Aran Sei

கோட்சே ஓர் உண்மையான தேச பக்தர்: பாஜக தலைவர் ட்வீட்

Credits Ramesh Naidu Twitter

‘பாரத நாட்டின் உண்மையான தேசப்பற்றாளர் கோட்சே’ என்று குறிப்பிட்ட பாஜக தலைவரின் ட்விட்டர் பதிவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் பாஜக தலைவர் ரமேஷ் நாய்டு நேற்று ட்விட்டரில் காந்தியைக் கொன்ற கோட்சேவின் புகைப்படத்தைப் பதிவிட்டு, பாரத நாட்டின் மீது உண்மையான பற்று கொண்ட தேசபக்தர் என்று குறிப்பிட்டிருந்தார்.

“நாதுராம் கோட்சேவின் நினைவு தினத்தன்று, அவருக்கு நன்றி செலுத்தித் தலை வணங்குகிறேன். பாரத நாட்டில் பிறந்த உண்மையான மற்றும் மிகச் சிறந்த தேச பக்தர் இவர்.” என்று பதிவில் தெரிவித்திருந்தார்.

Credits The Wire

கோட்சே குறித்த பதிவைப் பலரும் கடுமையாக விமர்சித்த காரணத்தால், ரமேஷ் நாய்டு ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்தப் பதிவை நீக்கியுள்ளார்.

தொடர்ந்து, “என்னுடைய ட்விட்டர் பக்கத்தைக் கையாண்டு வந்தவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த ட்வீட் தற்போது நீக்கப்பட்டுவிட்டது.” என்று ட்விட்டரில் ரமேஷ் நாய்டு தெரிவித்துள்ளார்.

 

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் கோட்சேவை ‘தேச பக்தர்’ என்று குறிப்பிட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலையொட்டி போபால் மாநில எம்.பி ப்ரக்யா தாக்கூர், “கோட்சே தேச பக்தராக இருந்தார். அவ்வாறே தொடர்வார்” என்று கூறியதாகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியைப் பின்தொடரும் ட்விட்டர் கணக்குகளில் பல, தங்களைக் கோட்சேவின் ரசிகர்கள் என்று கூறுபவர்களுடையவை என 2017-ம் ஆண்டு ஆல்ட் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, கோட்சே மற்றும் காந்தியைக் கொள்வதில் கூட்டுச் சதியாளரான நாராயண ஆப்தே ஆகியோரின் 71வது நினைவு தினத்தை இந்து மகா சபை நேற்று அனுசரித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்