Aran Sei

மேற்குவங்க வன்முறை – “துரோகிகளை சுட்டு வீழ்த்துவோம்” முழக்கத்தை கண்டிக்கும் பாஜக

Image Credit : thehindu.com

“வங்காளத்தின் துரோகிகளை சுட்டு வீழ்த்துவோம்” என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நடத்திய பிரச்சார கூட்டத்தில் முழக்கமிடப்பட்டது என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

மேற்கு வங்காள சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. கடந்த 2011 முதல் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாவும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற கடும் போட்டி போட்டு வருகின்றன.

2016-ல் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 211 இடங்களில் வெற்றி பெற்று திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்திருந்தாலும், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக வலுவான நிலையை அடைந்திருந்தது.

எனவே, வரப் போகும் சட்டப் பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா கட்சி கடும் முயற்சி எடுத்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று கிழக்கு மிதினாபூர் மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நடத்திய அரசியல் பேரணியின் போது, அக்கட்சி தொண்டர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. திங்கள் கிழமை பாரதிய ஜனதா கட்சி நடத்திய பேரணியின் போதும் இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், பாஜகவினருக்கு எதிராக, “வங்காளத்தின் துரோகிகளை சுட்டு வீழ்த்து” என்று முழங்கியதை காட்டின.

இது “துரதிர்ஷ்டவசமானது”, “கண்டனத்துக்குரியது” என்று பாஜக தலைவர்கள் இதனை கண்டித்துள்ளனர். அத்தகைய முழக்கங்களை தவிர்த்திருக்கலாம் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைமை கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

மார்ச் 2020ல், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷாவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பாஜக ஆதரவாளர்கள் இது போன்று “துரோகிகளை சுட்டுக் வீழ்த்துவோம்” என்று முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது என்று தி ஹிந்து கூறுகிறது.

மேலும், “தேசத்தின் துரோகிகளை சுட்டு வீழ்த்துவோம்” என்ற இந்த முழக்கம் முதன்முதலாக, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக தலைவர்களால் டெல்லியில் டிசம்பர் 2019-ல் எழுப்பப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சிறப்பு உரிமைகளை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்களும் ஜனநாயக சக்திகளும் போராடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மிதினாபூர் மாவட்டத்தின் கெஜுரியில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு கட்சித் தாவல் செய்த சுவேந்து அதிகாரி நடத்திய கூட்டத்திலும் மோதல்கள் வெடித்தன என்று தி ஹிந்து செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்