Aran Sei

பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்தவரை ஒதுக்கி வைத்த கிராம மக்கள்

ட்டியலின மக்கள், பழங்குடி மக்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதி மக்களுக்கு முடி திருத்தம் செய்ததால் தன் கிராமத்தினர் தன்னை ஒதுக்கி வைத்திருப்பதாக கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த ஒரு முடி திருத்துபவர் சொல்லியிருக்கிறார். உயர் சாதி நபர்களின் விதிமுறைகளை மீறியதற்கு இவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

மைசூரின் நஞ்சன்குண்ட் தாலுகாவின் ஹல்லாரே கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன் ஷெட்டி என்பவரின் ‘ஷெட்டி சலூனிற்கு’ மஹாதேவ் நாயக் என்பவன் ஒரு கூட்டத்தோடு வந்து, இனிமேல் தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு முடி திருத்தம் செய்யக் கூடாது என கட்டளையிட்டதில் இருந்து தான் பிரச்சினை தொடங்கியது. ஒடுக்கப்பட்ட பின்புலங்களில் இருந்து வருபவர்களுக்கு ஷேவிங் செய்ய 200 ரூபாயும், முடி வெட்ட் 300 ரூபாயும் கேட்க வேண்டும் எனவும் அவர் சொல்லியிருக்கிறார். முடி வெட்ட 80 ரூபாயும், ஷேவிங்கிற்கு 60 ரூபாயும் தான் வாங்க முடியும், எல்லோருக்கும் ஒரு கணக்கு தான் என பதில் சொல்லியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ஷெட்டி காவல்துறையிடம் சென்றிருக்கிறார். நாயக் மற்றும் அவன் ஆட்களை காவல்துறையினர் எச்சரித்துவிட்டு சென்றனர். ஆனால், அதற்கு பிறகு தான் நிலைமை மோசமாகியிருக்கிறது.

நாயக்கும் அவன் ஆட்களும் ஷெட்டியை புறக்கணிக்க வேண்டும் என கிராம மக்களிடம் கேட்டுக் கொண்டது மட்டுமல்லாமல், ஷெட்டியின் 21 வயது மகனை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று, மது அருந்த வைத்து, பிறகு நிர்வாணமாக வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

ஷெட்டி மறுபடியும் காவல் நிலையம் போக முடிவெடுத்த போது, அவருடைய மகனின் வீடியோவை சமூக வலைதளங்களில் பரவ விடுவதாக பயமுறுத்தியிருக்கின்றனர். இதற்கு பயந்து ஷெட்டி காவல்துறையில் புகார் அளிக்கவில்லை.

ஷெட்டி இதில் காவல்துறை தலையிட வேண்டும் என கேட்டுக் கொண்டாலும் வழக்கு பதியவில்லை என நஞ்சன்குண்ட் கிராம காவல் நிலைய அதிகாரிகள் சொல்கின்றனர். “மஹாதேவ் நாயக் மல்லிகார்ஜூன் மகனை எடுத்த வீடியோவை எங்களுக்கு காண்பித்தான். மல்லிகார்ஜூன் புகார் அளிக்காததால் இரண்டு பேருக்கு அறிவுரை சொல்லி அனுப்பினோம்” என்கின்றனர்.

சமூக புறக்கணிப்பு தொடரும் போதும் காவல்துறை எதுவும் செய்யவில்லை என ஷெட்டி சொல்கிறார். நஞ்சன்குண்ட் தாசில்தாரை அணுகிய பிறகும் எந்த உதவியும் வரவில்லை. வேறு வழியே இல்லாததால், ஊடகத்திடம் இந்த விஷயத்தை கொண்டு வந்திருக்கிறார்.
ஷெட்டி, தாசில்தார் மஹேஷ் குமாரிடம் சமர்பித்த புகாரைப் பற்றிக் கேட்ட போது, அவரே நேரடியாக கிராமத்திற்கு சென்று இந்த விஷயத்தை விசாரிக்கப் போவதாக சொன்னார்.

“எதாவது தவறு நடந்திருப்பதற்கான சாட்சியங்கள் இருந்தால், காவல்துறையினர் சுயமாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்லி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்” என கூறியிருக்கிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்