Aran Sei

இலங்கைக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவி: ராஜபக்சேவுக்கு உறுதியளித்த மோடி

Image tweeted by @MEAIndia

இந்தியா இலங்கை நாடுகளிடையே காணொலி வாயிலாக நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரமதர் நரேந்திர மோடி, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.

ஆகஸ்டு மாதம் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சேவின் பொதுஜன பெரமுனா கட்சி வெற்றிபெற்றது. மகிந்த ராஜபக்சே நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

மாநாட்டின் தொடக்கத்தில், ராஜபக்சேவின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ராஜபக்சே அரசாங்கத்தின் கொள்கைகள் இரண்டு நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவை மேம்படுத்துவதில் உதவும் என நம்புவதாக கூறினார்.

“உங்களுடைய தேர்தல் வெற்றிக்கு பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அத்தியாயம் துவங்குவதற்கு வாய்ப்பு அமைந்துள்ளது. இரண்டு நாட்டின் மக்களும் நம் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளார்கள்” என்று மோடி கூறினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்தது என குறிப்பிட்ட மோடி, சாகர் கொள்கைப்படி, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் இலங்கையுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பதை உறுதிபடுத்தும் 13-வது சட்டதிருத்தினை பிரதமர் மோடி வலியுறுத்தி பேசியுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள், பல முக்கிய துறைகளில் இருக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்  உள்ளிட்டவை குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

காணொலி மூலம் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியா இலங்கை இடையே புத்தமத ரீதியான உறவை மேம்படுத்த 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்குவதாக மோடி அறிவித்தாரென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோடி – ராஜபக்சே சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச் செயலர் அமித் நரங் கூறுகையில், ”மாநாட்டின் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாடுகளிடையேயான உறவினை மேலும் ஆழப்படுத்த உதவும்.” என்றார்.

மீனவர் பிரச்சனை குறித்த ஆலோசனையில், இதுவரை இருந்து வரும் “ஆக்கப்பூர்வமான, மனிதநேய அணுகுமுறையே கைகொடுக்கும்” என்று இரண்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாகவும் நரங் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பிற நாட்டு தலைவர்களோடு காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது இதுவே முதல்முறை. பதவியேற்புக்கு பிறகு இலங்கை பிரதமர் ராஜபக்சே வெளிநாட்டு தலைவரோடு ஆலோசனை நடத்தியிருப்பதும் இதுவே முதல்முறை.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்