குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமலாகும் என்றும் அதற்கான விதிமுறைகளை வகுக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடந்த கூட்டத்தில் கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றிய நட்டா:
“மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுப் பிரிவினை, வகுப்புவாத அரசியலை நடத்துகிறது. அரசியல் நலன் பார்த்து மக்களுக்குச் சேவை செய்கிறது. ஆனால், பாஜக அனைத்து மக்களுக்கும் சேர்த்துப் பணியாற்றுகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் அனைவரும் பயன்பெறுவார்கள். இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதை நடைமுறைப்படுத்த உறுதியாக இருக்கிறோம்.” என்று அவர் பேசினார்.
சிஏஏ தொடர்பான விதிகளை வடிவமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் மூன்று மாத கால நீட்டிப்பைக் கோரியதாக 2020 ஆகஸ்ட் தொடக்கத்தில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ‘தி இந்து‘ செய்தி தெரிவிக்கிறது. இந்த மாநிலத்தில் சிஏஏவை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பது மட்டுமல்லாமல், இச்சட்டத்திற்கு எதிரான பல சட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
“கொரோனா தோற்று பரவல் காரணமாகவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது சூழல் முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆதலால் சிஏஏவை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.” என்று நட்டா கூறியிருக்கிறார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. பல்வேறு மாநிலங்களில் போராட்டம், கலவரம் வெடித்தது. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மக்கள் போராட்டம் நடத்தினர். கரோனா காரணமாக அந்தப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
சமீபத்தில், டைம்ஸ் இதழின், உலகின் செல்வாக்கு மிக்க நூறு மனிதர்கள் பட்டியலில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிவந்த பில்கிஸ் எனும் 82 வயது மூதாட்டி இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
’சிஏஏ போராட்டம் தொடரும்’: டைம்ஸ் இதழில் இடம்பெற்ற பில்கிஸ் பாட்டி
அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என நம்புகிறோம். திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் வன்முறை, கமிஷன் போன்றவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்று பாஜக தலைவர் நட்டா கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நன்மைகள் மாநிலத்தின் ஏழை மக்களைச் சென்றடைவதிலிருந்து மம்தா தீதி (அக்கா) நிறுத்திவிட்டார். துரதிர்ஷ்டவசமாக, மேற்கு வங்கத்தில் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனாவை (பிரதமரின் விவசாய நிதி) மம்தா பானர்ஜி அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
வங்காளத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இந்தத் திட்டத்தை வழங்குவோம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். ஏப்ரல் மாதத்தில் நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், நாங்கள் ஒரு மாதத்தில் திட்டங்களைச் செயல்படுத்துவோம்,” என்று கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா “சிஏஏ விரைவில் அமல்படுத்தப்படும் என்று ஜேபி நட்டா மேற்கு வங்கத்தில் கூறியிருக்கிறார். எங்கள் ஆவணங்களைக் காட்டுவதற்கு முன்பு உங்களுக்கு தெருக்கதவைக் காட்டி விடுவோம்” என்று ட்வீட் செய்திருக்கிறார்
JP Nadda in WB – says CAA to be implemented soon
Listen up @BJP – we will show you the door long before we show you our papers!
— Mahua Moitra (@MahuaMoitra) October 19, 2020
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.