Aran Sei

’காங்கிரஸ் ஆட்சியில் இந்தச் சட்டங்கள் குப்பையில் வீசப்படும்’: ராகுல் காந்தி

credits:timesnownews.com

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் முதல் டெல்லி வரை ’விவசாயிகளைக் காப்போம்’ என்ற ட்ராக்டர் பேரணியை காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

மத்திய அரசு இயற்றியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகச் சட்டம், விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாயச் சேவைகள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இதுகுறித்து பஞ்சாபில் நடந்த நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, “கொரோனா தொற்றுச் சூழலில் உடனடியாக இந்த வேளாண் சட்டங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? சட்டம் இயற்ற வேண்டுமெனில் மக்களவை, மாநிலங்களவையில் ஆலோசனை நடத்தியிருக்கணும்” எனக் கூறியுள்ளார்.

“ `விவசாயிகளுக்காகவே இந்தச் சட்டங்கள்’ எனப் பிரதமர் கூறுகிறார். அப்படியானால், நாடாளுமன்றத்தில் சட்டங்கள் குறித்து வெளிப்படையாகக் கலந்துரையாடல் நடத்தாதது ஏன்?”

“சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சி என்றால் எதற்காக அவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்? பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் எதற்காக ஆர்ப்பாட்டம் செய்கிறார்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் தினம் இந்த மூன்று கருப்புச் சட்டங்களும் கசக்கிக் குப்பையில் வீசப்படும்” எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நிகழ்வில் பேசிய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ”விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டாயமாகக் கிடைக்கும்படி சட்டங்கள் திருத்தி அமைக்கப்படும் வரையில், மத்திய அரசு வெறுமனே உறுதியளிப்பதில் எந்தப் பயனும் இல்லை” எனக் கூறியிருக்கிறார்.

நிகழ்வைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, அமரிந்தர் சிங், சுனில் ஜாக்கர் உள்ளிட்டோர் வேளாண் மசோதாக்களை எதிர்த்து ட்ராக்டரில் பேரணியாகச் சென்றனர்.

இதனிடையே, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கோவா-வில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் “வேளாண் மசோதாக்களை எதிர்த்துப் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை” எனக் கூறியுள்ளார்.

”பஞ்சாப் மாநிலம் தவிர இந்தியாவில் வேறு எங்கும் போராட்டங்கள் நடைபெறவில்லை. அதுவும் மாநில அரசால் நடத்தப்படுவது மட்டுமே. மற்ற இடங்களில் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. உண்மையில், வேளாண் சட்டங்களை விவசாயிகள் வரவேற்கவே செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒரே தேசம், ஒரே சந்தை என்ற இலக்கை அடைவதே மூன்று விவசாயச் சட்டங்களின் நோக்கம்” எனவும் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

“வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொழில்நுட்பம், முதலீடு, உற்பத்தித்திறன் ஆகியவற்றில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்” என ஜவடேகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்