Aran Sei

’என்னிடம் ரூ.1 லட்சம் உள்ளதாக நிரூபிக்க முடியுமா?’ – சந்திரசேகர் ஆசாத் சவால்

Credits: Live law

ஹத்ராஸ் வழக்கில் வன்முறையைத் தூண்டும் செயல்பாடுகளுக்காக வெளிநாட்டில் இருந்து 100 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சைக்கு அமலாக்கத் துறை மறுப்புக் கூறி விளக்கம் அளித்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்தது குறித்து நாடு முழுவதும்  பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, சாந்திரசேகர ஆசாத் தலைமையிலான பீம் ஆர்மி மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) வன்முறையத் தூண்டும் நோக்கில் செயல்பட்டு வருவதாக உத்தரபிரதேச முன்னாள் டிஜிபி குற்றம் சாட்டியிருந்தார்.

அதற்காக வெளிநாடுகளிலிருந்து 100 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் இயக்குனர் ராகுல் கன்வால் ட்விட்டரில் ”அமலாக்கத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், பீம் ஆர்மி மற்றும் பிஎஃப்ஐ அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். மொரீஷியஸ் தீவிலிருந்து பிஎஃப்ஐ-க்கு 100 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி வருவதும் சரியான தகவல் இல்லை.” என்று அதிகாரிகள் கூறியதாக பதிவிட்டுள்ளார்.

 

ஹத்ரஸ் வழக்கில், சதித்திட்டம் தீட்டுவது, அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபதுவது, மதக் கலவரத்தைத் தூண்டுவது ஆகியவற்றுக்காக உத்தரபிரதேச காவல்துறை 19 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது என தி பிரிண்ட் செய்தி இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இன்று  பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத் ட்விட்டரில் “உத்தர பிரதேசத்தில் மட்டும், நீதிக்காக குரல் கொடுப்பது என்பது சர்வதேச அளவிளான சூழ்ச்சி. பட்டியல் சாதியினருக்கு நீதி கிடைக்கச் செய்வதில் யோகி ஆதித்யனாத் அரசு எவ்வளவு அஞ்சுகிறது என்பது இதில் வெளிப்படையாக புரிகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் “அவர்களைப் பொறுத்தமட்டில், தலித்துகளின் உயிர்கள் அற்பமானது. குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள். வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் யோகி ஆதித்யனாத் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மட்டுமே இவ்வளவும் நடந்தேறுகிறது” என்று சந்திரசேகர ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து, ”என்னிடம் 100 கோடி ரூபாய் இருப்பதாக யோகி ஆதித்யனாத் கூறியிருக்கிறார். இதில் எப்படி வேண்டுமானாலும் விசாரணை செய்யட்டும். என்னிடம் ஒரு லட்ச ரூபாய் இருப்பதாக நிரூபித்தாலும் கூட அரசியலில் இருந்து நான் விலகுகிறேன். சவாலுக்கு யோகி ஆதித்யனாத் தயாரா?” என்று கேள்வியெழுப்பி இருக்கிறார்.

”என் வாழ்க்கையை இந்த சமுதாயத்துக்கே அர்ப்பணித்திருக்கிறேன். என் செலவுகளை இந்த சமுதாயம்தான் பார்த்துக்கொள்கிறது.” என்றும் சந்திரசேகர ஆசாத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்