Aran Sei

பீகார் தேர்தல் : ட்ரெண்ட் ஆகும் gobackmodi ஹேஷ்டேக்

பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இதையொட்டி, பிரதமர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ள காங்கிரஸ், ‘பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் தைரியம் மோடிக்கு உள்ளதா?’ என்றும் கேட்டுள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை மேற்பார்வையிட பாட்னாவில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “மீண்டும் பீகாரின் 12 கோடி மக்களை தவறாக வழிநடத்தவும், குழப்பவும், பிரிக்கவும் மோடி முயற்சிப்பார்” என தெரிவித்துள்ளார்.

“பீகாருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பிய அவர், மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஏற்கனவே இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பாஜகவையும் பிரதமரையும் குறிவைத்து கேள்விகளை எழுப்பிய ரன்தீப், அவர்கள் தங்களது முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

“கடந்த தேர்தலில், பாகல்பூரில் ரூ.500 கோடி செலவில் ஒரு மத்திய பல்கலைக்கழகத்தை கட்டுவதற்கான அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது, ஆனால் இதுவரை ஒரு செங்கல் கூட நடப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மோடி ஒரு திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்தை ரூ.1,550 கோடி செலவில் நிறுவப்போவதாக அறிவித்தார், அது தேர்தலுக்குப் பிறகு திடீரென மயமானது என்று ரன்தீப் கூறியுள்ளார்.

“பல்கலைக்கழகம் ஏன் வாரணாசியில் அமைக்கப்பட்டது? பீகாரில் மின்சார உற்பத்தி குறித்து ஏன் பொய் சொன்னீர்கள்? ரூ.10,000 கோடி செலவில் கட்டப்படவிருந்த 1300 மெகாவாட் அனல் மின் நிலையம் என்னவானது?” போன்ற பல கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

ரூ.4,000 கோடி மதிப்புள்ள பீகாரின் ஸ்ரீ ராம்-ஜானகி சாலை, உத்ரப்பிரதேசத்தின் நான்கு வழி சாலை உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல திட்டங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மோடி அரசு ஏன் ‘சியாராமை’ (சீதா ராம்) ஏமாற்றியது? பீகாரில் மோடி ஜி அறிவித்த ரூ.100 கோடி மதிப்பிலான ராமாயண உள்கட்டமைப்பு திட்டம் காணாமல் போனது எங்கே? ராம் மற்றும் சீதாவின் வாழ்க்கை குறித்த அருங்காட்சியகத்தைக் கட்ட மோடி அரசு ஏன் மறுத்துவிட்டது?” என்றும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், தமிழகம் மற்றும் கேரளாவில் ட்ரெண்ட் ஆவத்தைப் போல், பீகார் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் #gobackmodi எனும் ஹாஷ்ட்க் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்