Aran Sei

” விவசாய போராட்ட பிரச்சினையை இந்தியத் தரப்பிடம் எழுப்புக ” – போரிஸ் ஜான்சனிடம் வலியுறுத்தும் பிரிட்டிஷ் எம்பிக்கள்

Image Credit : thewire.in

ந்திய விவசாயிகள் போராட்டம் பற்றிய தமது கவலைகளை இந்தியத் தரப்புக்கு தெரிவிக்குமாறு ஐக்கிய முடியரசு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அனுப்புவதற்கான கடிதத்தை பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாரித்து வருகின்றனர்.

விவசாய விளைபொருட்கள் வர்த்தம், ஒப்பந்த விவசாயம், அத்தியாவசிய பொருட்களை சேர்த்து வைத்தல் ஆகியவை தொடர்பான ஒன்றிய அரசின் 3 விவசாய சீர்திருத்த சட்டங்களையும், மின்சார மசோதாவையும் எதிர்த்து இலட்சக்கணக்கான விவசாயிகள் இந்தியத் தலைநகர் டெல்லியின் எல்லையில் கடந்த ஒரு மாதமாக போராடி வருகின்றனர்.

பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்ஜீத் சிங் தேசி இது தொடர்பான வீடியோ ஒன்றை ட்வீட் செய்துள்ளார்.

“(பிரதமர்) போரிஸ் ஜான்சன் அடுத்த மாதம் இந்தியாவுக்குச் செல்வதற்கான ஒப்பந்தமும் நடைமுறைகளும் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், இந்திய விவசாயகள் போராட்டம் பற்றிய பிரதமரது புரிதலை தெளிவுபடுத்துமாறும், இந்த பெரிய பிரச்சனையை விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கையை இந்திய பிரதமர் மோடியிடம் எழுப்புமாறும் ஜான்சனிடம் கோரும் கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் 9-ம் தேதி, தன்மன்ஜீத் சிங் ஐக்கிய முடியரசு நாடாளுமன்றத்தில் இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றிய கேள்வியை, பிரதமருக்கான வாராந்திர கேள்வி பதில் நேரத்தின் போது எழுப்பியிருந்தார். ஆனால், கேள்வியை தவறாக புரிந்து கொண்ட போரிஸ் ஜான்சன் இந்தியா – பாகிஸ்தான் தகராறு பற்றி கருத்து சொல்லியிருந்தார்.

‘எங்கள் குடியரசு தின விழாவிற்கு வர வேண்டாம்’ – பிரிட்டன் பிரதமருக்கு விவசாயிகள் கோரிக்கை

முன்னதாக, ஐக்கிய முடியரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் இந்தியாவுக்குச் செல்லும் போது, தன்மன்ஜீத் சிங் முன்முயற்சி எடுத்து விவசாயிகள் பிரச்சனையை இந்திய அரசிடம் எழுப்புமாறு கேட்கும் 36 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதத்தை அனுப்பியிருந்தார்.

இந்திய வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என்றாலும், ஐக்கிய முடியரசில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டங்கள் அக்கறையுடன் கவனித்து வருவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது என்று தன்மன்ஜீத் சிங் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சனையில் அக்கறை கொண்ட ஐக்கிய முடியரசின் குடிமக்கள் அனைவரும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு கடிதத்தில் கையொப்பமிடுமாறு வலியுறுத்துமாறு தன்மன்ஜீத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில், இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டாம் என்று ஐக்கிய முடியரசு பிரதமரை வலியுறுத்தும்படி பஞ்சாப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தப் போவதாக போராடும் விவசாய சங்கத் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.

thewire.in தளத்தில் வெளியான செய்தியை தழுவி எழுதப்பட்டது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்