Aran Sei

“ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவை கூட்டத்தில் சிஏஏ அமல்படுத்தப்படும் ” – மேற்கு வங்காள தேர்தல் அறிக்கையில் பாஜக

image credit : indianexpress.com

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே சிஏஏ அமல்படுத்தப்படும் என்று பாஜக மேற்கு வங்க மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான தனது உறுதிமொழி அறிக்கையில் அறிவித்துள்ளது.

294 உறுப்பினர்கள் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தல், வரும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்தத் தேர்தலுக்கான தனது அறிக்கையை பாஜக நேற்று கொல்கத்தாவில் வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்துக்கு ஒரு வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதியையும் அது வழங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

“சோனார் பங்களா சங்கல்ப பத்ர” என்ற பெயரிலான இந்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். “முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே சிஏஏ-வை அமல்படுத்துவது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும், ஏழைகளுக்கு பலனளிக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத், பிஎம்-கிசான் ஆகிய மத்திய திட்டங்களை அமல்படுத்த ஒப்புதல் வழங்குவோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பர் 2019-ல் மத்திய பாஜக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்கான விதிகள் இன்னும் அறிவிக்கப்படாததால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. குடியுரிமை பெறுவதில் முஸ்லீம்களை விலக்கி வைக்கும் சிஏஏவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றன.

இப்போது தேர்தல் நடைபெறும் அசாம் மாநிலத்தில் சிஏஏவுக்கு கடும் எதிர்ப்பு நிலவும் அதே நேரத்தில், மேற்கு வங்காள மாநிலத்தில் பெரும்பகுதியினர் சிஏஏ-வை ஆதரிக்கின்றனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க பாஜக கறாரான நடவடிக்கைகள் எடுக்கும் என்றும், ஒவ்வொரு அகதி குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ 10,000 நேரடி பண பரிவர்த்தனை மூலம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும், “ஊடுருவல் இல்லாத”, “மதச் சார்பு இல்லாத” வங்காளத்தை உருவாக்குவோம் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

மகிஷ்யா, திலி மற்றும் பிற இந்து சமுதாயங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, மதுவாக்கள், தல்படிக்கள் ஆகியோருக்கு மாதம் ரூ 3,000 ஓய்வூதியம், 10-ம் வகுப்பு வரை பெங்காலி மொழியை கட்டாயப் பாடமாக்குவது, மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி, அரசு பதவிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, ரூ 11,000 நிதியில் கலை இலக்கிய வளர்ச்சிப்பணி, தாகூர் பெயரில் நோபல் பரிசுக்கு இணையான பரிசை ஏற்படுத்துதல் ஆகிய வாக்குறுதிகளையும் பாஜக அறிவித்துள்ளது.

“வங்காள தேர்தலுக்கான ஜும்லா நிரம்பிய தேர்தல் அறிக்கையை, ஒரு குஜராத்தியை வைத்து டூரிஸ்ட் கும்பல் வெளியிட்டுள்ளது அபத்தமாக உள்ளது” என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் அபிஷேக் பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.

“வங்காளத்தில் 294 தொகுதிகளில் போட்டியிட போதுமான வேட்பாளர்கள் கூட இல்லாத ஒரு கட்சி, இத்தகைய முக்கியமான நிகழ்வுகளில் உள்ளூர் தலைமையை புறக்கணிக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்