Aran Sei

பணவீக்கம் தான் பாஜகவின் தீபாவளி பரிசு – பிரியங்கா காந்தி

விவசாய சட்டங்கள் மற்றும் பொருட்களின் விலையேற்றம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள். அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பணவீக்கத்தை பாஜக அரசின் ‘தீபாவளி பரிசு’ என்று வர்ணித்துள்ளார்.

விவசாயிகளின் கைகளில் ’பொருளாதார மந்தநிலையை’ ஒப்படைத்ததற்கும், விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவையும் கண்டித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

“விவசாயிகள் மண்டிகளை கேட்டார்கள். ஆனால் பிரதமர் அவர்களுக்கு மந்தநிலையை வழங்கியுள்ளார்.” என்று ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.

மேலும், 2006-ம் ஆண்டு, முதலமைச்சர்  நிதீஷ் குமார் அறிமுகப்படுத்திய விவசாய உற்பத்தி சந்தைக் குழு (ஏபிஎம்சி) சீர்திருத்தங்களை விவசாயிகள் நிராகரித்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை போன்று மண்டிகள் (சந்தை) வேண்டும் என்று கூறியதாக சுட்டிக்காட்டும் அறிக்கை ஒன்றையும் அந்த ட்வீட்டோடு இணைத்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த அறிக்கையை குறிப்பிட்டு, “இது ஏற்கனவே பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 2006-ம் ஆண்டு, பீகாரில் ஏபிஎம்சி சட்டத்தை ரத்து செய்தது, விவசாயிகளுக்கு எந்த பயனையும் அளிக்கவில்லை. இப்போது மோடி அரசு, அதை நாடு முழுவதும் கொண்டு செல்லவுள்ளது. இது விவசாய சீர்திருத்தம் அல்ல. உண்மையில் விவசாய சிதைவு தான்.” என்று விமர்சித்துள்ளார்.

நிதீஷ்குமாரின் அரசை தாக்கியுள்ள முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில், “பீகாரில் நிதீஷ்குமார் அரசின் செயல்பாடு குறித்து நான் கேட்ட மிகச் சிறந்த முழக்கம். காலி ஹாத் (காலியான கைகள்), காலி ஜெப் (காலியான பாக்கெட்), காலி பேட் (காலியான வயிறு). ” என்று கிண்டலடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ’ராமர் கோயில், சட்டப்பிரிவு 370 மற்றும் குடியுரிமை  திருத்த சட்டம் (சிஏஏ)’ போன்றவற்றை சொல்லி வாக்கு கேட்கும், பிரதமரை கண்டித்து ட்வீட்கள் செய்துள்ளார்.

”நீங்கள் பீகாரில் ஒரு வாக்காளராக இருந்திருந்தால், வேலையின்மை,  புதிய தொழில்கள், உணவு தானியங்களுக்கான எம்எஸ்பி, பயிர் காப்பீடு, வெள்ள நிவாரணம், பெண்களின் பாதுகாப்பு போன்றவை பற்றி அவர்கள் உங்களிடம் என்ன சொல்வார்கள்? பதில் : ஒன்றுமில்லை. எதுவும் சொல்லாமல்,  நீங்கள் தேசிய முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறீர்கள் ”என்று அவர் மற்றொரு ட்வீட்டில் கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தி, தனது ட்விட்டரில், ”பாஜக, நமக்கு பயம் கொள்ளவைக்கும் பணவீக்கத்தை அளித்துள்ள நிலையில், விமான நிலையங்களை அதன் முதலாளித்துவ நண்பர்களுக்கு வழங்கியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், ”கடந்த ஒரு ஆண்டு, உருளைக்கிழங்கின் விலை 100 சதவீதமும், வெங்காயத்தின் விலை 50 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு அவர்களின் பொருட்களுக்கான நியாயமான விலை கிடைக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

“பாஜக, மக்களுக்கு கொடுத்த தீபாவளி பரிசு: அச்சுறுத்தும் பணவீக்கம். ஆனால் அதன் முதலாளித்துவ நண்பர்களுக்கு பாஜக அளித்த பரிசு: 6 விமான நிலையங்கள். ”என்று ட்வீட் செய்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “வளர்ச்சி நடக்கிறது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முதலாளித்துவ நண்பர்களுக்கு மட்டுமே அது நடக்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டுடன், அதானி குழுமத்திற்கு மங்களூரு மற்றும் லக்னோ விமான நிலையங்களை ஒப்படைக்கப்பட்டதாக கூறும் பத்திரிகை செய்தியை இணைத்திருந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்