விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராடும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான எட்டாவது கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்துள்ளது.
கடந்த டிசம்பர் 31-ம் தேதி அரசுடன் நடத்தப்பட்ட 6-ம் கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முன்மொழிந்த நான்கு கோரிக்கைகளில் இரண்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனாலும், இரண்டு முக்கிய கோரிக்கைகளான மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் விவசாய உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு சட்ட உத்தரவாதம் வழங்குதல் ஆகியற்றிற்கு தீர்வு எட்டப்படாமல் இருந்தது.
இந்த இரண்டு கோரிக்கை குறித்தும் கடந்த 3 ஆம் தேதி நடந்த ஏழாவது கட்ட பேச்சு வார்த்தையில் விவாதிக்கப்பட்டு தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில், இன்று (ஜனவரி 8) விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் எட்டாவது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. இருதரப்பிற்கும் இடையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால், இதுவும் தோல்வியில் முடிந்தது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
பேச்சுவார்த்தையின்போது, நாடு முழுவதும் உள்ள பிற மாநில விவசாயிகளில் பெரும் பகுதியினரால் இந்த சட்டங்கள் வரவேற்கப்படுகிறது என்றும், ஒட்டுமொத்த நாட்டின் நலன்களைப் பற்றி விவசாய சங்கங்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அரசு தரப்பி வலியுறுத்தப்பட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
“விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் திரும்ப மாட்டார்கள். மீண்டும் 15 ஆம் தேதி வருவோம். நாங்கள் எங்கும் செல்லமாட்டோம். சட்ட திருத்தங்கள் குறித்து பேச மத்திய அரசு விரும்பியது. சட்டத்தில் உள்ள உட்பிரிவுகள் வாரியாக பேச்சு வார்த்தைகள் நடத்த நாங்கள் விரும்பவில்லை. புதிய விவசாய சட்டங்களை முழுமையாக ரத்து செய்யவே நாங்கள் விரும்புகிறோம்.” என்று பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கைட், ஏஎன்ஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை – நடந்தது என்ன?
இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட சில விவசாயிகள், ’நாங்கள் வெற்றி பெறுவோம் அல்லது மரணமடைவோம்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை எடுத்து வந்துள்ளனர். ஒன்பதாவது கட்ட பேச்சு வார்த்தையை, வரும் 15 ம் தேதியில் நடத்த இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.
ஜனவரி 26 ஆம் தேதிக்குள் மூன்று விவசாயச் சட்டங்களும் திரும்ப பெறப்படவில்லை எனில், குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் இடத்திற்கு இந்தியா முழுமையிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வருகை புரிவார்கள் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.