Aran Sei

புதிய நாடாளுமன்ற கட்டிடம் – திட்ட செலவு 13,450 கோடியாக உயர்வு

Image Credit : thehindu.com

“சென்ட்ரல் விஸ்டா” என்று அழைக்கப்படும் டெல்லியின் அதிகார மையப் பகுதிக்கான மோடி அரசின் திட்டத்துக்கான செலவு மதிப்பீடு ரூ 11,794 கோடியிலிருந்து ரூ 13,450 கோடியாக அதிகரித்துள்ளது என்று தி ஹிந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான, 3 கிலோ மீட்டர் நீளமான சென்ட்ரல் விஸ்டாவை மறுகட்டுமானம் செய்வதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

“இந்தத் திட்டத்துக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்வது வரை, கட்டுமானம், இடிப்பது, மரங்களை பெயர்ப்பது போன்ற வேலைகளை தொடங்குவதில்லை” என்று அரசு இந்த மாதத் தொடக்கத்தில் உறுதிப் பத்திரம் அளித்துள்ளதை தி ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணியைத் தொடங்க கூடாது – உச்ச நீதிமன்றம்

மத்திய பொதுப்பணித்துறை முன்வைத்த இந்த வரைவுத் திட்டத்தில், பொதுவான மத்திய செயலக கட்டிடங்கள், மத்திய கருத்தரங்க மையம், பிரதமருக்கான வீடு, சிறப்புப் பாதுகாப்புப் படை கட்டிடம், துணை குடியரசுத் தலைவருக்கான வளாகம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மொத்த கட்டிட பரப்பளவு 17.21 லட்சம் சதுர மீட்டர், 4.58 லட்சம் சதுரமீட்டர் அளவிலான இப்போதைய கட்டுமானங்கள் இடிக்கப்படும்.

இந்தத் திட்டத்தில், நவம்பர் மாதம் முன்வைத்த திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த, பிரதமர் அலுவலகம் இடம் பெறவில்லை என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

“நாடாளுமன்ற அமர்வில் விவாதங்களை நடத்த தயாராக இல்லாத மோடி அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்காக ரூ 1,000 கோடி செலவழிப்பதற்கான தேவை என்ன?” சிவ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞசய் ரவுத் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் பற்றி விவாதிப்பதை தடுப்பதற்கே நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

சிவ சேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான “சாமனா”வில் எழுதிய கட்டுரையில் அவர் “முந்தைய தலைவர்களின் மரபுகளையும் நினைவுகளையும் அழித்து விட்டு, தனது சொந்த பிம்பத்தில் புதிய கட்டிடங்களை கட்டுவது அளவுக்கதிகமான ஜனநாயகம் என்று யாரும் சொல்வதில்லை” என்று கிண்டலாக கேட்டுள்ளதாக news18 செய்தி தெரிவிக்கிறது.

” இந்தியாவில் அளவுக்கதிகமான ஜனநாயகம் ” – நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த்

“இந்தியாவில் அளவுக்கதிகமான ஜனநாயகம் இருப்பதால், சீர்திருத்தங்களை விரைவில் அமல்படுத்த முடியவில்லை” என்று நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கும் அரசு, 1000 கோடி ரூபாய்க்கும் அதிக செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட அடிக்கல் நாட்டுகிறது.” என்று பொதுநல வழக்கறிஞரும், செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் ட்வீட் செய்துள்ளார்.

“பிரதமருக்கான புதிய வீடு உட்பட ஒரு புதிய சென்ட்ரல் விஸ்டாவுக்காக ரூ 14,000 கோடி செலவழிக்க திட்டமிடுகிறது! துக்ளக்!” என்றும் அவர் கூறியுள்ளார்.

“இது போன்ற நோய்ப் பெருந்தொற்று ஆண்டில், உங்களுக்கு சிறிதளவாவது அக்கறை இருந்தால், உங்களது ரூ 20,000 கோடி செலவிலான, ஜனநாயகத்துக்கு கல்லறை கட்டும் திட்டத்தை ரத்து செய்யுங்கள்” என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் ட்வீட் செய்துள்ளார்.

இந்த நிதியை, “தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நாட்களையும், கூலியையும் உயர்த்த செலவிடுங்கள், பிஎம்கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க பயன்படுத்துங்கள், அல்லது அங்கன்வாடி மற்றும் மதிய உணவுத் திட்டத்தில் செலவிட்டு பசியையும் ஊட்டச் சத்துக் குறைபாட்டையும் போக்குங்கள்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

“மக்கள் மீதும், அறிவியலிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும், உள்கட்டுமானத்திலும் முதலீடு செய்யுங்கள், வெற்று பெருமிதத்துக்கான கட்டிங்களில் அல்ல” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

“தொழிலாளர்கள் உட்பட எல்லா தரப்பினரிடமிருந்தும் அரசு நிதி கேட்டு திரட்டி வருகிறது. பிரதமருக்கான ஆடம்பர வீடு, ஒரு புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டம், அவரது வெளிநாட்டு பயணங்களுக்காக விமானங்கள் ஆகியவற்றுக்கு செலவழிப்பதை பிரதமர் தொடர்கிறார்.” என்று தெலுங்கானா காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.

“இந்தியா எதிர்கொள்ளும் இன்றைய நிலையில் ஒரு அரசின் முன்னுரிமை இதுதானா” என்றும் அது கேள்வி எழுப்பியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்