Aran Sei

“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்

Credits Scroll

உத்தர பிரதேச மாநிலத்தின் ‘பசு வதை தடுப்புச் சட்டம் 2020’ அப்பாவி மக்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

பசுவைக் கொன்று மாட்டிறைச்சி விற்பனை செய்ததாக ரஹ்முதீன்  என்பவர் பசு வதை தடுப்புச் சட்டத்தின் 3, 5 மற்றும் 8 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலம் சிறை படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

ரஹ்முதீனின் மனுவை விசாரித்த நீதிபதி சிதார்த், சம்மந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் எந்த குற்றங்களும் குறிப்பிடப்படாமல் இருப்பதையும், குற்றம் சாட்டப்படுள்ள நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளதாக லைவ் லா செய்தி வெளியிடுள்ளது.

மனுவை விசாரிக்கையில் நீதிபதி, “எந்த இறைச்சி கைப்பற்றப்பட்டாலும், முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல். எல்லாமே மாட்டிறைச்சி என்று காட்டப்படுகிறது.” என்று கூறியுள்ளார்.

“பெரும்பாலான வழக்குகளில் கேள்விக்குள்ளாகும் இறைச்சி தடயவியல் சோதனைக்குக் கூட அனுப்பப்படுவதில்லை. இந்தச் சட்டத்தால் சில நேரங்களில், நிகழ்த்தப்படாத குற்றத்துக்காக குற்றம் சாட்டப்பட்டவர் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனைக்கு உத்தரவிடப்படலாம்.” என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பசுக்கள் மீட்கப்படுவதாக கூறப்படுகையில், மீட்கப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை எனவும், மீட்கப்படும் பசுக்கள் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறித்து யாருக்கும் எதுவும் தெரிவதில்லை என்பதையும் வழக்கை விசாரித்த நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் அவர், “கறவை அல்லாத மற்றும் வயதான பசுக்கள் கோசாலைகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவை சாலைகளில் அலைந்து திரிகின்றன. அதே போல, பசுக்கள் வைத்திருப்போரும், கறவை நின்ற பிறகு பசுக்களை பராமரிக்காமல் விட்டுவிடுவதால் அவை குப்பையைத் தின்றும், கழிவு நீரைப் பருகியும் சாலைகளில் அலைந்து திரிகின்றன.” என குற்றம் சாட்டியுள்ளார்.

சாலைகளில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, அதனால் நிறைய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

தொடர்ந்து ”கிராமப்புறங்களில் பசுக்களுக்கு உணவளித்து பராமரிக்க முடியாதவர்கள் அவற்றை கைவிட்டுவிடுகிறார்கள். காவல்துறையை மீறி அந்தப் பசுக்களை மாநிலத்துக்கு வெளியே கொண்டு செல்வதும் இயலாத காரியமாக இருக்கிறது. மேய்ச்சல் நிலங்கள் எதுவும் இல்லாததால் பசுக்கள் பயிர்களை மேய்கிறது. இதனால் விவசாயிகள் இந்தப் பசுக்களிடம் இருந்து பயிர்களை காக்க வேண்டியுள்ளது.” என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

பராமரிக்க முடியாமல் கைவிடப்படும் பசுக்கள் சாலைகளிலும், வயல்களிலும் மேய்வதால் சமூகத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கூறியதோடு, இதுபோன்ற பசுக்களை பராமரிக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதி சிதார்த் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்