பொது முடக்கக் காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன்கள்மீதான வட்டி மீது வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதிமொழி பத்திரத்தை நேற்று தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மார்ச மாத இறுதியில் நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்பு (மார்ச் 22) ரிசர்வ் வங்கி கடன் தள்ளிவைப்பு நடவடிக்கையை அறிவித்தது.
The Central Government on Friday informed the Supreme Court of its decision to waive compound interest during the six-month moratorium period, for MSME loans and personal loans up to Rs. 2 crore.
Read Affidavit: https://t.co/RLB8Zj5qZb#SupremeCourt #moratorium pic.twitter.com/8snOUElvVj— Live Law (@LiveLawIndia) October 3, 2020
பொது முடக்கக் காலத்தில் கடனாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் வருமானம் இழப்பு மற்றும் வேலைவாய்ப்பு இழப்புகளைச் சமாளிப்பதற்குக் கடன் தள்ளிவைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு முதல் கட்டமாக மே 31-ம் தேதிவரை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கிக் கடனாளிகளுக்குக் கடன் தள்ளிவைப்பு வாய்ப்பை வழங்கியிருந்தது என்றாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியவர்களின் கடன்கள்மீது கூடுதலாக வட்டியை, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் விதித்திருந்தன.
கடன் தள்ளிவைப்பு வாய்ப்பை எடுத்துக்கொண்டவர்களின் கடன்கள்மீது வட்டி விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை மொத்தமாகச் செப்டம்பர் மாதம் 3-ம் தேதி விசாரணைக்கு உச்சநீதி மன்றம் எடுத்துக்கொண்டது. மார்ச் மாதம் தொடங்கி ஆறு மாதம் காலம்வரையில், கடன்களைச் செலுத்த தவறியவர்களின் கடன்களை வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அத்துடன், மத்திய அரசைக் கடன் வட்டி தள்ளுபடி செய்வது தொடர்பாகப் பரிந்துரைக்க வல்லுநர் குழுவை அமைக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வட்டி மீது வட்டிகளை தள்ளுபடி செய்வது குறித்த முடிவை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுக்க அவகாசம் வழங்கி உச்சநீதி மன்றம் வழக்கை அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதை அடுத்து, நேற்று உச்சநீதி மன்றத்தில் நிதி அமைச்சம் உறுதிமொழி பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதில், 2 கோடிவரையில் கடன் வாங்கியுள்ளவர்களின் கடன்மீதான வட்டி மீது வட்டி தள்ளுபடி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இதைச் சமாளிப்பதற்கு கடன் தள்ளுபடி சுமையை அரசு ஏற்றுக்கொள்வதுதான் ஒரே தீர்வு என்று உறுதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வட்டி மீது வட்டி தள்ளுபடி செய்யும் முடிவு, பல்லாயிரச் சிறு கடனாளிகளுக்கு நன்மை பயக்கும். குறிப்பாக, தனிநபர் கடன்கள், கடன் அட்டை மூலமாகப் பெற்ற கடன்கள், வீட்டுவசதி கடன்கள், கல்விக் கடன்கள் ஆகியவற்றைப் பெற்ற கடனாளிகளுக்கு நன்மை உண்டாக்கும் என்று உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடிவின் காரணமாக, மத்திய அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடிகள் செலவாகும் என்று ஓர் அரசு அதிகாரி கூறியிருப்பதாக லைவ்மிண்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.