Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டம் – யோகி ஆதித்யநாத்தைக் கண்டித்த நிதீஷ் குமார்

பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக சார்பில் பிரச்சாரம் செய்து வரும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிப் பேசியதை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கண்டித்திருக்கிறார் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டிருக்கிறது.

“இந்த மாதிரி வெறுப்புப் பிரச்சாரத்தை யார் செய்கிறார்கள்? இது போன்ற முட்டாள் தனங்களை யார் பேசுகிறார்கள்? யார் மக்களை வெளியே துரத்துவார்கள்? அதைச் செய்ய யாருக்கும் தைரியமில்லை. எல்லோருமே இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொருவருமே இந்தியர்தான்” என்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் முழங்கினார், நிதீஷ் குமார்.

புதன்கிழமையன்று பீகாரின் கத்திஹாரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிப் பேசியிருந்தார்.

“…. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சித்ரவதை செய்யப்படும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். நாட்டின் பாதுகாப்பை உடைக்கும் எந்த ஒரு ஊடுருவலாளரும் நாட்டிலிருந்து துரத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும்.” என்று அவர் பேசியிருந்ததாக என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

`சிஏஏ விரைவில் அமலாகும்’ – பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தகவல்

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய நிதீஷ் குமார் “நல்லிணக்கம், ஒற்றுமை, சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையில் நாம் பணியாற்றுகிறோம், அப்போதுதான் முன்னேற்றம் ஏற்படும். இவர்களைப் போன்றவர்கள் மக்களைப் பிளவுபடுத்துவதில் மட்டுமே ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு வேறு வேலையில்லை” என்று விமர்சனம் செய்தார்.

மேலும், “எல்லோரையும் இணைத்துச் செல்வது நமது கடமை ஆகும். அதுதான் நமது கலாச்சாரமும். அப்போதுதான் பீகார் முன்னேறும்” என்று அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

யோகி ஆதித்யநாத்துக்கு நிதீஷ் குமார் கொடுத்திருக்கும் கோபமான பதிலடி, பாஜகவுடன் அவருக்கு இருக்கும் சித்தாந்த முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என்று என்டிடிவி கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அரசியல் செயல்பாட்டாளர்கள், எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பெண்கள் என நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். தேசியக் குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்து, இந்தச் சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களைக் குறிவைக்கப் பயன்படுத்தப்படும் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

“தேசியக் குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்துக்கு மட்டுமானது. அதை நாடு முழுவதும் அமல்படுத்துவது தேவையற்றது” என்று நிதீஷ் குமார் ஜனவரி மாதம் கருத்து தெரிவித்திருந்ததை என்டிடிவி செய்தி சுட்டிக் காட்டியுள்ளது.

’சிஏஏ போராட்டம் தொடரும்’: டைம்ஸ் இதழில் இடம்பெற்ற பில்கிஸ் பாட்டி

அரசியல் சட்டப் பிரிவு 370-ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகளை ரத்து செய்யும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கையையும் நிதீஷ் குமார் எதிர்த்தார். அவரது கட்சி தொடக்கத்தில் அந்த நடவடிக்கையை நாடாளுமன்றத்தில் எதிர்த்தது என்றும், பின்னர் அது ஏற்கனவே சட்டமாகி விட்டது என்று சொல்லி நிதீஷ் தனது எதிர்ப்பிலிருந்து பின் வாங்கி விட்டதாகவும் என்டிடிவி தெரிவிக்கிறது.

காஷ்மீர்: உரிமைகள் மறுக்கப்பட்டதன் நினைவு நாள் -ஆகஸ்ட் 5

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்