Aran Sei

விவசாயிகள் போராட்டம் – ஹரியானா தேர்தல்களில் விவசாயிகளின் கோபத்தை எதிர்கொள்ளும் பாஜக

Image Credit : India Today

விவசாய சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக, டெல்லி – ஹரியானா எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வரும் நிலையில், ஹரியானாவில் நடந்த மூன்று நகரங்களுக்கான மேயர் தேர்தலிலும் இன்னும் ஐந்து உள்ளாட்சி தேர்தல்களிலும்  பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் – அம்பாலா, கர்னால் சுங்கச் சாவடிகள் மூடப்பட்டன

ஹரியானாவின் அம்பாலா, பஞ்ச்குலா, சோனிபேட் நகரங்களில் மேயரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், ஞாயிற்றுக் கிழமை வாக்குப் பதிவு நடந்தது. பாஜக பஞ்ச்குலாவில் வெற்றி பெற்று விட்டாலும், காங்கிரஸ் சோனிபேட்டிலும், ஹரியானா ஜன் சேத்னா கட்சி அம்பாலாவிலும் வெற்றி பெற்றுள்ளன என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ்-ன் சொந்த ஊரான அம்பாலாவில், பாஜக தலைவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அங்கு ஆளும் கட்சியின் தோல்வியை இனிப்புகள் கொடுத்து ஆடிப் பாடி அம்பாலா விவசாயிகள் கொண்டாடினர் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஹரியானாவில் பாஜகவும் ஜனநாயக் ஜனதா கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தை ஒட்டி ஜனநாயகக் ஜனதா கட்சியின் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஹரியானா – விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பாஜக தலைவர்

ரேவாரி நகராட்சி கவுன்சில் தலைவர் பதவி தேர்தலில் பாஜகவின் பூனம் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். சம்ப்லா, தாருஹேரா, உக்லானா நகராட்சி கவுன்சில் தலைவர் தேர்தல்களில் வாக்காளர்கள் சுயேச்சை வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துள்ளனர், காங்கிரசும், பாஜக கூட்டணியும் தோல்வியடைந்துள்ளனர்.

இவற்றில் உக்லானா, தாருஹேரா இரண்டு பகுதிகளும் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் வலுவான பகுதிகளாக கருதப்படுபவை என்று என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

செவ்வாய் கிழமை ஹரியானா முதல்வர் பாஜகவைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள், விவசாயிகள் போராட்டம் உள்ளூராட்சி தேர்தல்களை குறிப்பிடத்தக்க அளவு பாதித்திருக்கலாம் என்று கூறியுளனர் என்று இந்தியா டுடே தெரிவிக்கிறது.

நகராட்சி தேர்தல் முடிவுகளை பார்த்த பிறகு, வரப் போகும் ஊராட்சி மன்ற தேர்தல்களில் பாஜக கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்யலாம் என்று இந்தியா டுடே செய்தி கூறுகிறது.

டெல்லியை நோக்கிச் சென்ற பஞ்சாப் விவசாயிகள் மீது தண்ணீர் பீரங்கி பயன்படுத்தியும், தடியடி நடத்தியும் ஹரியானாவின் பாஜக அரசு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து விவசாயிகள் அரசின் மீது கோபமாக உள்ளனர் என்று என்டிடிவி கருத்து வெளியிட்டுள்ளது.

விவசாயிகளின் கவனத்தைத் திருப்ப சட்லெஜ் – யமுனை இணைப்புப் பிரச்சினையை பாஜக கையில் எடுத்ததையும் விவசாயிகள் ஆதரிக்கவில்லை. சட்லெஜ் – யமுனை பிரச்சனை தொடர்பாக பாஜக தலைவர்கள் நடத்திய ஒரு நாள் உண்ணாவிரதம் விவசாயிகளின் எதிர்ப்பை எதிர்கொண்டது என்கிறது இந்தியா டுடே.

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப முயற்சி – சட்லெஜ், யமுனா இணைப்பைக் கையில் எடுத்த பாஜக

அம்பாலாவில் நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மனோகர்லால் கட்டாரின் வாகன வரிசை தாக்கப்பட்டதும் விவசாய சட்டங்கள் தொடர்பான ஹரியானா விவசாயிகளின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, தனது சொந்தத் தொகுதிக்குச் சென்ற போது, கிராம மக்களின் கோபத்தை எதிர்கொண்டிருக்கிறார். அவர் கலந்து கொள்ளவிருந்த ஒரு பொது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அவருக்காக அமைத்திருந்த தற்காலிக ஹெலிகாப்டர் தளத்தை கிராம மக்கள் சேதப்படுத்தினர் என்று என்டிடிவி செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்