Aran Sei

” பஞ்சாபை ரத்தக் களறியாக்க முயற்சிக்கும் பாஜக ” – அகாலி தளம்

Image Credit : Indian Express

சிரோமணி அகாலி தள் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், “பாஜகதான் நாட்டின் உண்மையான துக்டே துக்டே கேங்” என்று கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான அகாலி தள் கட்சியின் தலைவரான சுக்பீர் சிங் பாதல், காவிக் கட்சி (பாஜக) “ஒரு சமுதாயத்தை இன்னொரு சமுதாயத்துக்கு எதிராக தூண்டி விட்டு நாட்டை துண்டு துண்டாக பிளவுபடுத்துகிறது, மதவாத பிளவு பாதையில் பயணித்து நாட்டை பற்றி எரிய வைப்பதற்குக் கூட தயங்காத அளவுக்கு அது அதிகார வெறி பிடித்துள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

1998 முதல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வரும் அகாலி தள் கட்சி, ஒன்றிய அரசின் விவசாய சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து, கடந்த செப்டம்பர் மாதம், கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஒன்றிய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

விவசாயிகள் போராட்டம் : பழமையான கூட்டணி முறிந்தது

விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் கடந்த 20 நாட்களாக டெல்லியின் எல்லைகளில் நடந்து வரும் நிலையில், பாஜக அரசு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றப் போவதில்லை என்று உறுதியுடன் உள்ளது.

“அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!” – பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட உணர்வு

செவ்வாய்க் கிழமை பத்திண்டாவில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சுக்பீர் சிங், “பாஜக முதலில் இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராக தூண்டி விட்டது. இப்போது அதே தீய நாடகத்தை நடத்தி, பஞ்சாபிலும் அதே துயரச் செயலை நிறைவேற்ற முனைந்து நிற்கிறது. ” என்று அவர் குற்றம் சாட்டினார்.

“பஞ்சாபில் அமைதியை விரும்பும் எங்களது இந்து சகோதரர்களை சீக்கிய சகோதரர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகிறது, பாஜக. இந்துக்களும் சீக்கியர்களும் பல நூற்றாண்டுகளாக உறுதியான உறவை பராமரித்து வந்திருக்கின்றனர். இந்த உறவுகளை இரத்தக் களறியாக்க பாஜக விரும்புகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

விவசாய சட்டங்களைப் பற்றி பேசிய அவர், “இந்தச் சட்டங்கள் ஒரு போதும் விவசாயத்தில் ஈடுபடாதவர்களால் நிறைவேற்றப்பட்டது. இப்போது அவர்கள் விவசாயிகளுக்கு அவற்றின் பலன் பற்றி பாடம் எடுக்கிறார்கள்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜகவைத் தவிர ஒட்டு மொத்த நாடும்,  நாட்டுப் பற்று மிகுந்த விவசாயிகளுக்கும் படைவீரர்களுக்கும் நாம் பட்டுள்ள கடனை அங்கீகரிக்கிறது. ஆனால், “பாஜக அந்தக் கடனை மறுக்கும்படி மக்களை தூண்டி விடுகிறது. விவசாயிகளுக்கு நன்றியே இல்லாமல் இருக்கும் பாஜக அவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “நாளைக்கு அவர்களுக்கு தேவைப்பட்டால் நமது படைவீரர்களைப் பற்றியும் அதையே சொன்னாலும் சொல்வார்கள்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

இதைத் தொடர்ந்து, சண்டிகரில் உள்ள அகாலி தள் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“பாஜக பஞ்சாபுக்காக வைத்திருக்கும் தீவிரமான, அழிவு திட்டம் குறித்து நாட்டை எச்சரிப்பது எங்கள் தேசிய கடமை என்று சிரோமணி அகாலி தளம் கருதுகிறது. இந்தக் கட்சியின் அதிகார வேட்கை காரணமாக பஞ்சாபியர்கள் ஒருவர் மற்றவரது இரத்தத்தை குடிப்பதற்கு தூண்டி வருகிறது. அதன் மூலம் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் சகோதர பாசத்தையும், ஒற்றுமையையும் சிதைக்க முயற்சிக்கிறது.” என்று அந்த அறிக்கை கூறுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்