Aran Sei

சர்வாதிகாரமாகிறதா இந்திய அரசு? – அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு

ந்திய அரசு சர்வாதிகார பாதையில் செல்வதாக ஸ்வீடனைச் சேர்ந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இந்தியா ஒரு எதேச்சதிகார பாதையில் தள்ளப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் நீண்ட காலமாக வாதிடுகின்றனர் என்று ‘scroll.in’ செய்தி வெளியிட்டுள்ளது. சிவில் உரிமைகள் குறைக்கப்படுவது, சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவது, நீதித்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை போன்ற சுயாதீன நிறுவனங்களை அடிபணிய வைப்பது போன்ற நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, அவர்கள் இந்த விமர்சனத்தை வைத்துள்ளனர்.

இப்போது, ​​ஸ்வீடனை சேர்ந்த வி-டெம் (ஜனநாயகத்தின் வகைகள்) நிறுவனத்தின் பகுப்பாய்வு, பாஜகவும் அதன் கொள்கைகளும், சர்வாதிகார காட்சிகளுக்கு ஒத்த கூறுகளை கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளது. அந்த ஆராய்ச்சி, பாஜக ‘கட்சி தாராளவாதமின்மை குறியீட்டில்’ (party illiberalism index), அதிக மதிப்பெண்களை பெற்றதாகவும் கூறியுள்ளது.

வி-டெம் பகுப்பாய்வு, கடந்த 20 ஆண்டுகளில், பாஜகவின் ‘தாராளவாதமின்மை மேலும் அதிகரித்திருப்பதை’ கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வு, போலந்து சட்டம் மற்றும் நீதிக் கட்சி (பிஐஎஸ்), ஹங்கேரிய ஃபிடெஸ் கட்சி, துருக்கிய நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (ஏகேபி) மற்றும் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி ஆகிய நான்கு காட்சிகளை நெருக்கமாகக் கண்காணித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்த நான்கு நாடுகளில் ஜனநாயகத்தின் தரம் வெகுவாகக் குறைந்துவிட்டதால் இந்த கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

பெருகும் தாராளவாதமின்மை

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், பிஐஎஸ், ஃபிடெஸ் கட்சி மற்றும் ஏகேபி ஆகியவை, ஜனநாயக அரசியல் சூழலில் தாராளவாதிகளாக இருந்தன. மறுபுறம் பாஜகவில் 1999-லேயே கணிசமான அளவிற்கு தாராளவாதமின்மை இருந்துள்ளது.

அடுத்த இரண்டு தசாப்தங்களில், நான்கு கட்சிகளின் தாராளவாதமின்மையும் அதிகரித்துள்ளது. அதில், பிஐஎஸ், ஃபிடெஸ் மற்றும் பாஜக எதேச்சதிகாரதுக்கு அருகில் உள்ளன. ஏகேபி இந்தக் கட்டத்தையும் தாண்டியுள்ளது.

வி-டெம்-ன் தாராளவாதமின்மை குறியீடு, தேர்தலுக்கு முன்னர் ஒரு கட்சி வெளிப்படுத்தும் ஜனநாயக தன்மையின் அளவைக் கணக்கிடுகிறது. அரசியல் பன்முகத்தமையில் அர்பணிப்பின்மை, சிறுபான்மை உரிமை மீறல், அரசியல் வன்முறையை ஊக்குவித்தல் ஆகியவற்றை வைத்து இந்தக் குறியீட்டை அளக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளாகும் ஜனநாயகம்

இது ஒரு உலகளாவிய போக்காக மாறிவிட்டதை வி-டெம் குறிப்பிடுகிறது. சமீபத்தில் இந்தக் காட்சிகளிடையே தாராளவாதமின்மை அதிகரித்துள்ளது.

முன்னர் ஜனநாயகம் வெளியிலிருந்து தாக்கப்பட்டது என்றும், தற்போது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்கள் பொதுவாக அரசாங்கத்திற்குள் இருந்தே வருவதை காணமுடிவதாக இந்த ஆய்வு கூறியுள்ளது.

வி-டெம் அதன் தரவுகளை, நிபுணர்களிடமிருந்தும், புள்ளிவிவர கணக்கெடுப்பில் இருந்தும் பெற்றுள்ளது.

(www.scroll.in இணையதளத்தில் வெளியான செய்தியைத் தழுவி எழுதப்பட்டது)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்