Aran Sei

`குஜராத் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக’ – வீடியோ ஆதாரம் வெளியிட்ட காங்கிரஸ்

அமித் ஷா - Image Credit : National Herald India

த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சி மாறுவதற்காகத் தனக்கு ரூ.10 கோடி பணம் கொடுத்ததாக முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சோமா பாய் பட்டேல் கூறும் வீடியோ ஒன்றை குஜராத் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது என்று நேஷனல் ஹெரால்ட் இந்தியா (காங்கிரஸ் கட்சியின் இணையதளம்) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் குஜராத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடப்பதற்கு முன்பு சோமா பாய் பட்டேலும் இன்னும் 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தமது பதவியை ராஜினாமா செய்தனர். அதன் மூலம் மாநிலங்களவைக்கு 3 பாஜக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் குஜராத் தலைவர் அமித் சாவ்டா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வீடியோவில், குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும், குஜராத் பாஜக தலைவர் சி ஆர் படீலும் எதிர்க்கட்சி முகாமைச் சேர்ந்த தலைவர்களுடன் பேரம் பேசுவதாக சோமா பாய் கூறுவது பதிவாகியுள்ளது.

தான் மட்டும் ரூ.10 கோடி வாங்கவில்லை, பிற தலைவர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டது என்று சோமா பாய் கூறுவதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

“மக்களின் வரிப்பணத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பாஜகவின் குஜராத் தலைவர் சி.ஆர் பாட்டீல், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஊழல், பேரம், ஜனநாயகப் படுகொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு எம்எல்ஏக்களை விலை பேசியுள்ளனர்” என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா ட்வீட் செய்துள்ளார்.

(சோமா பாய் இது தொடர்பாகப் பேசும் வீடியோ ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ இந்த ட்வீட்டில் உள்ளது.)

குஜராத் சட்டப்பேரவைக்கான 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பதவி விலகிய 5 எம்எல்ஏக்களை பாஜக வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

“சிலருக்கு சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதாக வாக்குறுதியும், மற்றவர்களுக்குப் பணமும் கொடுக்கப்பட்டது” என்று சோம் பாய் பட்டேல் வீடியோவில் கூறுவதாகப் பதிவாகியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ பதவியைத் துறக்க, அவருக்கு ரூ.20 கோடி தரப்பட்டதா என்று கேட்கும் போது, “அது தவறு, யாருக்குமே 10 (கோடி)க்கு மேல் கிடைக்கவில்லை” என்று பதிலளிக்கிறார், சோம் பாய்.

“காங்கிரஸ் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது” என்று கூறியுள்ளார் பாஜகவின் மாநில தலைவர் சிஆர் பட்டீல். “சோம் பாய் எம்எல்ஏ பதவியை மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். நான் ஜூலை மாதம்தான் பாஜக தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்” என்று அவர் விளக்கம் கூறியுள்ளார்.

ஜூன் மாதம் நடந்த 4 மேலவை இடங்களுக்கான தேர்தலில் 3 பாஜக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரசின் ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. காங்கிரசின் இரண்டாவது வேட்பாளரான மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரத்சிங் சோலங்கி போதுமான வாக்குகளைப் பெற முடியாமல் தோற்கடிக்கப்பட்டார்.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகியதால், காங்கிரசின் பலம் 73 எம்எல்ஏக்களிலிருந்து 65 ஆகக் குறைந்தது. தேர்தலுக்கு முன்னர் எஞ்சிய 65 எம்எல்ஏக்களைப் பல்வேறு ரிசார்ட்டுகளில் தங்க வைத்து அவர்களும் விலை போவதை காங்கிரஸ் தடுக்க முயற்சித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் மூன்று வேட்பாளர்களும் வெற்றியடைவதை உறுதி செய்யும் வகையில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக காங்கிரஸ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்