Aran Sei

காந்தியை ‘பாகிஸ்தானின் தந்தை’ என்று கூறிவருக்கு பேராசிரியர் பதவி

Image Credits: Janastta

டந்த ஆண்டு, மகாத்மா காந்தியை “பாகிஸ்தானின் தந்தை” என்று வர்ணித்த மத்தியப் பிரதேச பாஜக ஊடகக் குழுவின் முன்னாள் தலைவர் அனில் குமார் சவுமித்ரா, புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற தகவல் தொடர்பு கல்லூரியின் (ஐஐஎம்சி) பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசத்தின் தந்தையை அவமதித்ததற்காக அவருக்கு வெகுமதி அளிக்கப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளதாக ‘தி வயர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவும் அதன் தாய் இயக்கமான ஆர்எஸ்எஸும் 2014-ல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவின் பிரிவினைக்குக் காந்தி மீது பழிபோடுவதைத் தவிர்த்துள்ளது. இருப்பினும், ஆர்எஸ்எஸின் அங்கமான சங் பரிவார் அமைப்பினர் இன்னும் இந்தக் கருத்தைக் கைவிடவில்லை.

“அனில் குமாரின் சமூக ஊடகப் பதிவு கட்சியின் நெறிமுறைகள், யோசனைகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது. மேலும் கட்சியின் பிம்பத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது” என்று பாஜக ஒரு விளக்கத்தை வெளியிட்டது என ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அவரது இந்தக் கருத்தின் காரணமாக அவர் இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

“அவர் தேசத்தின் தந்தை. ஆனால் பாகிஸ்தானின் தேசத் தந்தை. நாட்டில் அவரைப் போன்ற கோடி மகன்கள் இருந்தனர். சிலர் தகுதியானவர்கள்; சிலர் தகுதியற்றவர்கள்” என்று அனில் குமார் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பாஜக அவரை இடைநீக்கம் செய்தது.

அனில் குமார், மத்தியப் பிரதேசத்தில், பாஜகவின் சரைவேட்டி நாளிதழின் ஆசிரியராக இருந்தார். 2013-ம் ஆண்டு, ‘தேவாலய நரகத்தில் கன்னியாஸ்திரியின் வாழ்கை’ (சர்ச் கே நர்க் மீ நன் கா ஜீவன்) எனும் கட்டுரையை வெளியிட்ட பின்னர் அந்தப் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். கத்தோலிக்கத் தேவாலயத்தில் கன்னியாஸ்திரிகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது பொதுவானது எனும் ஆதாரமற்ற கருத்தை அந்தக் கட்டுரை வெளியிட்டது.

அப்போது, முன்னாள் மக்களவை சபாநாயகரும் இந்தூரைச் சேர்ந்த முன்னாள் பாஜக அமைச்சரும் சங் பரிவாருடன் இணைந்த ‘பண்டிட் தீண்தயால் விச்சார் பிரகாஷன்’ அமைப்பின் தலைவருமான சுமித்ரா மகாஜனுக்கு அனில் குமார் கடிதம் ஒன்றை எழுதியதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

“நான் ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட்டேன். எனது ஆர்எஸ்எஸ் பின்னணி மற்றும் கருத்தியல் அர்ப்பணிப்பு காரணமாகத்தான் நான் ஆசிரியராகத் தேர்வு செய்யப்பட்டேன்” என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மோகன் பகவத், சுரேஷ் ஜோஷி, சுரேஷ் சோனி, பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி மற்றும் தற்போதைய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட மாநில தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டது.

60 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்த பிறகு ஐஐஎம்சியின் பேராசிரியர் பதவியில் அனில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 26 அன்று அவரது நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனில் குமாரும், கல்லூரியின் நிர்வாக இயக்குனரான சஞ்சய் ஸ்விவேடியும், இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்