக்கில் துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மும்பை காவல்துறையால் தாஸ்குப்தா கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வரும் வேளையில் இந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளிவந்திருக்கிறது என்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க., தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்காக நாட்டின் பாதுகாப்பு சம்மந்தமான ரகசியங்களை ஒரு தனியார் தொலைக்காட்சியின் சுயலாபத்திற்காக சமரசம் செய்து கொண்டது லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை மட்டுமின்றி, தேசபக்தி உள்ளவர்களின் மனசாட்சியை கடுமையாக பாதித்திருக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அர்னாப் கோசாமி மீது தேசவிரோத குற்றச்சாட்டு – பாகிஸ்தானின் சதி என்று கூறுகிறது ரிபப்ளிக் தொலைகாட்சி

“இத்தகைய தேசவிரோதச் செயலை எவர் செய்திருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டத்தின் முன் தண்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. பாலக்கோட் தாக்குதல் குறித்து கருத்து கூறிய பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இதை பயன்படுத்திக் கொண்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இதன்மூலம் பிரதமர் மோடி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.” என்று பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானின் விமர்சனத்தை  கே.எஸ்.அழகிரி மேற்கோள்காட்டியுள்ளார்.

“கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமாவில் நமது துணை ராணுவப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் உயிரிழந்து 40 வீரர்கள் செய்த உயிர்த் தியாகத்தை வைத்து மத்திய பா.ஜ.க. அரசும், தனியார் தொலைக்காட்சியும் அரசியல் ஆதாயமடைந்ததை எவராலும் மன்னிக்கவே முடியாது. எனவே, பாரபட்சமின்றி நேர்மையாக தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெறுவதற்கு மாறாக மதவாத உணர்வுகளை தூண்டி, வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற நோக்கில் பிரதமர் மோடி செய்த சூழ்ச்சிகளை பாலக்கோட் தாக்குதல் பின்னணி குறித்து வாட்ஸ்அப்பில் வெளிவந்த உரையாடல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்துகிற உரையாடல் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும்  இல்லையெனில் இதனால் ஏற்படுகிற தேசவிரோத குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் ஆளாவதிலிருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கையோடு கூற விரும்புகிறேன் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்