இந்திய எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட சீன ராணுவ வீரரை இந்திய ராணுவம் சீனாவிடம் ஒப்படைத்துள்ளது.
கிழக்கு லடாக்கில் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள டெம்சோக் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த வாங் யா லான் என்ற சீன வீரரை இந்திய ராணுவத்தினர் திங்கட்கிழமை கண்டுபிடித்தனர்.
அவர் தவறுதலாக இந்தியப் பகுதியை நோக்கி வந்து விட்டதாகச் சீன ராணுவம் தரப்பிலிருந்து இந்திய ராணுவத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர், “அக்டோபர் 18-ம் தேதி மாலை சீனா-இந்தியா எல்லைப் பகுதிகளில் தொலைந்துபோன சீன வீரரை இந்தியா விரைவில் ஒப்படைக்கும் என்று சீனா நம்புகிறது.”
”உள்ளூர் மேய்ப்பர்களுக்கு அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஒரு கால்நடையை மீட்டெடுக்க உதவியதால் இது நடந்துள்ளது.” எனத் தெரிவித்ததாக தி இந்து இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம், காணாமல் போன சீன வீரரைக் கண்டுபிடித்து, மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவ உதவி, உணவு மற்றும் குளிரிலிருந்து பாதுகாக்கும் உடைகளை வழங்கியிருந்தது. அந்த வீரரைக் கண்டுபிடித்த தகவலையும் சீன ராணுவத்திடம் தெரிவித்தனர்.
உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு சீன வீரர் ஒப்படைக்கப்படுவாரென இந்தியப் படை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இரு தரப்பு உயரதிகாரிகளும் சந்தித்துக்கொள்ளும் சுஷுல்-மோல்டோ சந்திப்பில், பிடிபட்ட மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த வீரர் சீனப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
PLA soldier identified as Corporal Wang Ya Long apprehended in Demchok sector of Eastern Ladakh after he strayed across LAC. He has been provided medical assistance, food & warm clothes to protect him from vagaries of extreme altitude and harsh climatic conditions: Indian Army
— ANI (@ANI) October 19, 2020
சீனா-இந்தியா இடையேயான எட்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்கான தேதியை இரண்டு நாடுகளும் ஆலோசித்து வருவதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
7-வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் மெய்யான கட்டுப்பாட்டுக் கோடுகுறித்த ஒரு ஆழமான மற்றும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டதாக இரு நாட்டுத் தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
ஜூன் 15 ஆம் தேதி லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.