சிபிஐ விசாரணை நடத்துவதற்கு மாநில அரசின் ஒப்புதல் கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாநில அரசின் உரிய ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு அம்மாநிலம் சம்பந்தப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், பஞ்சாப் மற்றும் மிசோரம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் சிபிஐ விசாரணைக்கான பொது ஒப்புதலை ரத்துசெய்துள்ளது.
சிபிஐ விசாரணை மூலம் மத்திய அரசு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராகச் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்த எட்டு மாநிலங்களும் பொது ஒப்புதலை ரத்து செய்துள்ளன என்று தி வயர் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
“அரசியலமைப்புச் சட்டப்படி, சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் அனுமதி என்பது கட்டாயமான ஒன்று. மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது.” என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளதாகவும் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவின் விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் இதனைக் கூறியுள்ளது.
வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்கும் முன்னர் மாநில அரசின் அனுமதி கோரவில்லை என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிபதிகள் கான்வில்கார் மற்றும் கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சிபிஐ விசாரணைக்குப் பொது ஒப்புதல் வழங்கியுள்ளது என்ற காரணத்தை முன்வைத்து நீதிபதிகள் அமர்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இரண்டு அரசு அதிகாரிகள் உட்பட பலர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்கள். தங்களுக்கு எதிரான வழக்குக்குப் பொது ஒப்புதல் போதாது, சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கூறியதை நீதிமன்றம் மறுத்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.