Aran Sei

சீன எல்லையில் ரோந்து செய்யும் உரிமை : விவாதம்

டாக்கில் இந்திய படைகள் ரோந்து மேற்கொள்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் நேற்று உரையாற்றியுள்ளார்.

இந்திய-சீன எல்லையில் இரு நாடுகளுக்கு இடையில் கடந்த ஐந்து மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது. இந்த தகராறின் உச்சபட்சமாக இந்திய தரப்பில் 20 படைவீரர்கள் ஜூன் 15-ம் தேதி மரணம் அடைந்தனர்.

credit: bbc.com
credit: bbc.com

இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை இந்தியா மற்றும் சீனா மேற்கொண்டன. இரு நாட்டு படைத்தளபதிகளுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தை தொடங்கி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துக்கொண்ட உயர்மட்ட அரசியல் பேச்சுவார்த்தைகள் வரை நிகழ்ந்தன.

செப்டம்பர் 10-ம் தேதி மாஸ்கோவில் நடந்த இந்தியா மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கூட்டத்தில், லடாக்கில் பதற்றநிலையை குறைப்பது மற்றும் இரு நாட்டு படைகளும் உடனடியாக பின்வாங்குவது ஆகிய விஷயங்களில் கருத்தொற்றுமை ஏற்பட்டது. அதன் பிறகும், எல்லையில் இரு நாடுகளுக்கு இடையில் பதற்றநிலை குறையவில்லை என தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு குறிப்பிடுகிறது.

இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்புக்கு பிறகு சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் வெளியிட்ட அறிக்கையில், ”இந்திய-சீன எல்லையில் அண்மையில் நடந்த சம்பவங்களுக்கு சீனா பொறுப்பில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

”எல்லையில் இந்திய படைகள்தாம் அத்துமீறியதாகவும் நிலவுகின்ற ஒப்பந்தங்களை மீறியதாகவும்” அச்செய்தி அறிக்கை குற்றம் சாட்டியது.

credit: dnaindia.com
credit: dnaindia.com

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதி மக்களவையில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், இரு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொண்ட விதிமுறைகளைக் கூட சீனா மீறியுள்ளதாகவும் லடாக்கில் 38,000 சதுர கி.மீ நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நேற்று மாநிலங்களவையில் எல்லை பிரச்சனை பற்றி உரையாற்றிய ராஜ்நாத் சிங், ”இந்தியா தனது நலனுக்காக எத்தகைய உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயங்காது” என்று குறிப்பிட்டார்.

முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, “எல்லையை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன” என்று மாநிலங்கள் அவையில் நேற்று கேள்வி எழுப்பினார். “கல்வான் பள்ளத்தாக்கு இதுவரையில் தகராறுக்கு உள்ளாகாத பகுதியாக இருந்தது. ஆனால், இப்போது அவர்கள் (சீனா) 8 கி.மீ தூரம் வரையில் இந்திய படைகள் ரோந்து செய்வதை தடுத்துள்ளனர்” என்று கூறினார்.

முன்னர் இந்திய படைகள் ஃபிங்கர் 8 பகுதி வரை ரோந்து செய்ய முடிந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், ”உலகத்தில் உள்ள எந்த சக்தியாலும் இந்திய படைகள் ரோந்து மேற்கொள்வதை தடுக்க முடியாது” என்று திட்டவட்டமாக கூறினார். அதேபோல், லடாக்கில் இந்திய படைவீரர்கள் முன்பு ரோந்து மேற்கொண்ட பகுதியில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

”லடாக்கில் இந்தியா இழந்த ஆயிரம் சதுர கி.மீ-ல் 900 சதுர கி.மீ. டெப்சாங் பகுதியை சேர்ந்தது. ஆனால் ராஜ்நாத் சிங் அது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை” என இந்தியன் எக்ஸ்பிரஸின் இணை ஆசிரியரும் முன்னாள் இந்திய ராணுவ வீரருமான சுஷந்த் சிங் தி வையர் இணையத்தளத்தில் கட்டுரை எழுதியுள்ளார்.

மே மாதம் முதலே, டெப்சாங் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து மேற்கொள்ள முடியாதபடிக்கு சீன இராணுவம் தடுத்துள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்