Aran Sei

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ – பாஜக கருத்தரங்கு

பாஜக ஏற்பாடு செய்த இணையவழி கருத்தரங்கு ஒன்றில், நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தும் முறைக்கு ஆதரவாக சட்ட வல்லுநர்களான சோலி சொராப்ஜி, மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் பேசியதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்று முழக்கத்தை விடுத்திருந்த நிலையில், நேற்று (ஜனவரி 10)  இது தொடர்பாக, பாஜக இணையவழி கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. இது ’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ குறித்தான தொடர் விவாதங்களின் ஒரு பகுதியாகும் என்று பாஜக தன் அறிக்கையில் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக “ஒரே நாடு ஒரே தேர்தல்” – பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான சோலி சொரப்ஜி, “நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவது, என் மனதிற்கு ஒரு நல்ல நடைமுறையாகப்படுகிறது. சில நேரங்களில் இது தவறாக பயன்படுத்தப்படலாம் . அதை முன்னிட்டு, இந்த ஏற்பாட்டை தாமதப்படுத்த வேண்டாம். இதற்கு முன்பு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது இல்லையா? அரசியல் காரணங்களால், இந்த முறையை சிலர் தவறாக பயன்படுத்தியிருக்கலாம். தவறாக பயன்படுத்தப்படுவதை சரிபார்க்க வேண்டுமேயன்றி, இந்தத் தேர்தல் முறையையே நீக்கம் செய்யக்கூடாது. ” என்று கூறியதாக பாஜக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் தொடர்பான சட்ட ஆணையத்தின் ’வரைவு அறிக்கை 2018’ –ன் தயாரிப்பில் பங்காற்றிய முன்னாள் மக்களவை பொதுச்செயலாளர் சுபாஷ் சி. காஷ்யப் பேசும் போது, “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதன் அவசியம் குறித்து பல குழுக்களும் கருத்தரங்குகளும் நடத்தப்பட வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் போது, தேசிய  அளவிலான பிரச்சினைகளால் பிராந்திய பிரச்சனைகள் நீர்த்துப்போக வாய்ப்பிருப்பதாக பிராந்தியக் கட்சிகள் பயம் கொள்கின்றன.” என்று கூறியுள்ளார்.

இன்று ’ஒரே நாடு, ஒரே விவசாயிகள் எதிர்ப்பு’-நாளை ‘தில்லி சலோ’

“இருப்பினும், பல்வேறு கமிஷன்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளை மேற்கோள் காட்டிய சுபாஷ் சி. காஷ்யப், ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசியத்தில் எந்தக் குற்றமும் காண முடியாது.” என்று பாஜக அறிக்கை  குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல்கள் என்ற கருத்து நம் நாட்டிற்கு புதியதல்ல என்றும் இது நடைமுறையில் பெரிய மாற்றம் என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை என்றும் மூத்த வழக்கறிஞரான மகேஷ் ஜெத்மலானி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினரான வினய் சஹஸ்ரபுத்தே, சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ், தன்னுடைய கிராமத்தில் அவர் ஏற்றுக்கொண்ட வளர்ச்சி பணிகள் அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதன் காரணமாக எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து பேசினார் என்றும் பாஜக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்