வங்க தேசத்துக்கு அரசு முறை பயணமாக 2 நாட்கள் வரப் போகும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வங்க தேச தலைநகர் டாக்காவில் நடந்த போராட்டங்களில் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று டாக்கா டிரிபியூன் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
இன்று காலை டாக்கா வரவிருக்கும் மோடி வங்கதேசத்தின் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபூர் ரகுமானின் பிறந்த நாள் விழாவையும், வங்க தேசம் சுதந்திரமடைந்த 50-வது ஆண்டு விழாவையும் கொண்டாடும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
தனிநபர் வருமானம் – இந்தியாவை முந்துகிறது வங்கதேசம் : ஐஎம்எப்
1971-ம் ஆண்டு வங்க தேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனி நாடாக ஆனது. அதன் தலைவர் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் கட்சியான அவாமி லீக் இப்போது ஆட்சியில் உள்ளது. அவரது மகளான ஷேக் ஹசீனா பேகம் பிரதமராக உள்ளார்.
மோடியின் வருகையை எதிர்த்து, டாக்கா மத்திய பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரான நூருல் ஹக் நூர் தலைமையிலான வங்கதேச மாணவர்கள் உரிமைக் குழு என்ற அமைப்பு நேற்று காலையில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். அந்தக் குழுவின் இளைஞர்கள் பிரிவான யுபா அதிகார் பரிஷத் உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மோடி மத பதற்றத்தை தூண்டி விடுவதாகவும், 2002-ல் குஜராத்தில் முஸ்லீம் எதிர்ப்பு வன்முறையைத் தூண்டியதாகவும் போராட்டக் காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.
மேற்கு வங்க தேர்தல் – குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக
வங்கதேசத்தில் இருந்து வரும் முஸ்லீம்களை வெளியேற்றுவதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கொண்டு வருவதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுமார் 2000 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்களின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஊர்வலம் முக்தாங்கன் பகுதியை சுமார் 11 மணி அளவில் அடைந்த போது போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்தியது. அங்கிருந்த மோதிஜீலில் உள்ள ஷல்பா சத்தருக்குச் சென்ற மாணவர்கள் 12 மணியளவில் மோடியின் கொடும்பாவியை எரித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸ் தடியடி நடத்தியது, அதை எதிர்த்து மாணவர்கள் கற்களை வீசி எறிந்தனர். இதில் 7 போலீஸ் காரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகரில் அமைதியை குலைத்ததற்காக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
நூருல் அல் ஹக் நூர், பாசிச அரசாங்கத்தையும், இந்திய ஆதிக்கத்தையும் எதிர்த்து குரல் எழுப்புமாறு நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். இன்று மதியம் 3 மணிக்கு ஷாபாகில், கைது செய்யப்பட்ட செயல்பாட்டாளர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார் என்று டாக்கா டிரிபியூன் தெரிவிக்கிறது.
தலித் செயல்பாட்டாளர் படுகொலை: குற்றவாளிகளை காப்பாற்றும் குஜராத் அரசு – ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு
அதிரடிப் படை போலீஸ் மோடி எதிர்ப்பு நடவடிக்கைகளை கவனமாக கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளது. பங்கபந்துவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போதும், சுதந்திரமடைந்த 50வது கொண்டாட்டத்திலும் எந்த விதமான நாச வேலைகளுக்கும் அபாயம் இல்லை என்று அப்படையின் சட்ட மற்றும் ஊடகக் கிளையின் இயக்குனர் லெப்டின்ட் கர்னல் ஆஷிக் பில்லா கூறியுள்ளார்.
செவ்வாய் அன்று ஆளும் அவாமி லீக் கட்சியின் வங்கதேச சாத்ரா லீக், மோடியின் வருகையை எதிர்த்து டாக்கா பல்கலைக் கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய இடது சாரி மாணவர் அமைப்புகளைத் தாக்கியதில் 2 புகைப்பட பத்திரிகையாளர்கள் உட்பட 25 பேர் காயமடைந்தனர் என்று டாக்க டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.