Aran Sei

விவசாயிகள் போராட்டம் : பொது வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் ஆதரவு

Image Credits: PTI

த்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வரும் 8-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குக் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது.

பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி விவசாய சங்கங்கள் மத்திய அரசுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாத நிலையில், டிசம்பர் 8-ம் தேதி, இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்துவதற்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.

இதற்கு ஏற்கெனவே ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடது சாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது, காங்கிரஸ் கட்சியும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ராகுல் காந்தி, டிராக்டர் பேரணிகள், பிரச்சாரங்கள் மற்றும் உழவர்களுடனான பிரயாணங்களில் ஈடுபடுவதன் மூலம் போராடும் விவசாயிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் பவன் ஹேரா, “மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வரும் 8-ம் தேதி நடத்தும் பாரத் பந்த்திற்கு காங்கிரஸ் கட்சி முழுமனதுடன் ஆதரவு தெரிவி்க்கிறது” என்று கூறியுள்ளார்.

“அன்றைய தினம் நாடுமுழுவதும் மாவட்ட தலைநகரங்கள், மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் பிரதிநிதிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள், போராட்டம் வெற்றிகரமாக நடத்த உறுதி செய்வார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

“கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், ஜூன் மாதமே இதை அவசர சட்டமாக மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பொதுமுடக்க காலகட்டத்தில், அவர்களின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு உதவுவதற்காக, இந்த அவசரச் சட்டங்களைக் கொண்டுவருவதில் அரசு தீவிரம் காட்டியது” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“உண்மையிலேயே விவசாயிகளின் நலனில் அக்கறை இருந்தால், இந்த மசோதாக்களைக் கொண்டுவரும் முன்பே அவர்களின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டிருக்கும்” எனவும் காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் பவன் ஹேரா தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்