Aran Sei

‘ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டங்களை நிறைவேற்ற பாஜக முயற்சிக்கிறது’ – ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

பாஜக தன்னுடைய ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை வைத்து நாட்டில் ஆர்.எஸ்.எஸின்  செயல்திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறது என ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் குமாரி செல்ஜா தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”இன்று மக்களின் அரசியலமைப்பு உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இதற்கு எதிராக வழக்கறிஞர்கள் முன்வந்து, அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, நாட்டின் வளர்ச்சியில் ஒப்பிட முடியாத அளவிலான ஒரு பங்களிப்பை வழக்கறிஞர்கள் செய்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

”சுதந்திரத்திற்கு முன்பு, லாலா லஜ்பத் ராய், மகாத்மா காந்தி, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய அரசியலமைப்பின் தந்தை பிமாராவ் அம்பேத்கர், இந்தியாவின் இரும்பு மனிதன் சர்தார் வல்லபாய் பட்டேல் என அனைவரும் வழக்கறிஞர்களாக செயலாற்றினர் மற்றும் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு பெரும் பங்காற்றினர்” என குறிப்பிட்டுள்ளார்.

”பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து, அவர்கள் அரசியலமைப்பை கடந்து ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றனர். அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அரசிலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களான தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, நீதித்துறை மற்றும் வருமான வரித்துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு உரிமைகளில் தலையிடுவதன் மூலம் அவற்றை பாஜகவிற்கு எதிரானவர்கள் மீது பயன்படுத்தப்படுகின்றன.” என அவர் கூறியுள்ளார்.

”கடந்த காலத்தில் சுதந்திர போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பங்காற்றியதை போன்று, இன்றும் வழக்கறிஞர்கள் முன்வந்து அரசியலமைப்பை பாதுகாப்பதில் பங்களிக்க வேண்டும். இதன்மூலம் அரசியலமைப்பு நிறுவனங்களின் இருப்பை பாதுகாக்க முடியும். மேலும் அரசியலமைப்பை சிதைக்க பாஜக அரசு எந்த செயலைச் செய்ய முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்திற்கு தடை விதிக்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என குறிப்பிட்ட குமாரி செல்ஜா, “ஹரியானாவின் பல மாவட்டங்களில் இதுவரை 16 முறை இணையம் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 32 முறை இணைய வசதி தடை செய்யப்பட்டுள்ளது. இணைய தடையால் சாமானியர்கள் பாதிக்கப்படுவதோடு, நாட்டின் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 8,927 மணி நேரங்கள் இணைய வசதி தடை செய்யப்பட்டதில் இருந்து மட்டும் நாட்டின் பொருளாதாரத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குப் பிரதமர் மோடியும் அவரது இந்து தேசியவாத பாஜக அரசும் தான் நேரடி பொறுப்பு” என ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் குமாரி செல்ஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்