Aran Sei

கர்நாடகாவின் வகுப்புவாத சம்பவங்களால் மாநிலத்தின் மதிப்பு குறைகிறது – பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார்- ஷா கவலை

ர்நாடகாவில் நடந்து வரும் வகுப்புவாத சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள பயோகான் நிறுவன தலைவர் கிரண் மசூம்தார்-ஷா, இது உலகளவில் கர்நாடக மாநிலத்தின் மதிப்பை குறைக்கும் என்று எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் முதல் உயிரித்தொழில்நுட்ப (பயோ டெக்னாலஜி) நிறுவனமாக, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பயோக்கான் நிறுவனம் கருதப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் இந்துக் கோவில் திருவிழாக்களில் இந்து அல்லாத வியாபாரிகள் வணிகம் செய்யக் கூடாது என்று விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கூடுதலாக, ஹிஜாப் விவகாரம், ஹலால் இறைச்சி குறித்த பாஜக தலைவர் சி.டி.ரவியின் கருத்து போன்றவை அம்மாநிலத்தில் மத ரீதியிலான சர்ச்சைகளை கிளப்பியுள்ளன.

ஹலால் இறைச்சி குறித்த பாஜகவின் சர்ச்சை கருத்து – கர்நாடகாவை உ.பி., ஆகுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்நிலையில், இது குறித்து, நேற்று (மார்ச் 31), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கிரண் மசூம்தார்-ஷா, “எப்போதுமே அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை கர்நாடகா உருவாக்கி வருகிறது. இது போன்ற வகுப்புவாத சர்ச்சைகளை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. தகவல் தொழில்நுட்பமும் உயிரித் தொழில்நுட்பமும் வகுப்புவாதமாக மாறினால், அது நமது உலகளாவிய தலைமையை அழித்துவிடும். பசவராஜ் பொம்மை, தயவு செய்து வளர்ந்து வரும் இந்த மதப் பிளவிற்கு முடிவு கட்டுங்கள்” என்று கூறியுள்ளார்.

“எங்கள் முதலமைச்சர் இந்த விவகாரத்தை அமைதியான முறையில் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன். நான் ஒரு பெருமைமிக்க கன்னடிகன். இந்த சம்பவங்கள் கர்நாடகாவின் பொருளாதார முன்னேற்றதை பாதிக்கும் என்பதால் இதை நான் விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தொண்டதர்ய மடம் திருவிழா: பிறமதத்தினர் கடை போடக் கூடாது என இந்து அமைப்பினர் பிரச்சாரம் – மத நல்லிணக்கத்தை கெடுப்பதாக பக்தர்கள் குற்றச்சாட்டு

கிரண் மசூம்தார்-ஷாவின் கவலைகளுக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சட்டம் ஒழுங்கையும் அமைதியையும் காக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கர்நாடகம் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் பெயர் பெற்ற மாநிலம். ஒவ்வொருவரும் நிதானத்தைக் கடைப்பிடித்து, அப்பெயர் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்