Aran Sei

மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை – நடந்தது என்ன?

போராடும் விவசாயிகள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில், விவசாயிகள் முன்மொழிந்த நான்கு கோரிக்கைகளில் இரண்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது

ஆனாலும், இரண்டு முக்கிய கோரிக்கைகளான மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் விவசாய உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு சட்ட உத்தரவாதம் வழங்குதல் ஆகியற்றிற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.

மத்திய அரசோடு பேச்சுவார்த்தைக்குத் தயார் : நான்கு அம்ச கோரிக்கையை முன்மொழியும் விவசாய சங்கங்கள்

நேற்று (டிசம்பர் 30) விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தைக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “நாங்கள் 50 சதவீத பிரச்சினைகளை இந்த பேச்சுவார்த்தையில்  தீர்த்துள்ளோம். பேச்சுவார்த்தை ஒரு நல்ல சூழ்நிலையில் நடத்தப்பட்டு, ஒரு நன்மை தரும் தீர்வுடன் முடிவடைந்துள்ளது.” என்று கூறியுள்ளார்

நரேந்திர சிங் தோமருடன், பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மற்ற அமைச்சர்களான பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் ஆகியோர், விவசாயிகள் நடத்தும் லங்கரில் (உணவு பந்தி) மதிய உணவு உண்டுள்ளனர். பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகான சூழலில், முதன்முறையாக மத்திய அமைச்சர்கள் லங்கரில் கலந்து கொண்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் – ” பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு உண்மைகளை திரிக்கிறது”

“தலைநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் காற்றின் தரம் குறித்த சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படுவது குறித்து விவசாயிகள் சங்கங்கள் அச்சமடைந்துள்ளன.  இந்த அபராதங்களிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு வழங்க  நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். மின்சாரச் சட்டத்தில் செய்துள்ள திருத்தங்கள் தங்களுக்கு தீங்கு தரும் என்று விவசாயிகள் கருதினார்கள். மேலும் நீர்ப்பாசன வசதிகளுக்காக மாநில அரசுகளின் மின் மானியங்களை ரத்து செய்யக்கூடாது என்றும் கோரினார்கள். இது தொடர்பாகவும், நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளோம்.” என்று பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் விளக்கியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

`சட்ட நீக்கம் வேண்டும் : சட்ட திருத்தம் அல்ல’ – பேச்சுவார்த்தை முடிவில் விவசாயிகள்

விவசாயிகள் சங்க தலைவர்களும் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட்ட தீர்வை வரவேற்றுள்ளனர். ஆனால் அதை விட பெரிய கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் இப்போராட்டம் முடிவடையாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மஹிலா விவசாயிகள் ஆதிகர் மஞ்ச் சங்கத்தை சேர்ந்த கவிதா குருகந்தி, “இந்த பேச்சுவார்த்தையில்  சில முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் இது நாங்கள் முன்பே கணித்தது தான்.” என்று கூறியுள்ளதாக தி இந்து சுட்டிக்காட்டியுள்ளது.

’பாஜகவின் பேச்சுவார்த்தை எரியும் நெருப்பில் எண்ணெயாக இருக்கக் கூடாது’ – முத்தரசன்

மேலும், முக்கிய கோரிக்கைகளான மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் விவசாய உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு சட்ட உத்தரவாதம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு எட்டப்படாமல் இருப்பது குறித்து கூறுகையில், “நாங்கள் வேறு மாற்று வழிகளை முன்மொழிய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் ரத்து செய்வதை தவிர வேற வழிகள் எதுவும் இல்லை என்று நாங்கள் தொடர்ந்து கூறினோம். இது எங்கள் முக்கியமான கோரிக்கை. சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்.” என்று கவிதா குருகந்தி கூறியுள்ளார்.

இந்நிலையில், அடுத்த அண்டு ஜனவரி 4 ஆம் தேதி, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை முற்றுகையிட்டு, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், இன்றுடன் 35வது நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்