Aran Sei

‘கட்சி மாற பணம் வழங்கிய பாஜக’ – அபிஷேக் சிங்வி

ளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) குஜராத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கட்சி மாறுவதற்காகப் பணம் மற்றும் பிற சலுகைகளை வழங்கியதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணையையும் கோரியுள்ளது.

காங்கிரஸிலிருந்து பதவி விலகிய பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜகவில் இணைந்த அக்‌ஷய் படேல், பிரதியும்சிங் ஜடேஜா மற்றும் ஜே வி ககாடியா ஆகியோர், கட்சி மாறுவதற்குப் பணம் பெற்றதாகக் கேமராவுக்கு முன் ஒப்புக்கொண்டார்கள் எனக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி காணொலி வழியாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர்கள் அளித்த பேட்டிகளை மேற்கோள் காட்டி, பாஜக அவர்களை தங்கள் பக்கம் ஈர்க்க பணம் அல்லது பிற சலுகைகளை வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மூவரும் குஜராத்தில் பாஜகவால் இடைத்தேர்தலுக்குக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

“சட்டமன்றம் ஒரு பகடைக் காயாக, பாஜகவுக்கு ஒரு வணிக விளையாட்டாக, மாறியுள்ளது இந்தச் சான்றுகளிலிருந்து தெளிவாகிறது, எம்எல்ஏக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் வர்த்தகம் (Trading), கடத்தல் (Trafficking) மற்றும் பரிவர்த்தனை (Transaction), போன்ற மூன்று T களில் பாஜக தீவிரமாக ஈடுபடுகிறது,” என்று அபிஷேக் தெரிவித்துள்ளார்.

எட்டுக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் பாஜக சார்பாக வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி பெற்றுள்ளனர்.

“அவர் அதை ஏற்றுக்கொண்டாரா அல்லது லஞ்சம் வாங்கினாரா இல்லையா என்பது பிரச்சினை அல்ல. நிச்சயமாக, அதைக் குறித்து பேசுபவர்கள் அதை மறுத்துள்ளனர். பிரச்சினை என்னவென்றால் வழங்குநரின் உண்மையான நிறம், உண்மையான தார்மீக அரசியலமைப்பு மற்றும் சட்ட நிலை, வழங்குபவர் செயல்படும் அரசியல் நிலை, அதாவது பாஜகவின் நிலை,” என்று அக்‌ஷய் படேலை பற்றி அபிஷேக் கூறியுள்ளார்.

“உண்மையான பிரச்சினை பணத்தை வழங்குவதற்கான இந்தக் கட்சியின் வரம்பற்ற திறனைப் பற்றியது. நான் மீண்டும் சொல்கிறேன் – வரம்பற்ற திறன், வலைவீசியோ அல்லது வஞ்சத்தாலோ அதிகாரத்தை அடையும் அவர்களின் வரம்பற்ற பேராசைக்கு மட்டுமே ஈடாகும். இதில் வஞ்சம் அதிகமாகவும், வலைவீசுவது குறைவாகவும் உள்ளது,” என்று அபிஷேக் தெரிவித்துள்ளார்.

மத்தியிலும் குஜராத்திலும் ஆளும் கட்சி கடைப்பிடிக்கும் அரசியல் அறநெறி இதுதான் என்று அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

“நீங்கள் (பாஜக) ஒரு செயற்கைப் பெரும்பான்மையை உருவாக்குகிறீர்கள், ஒரு செயற்கைப் பெரும்பான்மை என்பது உண்மையான பெரும்பான்மையை அடிப்படையாக வைத்துச் செயல்படும் ஜனநாயகத்தை நிராகரிப்பதாகும். இதனை உங்களது பண சக்தியைப் பயன்படுத்தி நீங்கள் செய்கிறீர்கள்,” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இதை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோரியுள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டம், எஃப்ஐஆர் மற்றும் குற்றவியல் தரப்பில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளில் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும், என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்