Aran Sei

கொரோனா கண்காணிப்பு – ‘ஆரோக்ய சேதுவை உருவாக்கியது யார்?’

credits : the indian express

“ஆரோக்கியசேது செயலி உருவாக்கப்பட்டது குறித்து தேசிய தகவல் மையத்திடம் தகவல் இல்லாதது ஏன்?” என்று விளக்கம் கேட்டுமத்திய தகவல் ஆணையர், தேசிய தகவல் மையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று லைவ் லா இணையதளத்தில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

“ஆரோக்ய சேது செயலியின் இணையதளத்தில் “இந்த வலைதளத்தை உருவாக்கியது, பராமரிப்பது, புதுப்பிப்பது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை” என்று குறிப்பிட்டிருக்கும் பொழுது உங்களிடம் அது குறித்து சரியான பதில் இல்லாதது ஏன்?” என தேசிய தகவல் மையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார், தகவல் ஆணையர் வனஜா என் சர்னா.

இந்த ஆண்டு ஏப்ரல்  மாதம்  மத்திய அரசால்  கொரோனா நோய்த்தொற்று பரவலை கண்காணித்து, கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலிதான் ஆரோக்ய  சேது . இதை மத்திய அரசாங்கமே பரப்புரை செய்து மக்களிடம் கொண்டு சேர்த்தது.

புளூடூத் அடிப்படையிலான இந்தச் செயலி, தொலைபேசியை வைத்திருப்பவரின் நடவடிக்கைகளின் அடிப்படையில் தொற்று தொடர்பைக் கண்டறிதல், பாதிப்பு அதிகமான பகுதிகளை வரையறுத்தல்,  கோவிட்-19 பற்றிய உரிய தகவல்களைப் பரப்புதல் ஆகிய நோக்கங்களுக்காக வெளியிடப்பட்டது.

இந்தச் செயலி ஒருவருக்கு கொரோனா வருவதற்கான அபாயத்தை மதிப்பீடு செய்ய உதவுகிறது.கொரோனா நோய்த்தொற்று உள்ளவருடன் நீங்கள் தொடர்பு கொண்டீர்களா என்பதை கண்காணிக்க உதவுகிறது. இந்தச் செயலி தொலைபேசியின் ப்ளூடூத், இடம் (லொகேஷன் ) மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்துகிறது.

இந்தச் செயலியை இதுவரை  16.23  கோடி பேர்  பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஆரோக்கிய சேது செயலியானது, தனியுரிமை பாதுகாப்பு மீறலுக்கும் அரசு கண்காணிப்புக்கும் வழிவகுக்கும் என பல நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து அரசு ஆரோக்கிய சேதுவின் மூல நிரலை வெளியிட்டது.

‘ஆரோக்கிய சேது’ செயலியை வடிவமைத்தது யார் எனக் கேட்டு  டெல்லியைச் சேர்ந்த சவுரவ் தாஸ்  தகவல் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) விண்ணப்பித்திருந்தார். இந்தச் செயலியை வடிவமைத்தது யார் என்பது குறித்த விவரம் தங்களுக்கு ”தெரியாது” என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் தேசிய தகவல் மையம் பதிலளித்திருந்தது.

“https://aarogyasetu.gov.in/ என்ற வலைத்தளம் gov.in என்ற முகவரியை கொண்டிருக்கும் போது உங்களிடம் அது தொடர்பான தகவல் எதுவும் இல்லாதது ஏன் என்பதை எழுத்துபூர்வமாக விளக்கும்படி ஆணையம் தேசிய தகவல் மையத்துக்கு பணிக்கிறது” என்று தகவல் ஆணையரின் ஆணை தெரிவிக்கிறது.

ஆர்டிஐ விண்ணப்பத்திற்கு பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததை கடுமையாக கண்டித்துள்ளது மத்திய தகவல் ஆணையம். “தகவலை தர மறுத்ததற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 20-ன் கீழ் உங்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது” என கேள்வி எழுப்பியுள்ளார் தகவல் ஆணையர்

மத்திய தகவல் ஆணையம் நோட்டீசுக்கு பதிலளித்த தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சகம் இந்தச் செயலி தேசிய தகவல் அமைச்சகம் (என்ஐசி) மற்றும் கல்வி மற்றும் தொழில்  துறையில்  இருக்கும் பல்வேறு ஆளுமைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தச் செயலியை உருவாக்க செயல்பட்டவர்களின் அனைவரின் பெயரும் இந்த ஊடகத்தில் வெளியிடப்பட்டதாக கூறியிருக்கிறது மின்னனு அமைச்சகம். அதில் இருக்கும் அனைத்து தகவல்களும் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

இந்தச் செயலி தந்த தகவலின் அடிப்படையில் கொரோனா சோதனையை மேற்கொண்டவர்களில் ஏறக்குறைய 25 % கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் மக்கள் செல்லும் இடங்களை கண்காணித்தன் மூலம் தொற்று அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்ததால் கொரோனா தொற்றும் அதிகம் பரவும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளதாக பதிலளித்திருக்கிறது அமைச்சகம்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் மத்திய பொது தகவல் அதிகாரிகள் , தேசிய மின்னாளுகை பிரிவு, என்ஐசி ஆகியவற்றை வருகிற நவம்பர் 24-ம் தேதி நேரில் ஆஜராகி இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது சிஐசி.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்