Aran Sei

ரூ.826 கோடி மோசடி: ஜெகன்மோகன் கட்சி எம்.பி மீது வழக்கு

Image Credits: Deccan Herald

ஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பிடமிருந்து ரூ.826 கோடி மோசடி செய்ததாகக் கூறி ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சிபி (யுவஜன ஸ்ராமிகா ரைது காங்கிரஸ் கட்சி) எம்பி கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு, அவரது மனைவி ரமா தேவி மற்றும் ஒன்பது பேர் மீது, மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்துள்ளதாக ‘தி இந்து’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

“ஹைதராபாத், மும்பை மற்றும் ஆந்திராவின் மேற்கு கோதாவரியில் உள்ள 11 இடங்களில், இந்த்-பரத் தெர்மல் பவர் லிமிடெட், தெலங்கானாவின் செகந்திராபாத்தில் அமைந்துள்ள கடன் வாங்கும் நிறுவனம் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிற நபர்களின் இடங்களில் சிபிஐ தேடுதல் நடவடிக்கை நடத்தியுள்ளது.” என்று சிபிஐ அதிகாரி கூறியுள்ளார். ராஜு மற்றும் அவரது மனைவியும் இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்தனர் என்று ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

2014 முதல் 2018 வரை நிதிகள் திசைமாற்றி, முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக வங்கிகள் குற்றம் சாட்டியுள்ளன. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் பிற இயக்குநர்களும் உள்ளனர்.

பிற வங்கிகள் அத்தகைய நடவடிக்கை எடுத்த பிறகு தானும் 2019-ம் ஆண்டு நவம்பரில் கடன் பெற்ற வங்கிக் கணக்கை மோசடி கணக்கு என்று அறிவித்ததாக கூறியுள்ளது.

நிறுவனத்தின் இயக்குநர்கள் கடன் வசதிக பெறுவதற்காக டெல்லியில் உள்ள வங்கியின் கார்ப்பரேட் கிளையை அணுகியிருந்தனர்.

முன்னர் இந்த்-பரத் பவர் (கார்வார்) லிமிடெட் என்று அழைக்கப்பட்ட இந்த்-பரத் தெர்மல் பவர் லிமிடெட், ஆரம்பத்தில், கர்நாடகாவில் 300 மெகாவாட் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க இருந்தது. இருப்பினும், சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, இது திட்டத்தைத் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள சாமினாதன் மற்றும் ஓட்டப்பிடாரம் கிராமங்களுக்கு மாற்றியதாக ‘தி இந்து’ குறிப்பிடுகிறது.

இத்திட்டத்துக்கு நிதி அளிக்கும் வகையில், முக்கியக் கடனாக ரூ.941.80 கோடியும், துணைக் கடனாக ரூ.62.80 கோடியும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த நிறுவனம், ஏப்ரல் 2014-ல் சுழல் மூலதன தேவைக்காக ரூ.300 கோடி கடன் வழங்கக் கோரியிருந்தது.

நிறுவனத்தின் கணக்குகளில் தொடர்ச்சியான முறைகேடுகள் இருந்தன. அவை கடன் கொடுத்த வங்கிகளால் நிறுவனத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன, என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளது.

இருப்பினும், இந்த முறைகேடுகளை சரிசெய்ய எந்தவொரு திருத்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  கடன் கணக்குகள் வாராக் கடன்களாக மாறின. வங்கிகள் இதைத் தணிக்கை செய்தபோது பல நிதி முறைகேடுகளைக் கண்டறிந்தன. கடன் வழங்கிய வங்கிக் கணக்குகள் வழியாக விற்பனை வருமானத்தை பெறாததன் மூலம் இந்த நிறுவனம் நிபந்தனைகளை மீறியது.

கடனளிப்பவர்களுக்கு நஷ்டம் விளைவிக்கும் வகையில், கணக்கியல் உள்ளீடுகள் மூலம், தொடர்புடைய தரப்பினருக்குச் சில பணப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டன. சோதனைக் காலத்தில், இந்த நிறுவனம் தொடர்புடைய தரப்புக்கு ரூ.267 கோடியைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

உபரியான ரூ.140 கோடியைத் தவிர, சம்பந்தமில்லாத நிறுவனங்களிலிருந்து வசூலிக்கக்கூடிய ரூ.41 கோடி தொகை கூட சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் புத்தக உள்ளீடுகள் மூலம் மாற்றப்பட்டிருக்கிறது என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக ‘தி இந்து‘ செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்