Aran Sei

பாலியல் குற்றவாளியைத் தண்டிக்கப், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியே போதும் – உச்ச நீதிமன்றம்

பாலியல் குற்றவாளியைத் தண்டிக்கப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணின் நம்பத்தகுந்த சாட்சியே போதுமானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

“பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் அந்தக் குற்றத்திற்கு உடந்தையல்ல மாறாக மற்றொருவரின் வெறிக்குப் பலியானவர். ஆகவே, அவருடைய சாட்சியைக் குற்றத்திற்கு உடந்தையானவரின் சாட்சிக்குச் சமமாக சந்தேகத்துடன் பார்க்க வேண்டியதில்லை” என்று அசோக் பூஷன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 13 வயதுக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்குப் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட குந்தையின் தாய், பிறழ் சாட்சி சொன்ன பிறகும், பாதிக்கப்பட்ட குழந்தை சொன்ன சாட்சியின் அடிப்படையில், விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதற்கு முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதி எம்.ஆர்.ஷா, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் முன்னுக்குப் பின் முரணாக இல்லாதபட்சத்தில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியே குற்றத்தை நிரூபிக்கப் போதுமான” என்று கூறியதாக தி இந்து தெரிவிக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் “மிகுந்த கவனத்துடன்” கையாளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியில் உள்ள சிறிய முரண்பாடு, அதைத் தவிர்த்து மிகவும் உறுதியாக உள்ள வழக்கின் திசையை மாற்றிவிடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

“பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று நிரூபிக்க, பாதிக்கப்பட்டவரின் சாட்சியே போதுமானது. அந்தச் சாட்சி, முற்றிலும் நம்பகமான, களங்கமற்ற, நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்” என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்