Aran Sei

பொலிவியா தேர்தல் – ‘ ஈவோ மொரேல்சுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு தோற்கடிக்கப்பட்டது ‘

ஈவொ மோரேல்ஸ்

பொலிவியா தேர்தலில ஈவோ மொரேல்சின் சோசலிஸ்ட் கட்சி வெற்றி

வோ மொரேல்சின் சோசலிசத்துக்கான இயக்கம் என்ற கட்சி பொலிவியா நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்று கார்டியன் நாளிதழ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

சோசலிசத்துக்கான இயக்கம் கட்சியின் வேட்பாளரான லூயி ஆர்சே பதிவான வாக்குகளில் 50%-க்கும் மேல் பெற்றுள்ளார், அவருடன் போட்டி போட்ட கார்லோஸ் மேசா என்ற வலதுசாரி கட்சி வேட்பாளர் 30% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு ஒன்றின்படி ஆர்சே முக்கிய நகரங்களில் 60%-க்கும் அதிகமான வாக்குகளை வென்றிருக்கிறார். இந்த முடிவுகள் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படுவதற்கு பல நாட்கள் பிடிக்கலாம். திங்கள் கிழமை நிலவரப்படி எண்ணப்பட்ட 20% வாக்குகளில் 36% வாக்குகள் ஆர்சேவுக்கும், 43% வாக்குகள் மேசாவுக்கும் பதிவாகியிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வெற்றி பெறும் லூயி ஆர்சே
வெற்றி பெறும் லூயி ஆர்சே

மொரேல்ஸ் ஆட்சியின் போது நிதி அமைச்சராக இருந்த ஆர்சே “நாங்கள் ஜனநாயகத்தையும் மக்களுக்கான நம்பிக்கையையும் மீட்டெடுத்திருக்கிறோம்” என்று அறிவித்திருக்கிறார்.

ஈவோ மொரேல்ஸ் ஆட்சியில், இரண்டு பதவிக் காலங்களுக்கு ஆர்சே நிதி அமைச்சராக இருந்த போது,  பொலிவியாவின் எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட இயற்கை வளங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அதன் மூலம் உலகச் சந்தையில் கனிம வளங்களின் விலை அதிகரிப்பால் கிடைத்த பெருமளவு நிதி கோடிக்கணக்கான பொலிவிய பூர்வீக குடி மக்களை வறுமையிலிருந்து உயரச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தியது என்று npr இணையதளம் வெளியிட்ட செய்தி குறிப்பிடுகிறது.

2008-ல் தனது ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்ட அமெரிக்கத் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியதோடு, அமெரிக்காவுடனான தூதரக உறவுகளையும் மொரேல்ஸ் முறித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கார்கள் மற்றும் செல்போன்களில் பயன்படுத்துவதற்கான பேட்டரிகள் தயாரிப்புக்குத் தேவைப்படும் லித்தியம், 90 இலட்சம் டன்கள் அளவுக்கு (உலகக் கையிருப்பில் 90%) பொலிவியாவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை நாட்டுடைமையாக்க முயற்சித்ததால்தான் மொரேல்ஸ் பதவிக் கவிழ்ப்பு செய்யப்பட்டார் என்று மொரேல்சும் அவரது ஆதரவாளர்களும் வாதிடுவதாக newrepublic.com இணையதளம் தெரிவிக்கிறது.

“என்னுடைய குற்றம் நான் ஒரு (அமெரிக்க பூர்வகுடி) இந்தியனாக இருப்பதுதான்” என்று ஈவோ மொரேல்ஸ் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அக்டோபர் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொரேல்ஸ் கட்சி முறைகேடுகள் செய்ததாக, “அமெரிக்க அரசுகளின் அமைப்பு” (1948-ல் அமெரிக்கா உருவாக்கிய அமைப்பு) அறிவித்தது. அதைத் தொடர்ந்து பெரும் அளவிலான தெருப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதிபர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு ஈவா மொரேல்ஸ் இராணுவத்தால் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது ஒரு வலதுசாரி, இனவாத ஆட்சிக் கவிழ்ப்பு என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர் என்று npr செய்தி தெரிவிக்கிறது.

இப்போது அர்ஜென்டினாவில் வசித்து வரும் ஈவோ மொரேல்ஸ் “சகோதர சகோதரிகளே, மக்களின் ஆணை நிலைநாட்டப்பட்டிருக்கிறது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

மொரேல்சின் கடும் எதிரியான இடைக்கால அதிபர் ஜீனைன் ஆனெஸ் தோல்வியை ஏற்றுக் கொண்டிருக்கிறார். “இன்னும் அதிகாரபூர்வ முடிவுகள் வரவில்லை. ஆனால், கைவசம் வந்திருக்கும் தரவுகள் திரு ஆர்சே தேர்தலை வென்றிருப்பதாகக் காட்டுகின்றன” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

பிரேசிலின் தொழிலாளர் கட்சித் தலைவர், “பொலிவிய மக்கள் வாழ்க! ஜனநாயகம் வாழ்க!” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

வெனிசுலாவின் தலைவர் நிக்கோலஸ் மதுரோ “மகத்தான வெற்றி!, ஒன்றுபட்டு, விழிப்புணர்வோடு பொலிவிய மக்கள் நமது சகோதரர் ஈவோவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பை தோற்கடித்திருக்கிறார்கள்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

ஈவோ மொரேல்ஸ் வெளியேற்றப்பட்ட பிறகு ஆட்சியில் அமர்ந்த ஆனேசின் பழைமைவாத அரசுக்கு இது ஒரு கடுமையான கண்டனமாக அமைந்திருக்கிறது என்கிறது கார்டியன் நாளிதழ்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்