Aran Sei

`குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்’ – மேற்கு வங்க பாஜக அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) விரைவில் செயல்படுத்தப்படும் என்று பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் நார்த் 24 பர்கானாஸ் (North 24 Parganas) மாவட்டத்தில் பின்தங்கிய மாதுவா சமூகத்தினர் அதிகமாக வசிக்கின்றனர். மேற்கு வங்காளப் பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்ஜியா அம்மாவட்டத்தின் தாகூர்நகர்ப் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், மத்திய அரசு முன்சென்று அதைச் செயல்படுத்தும்” என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், சர்ச்சைக்குரிய தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் (என்ஆர்சி) குறித்து அவர் எதுவும் பேசவில்லை.

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் இயற்றிய அலமேடா கவுன்டி – அமெரிக்காவின் 7-வது நகர மன்றம்

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சமீபத்தில், மேற்கு வங்கத்திற்கு வந்திருந்த போது, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் வகுக்கப்படுவதாகக் கூறினார். அதன் பின்னர் குடியுரிமை திருத்தச் சட்டம் முழு வீச்சுடன் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டைக் குறித்து ஒரு கேள்வி எழுப்பிய போது, “நாம் இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்துவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று அவர் பதிலளித்துள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனு தாக்கூர், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது தாக்கூர் நகர்ப் பயணத்தின்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்துவதைக் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார். சாந்தனு தாக்கூர் மாதுவா சமூகத்தைச் சேர்ந்தவர்.

மதுவாக்கள், பிரிவினையின்போதும் அதற்குப் பின்னும் பங்களாதேஷிலிருந்து குடிபெயர்ந்த தாழ்த்தப்பட்ட இந்து அகதிகள். இவர்களுக்குத் தற்போது மேற்கு வங்கத்தில் கணிசமான மக்கள் தொகை உள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்