Aran Sei

நிதீஷ் குமார் – பாஜகவின் “நியமன” முதல்வர் : எதிர்க்கட்சிகள் குத்தல்

பீகாரில் பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை உள்ளடக்கிய புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நேற்று பதவியேற்றது. 69 வயதான நிதீஷ்குமார் ஆறாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இம்முறை பாஜகவின் கை ஓங்கியிருக்கும் என்பதைக் காட்டும் வகையில் அவருடன் பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகிய இருவரும் துணை முதலமைச்சர்களாக பதவி வழங்கப்பட உள்ளனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

மூன்று கட்டங்களாக நடந்த 243 பீகார் சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தலின் வாக்குகள் கடந்த நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டன.

115 இடங்களில் போட்டியிட்ட நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 110 இடங்களில் போட்டியிட்ட பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணியில் தலைமையிடத்தை பிடித்தது. கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து பெரும்பான்மை எண்ணிக்கைக்கும் அதிகமாக 125 இடங்களைப் படித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் வலிமை பெற்றது.

144 இடங்களில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 75 இடங்களிலும், 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. 29 இடங்களில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் 16 இடங்களை பிடித்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி மொத்தம் 110 இடங்களைப் பெற்றது.

பீகார் தேர்தல் முடிவுகள் – கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? – நவநீத கண்ணன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தேர்தலுக்கு முன்பு விலகிய சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பாஜகவுக்கு ஆதரவாகவும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தது. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றாலும் லோக் ஜனசக்தி, ஐக்கிய ஜனதா தளத்தின் வாய்ப்புகளை பாதித்து கூட்டணியில் பாஜகவை வலுவடையச் செய்துள்ளது.

பீகார் தேர்தல் – படுதோல்வியைச் சந்தித்த எல்ஜேபி – பாதாளத்தில் தள்ளிய சிராக் பஸ்வான்

இதைத் தொடர்ந்து நிதீஷ் குமார் முதலமைச்சராகவும், பாஜகவின் இரண்டு துணை முதலமைச்சர்களும் பதவி ஏற்றுள்ளனர். இவர்களுடன் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இரு கட்சிகளிலிருந்து தலா 5 பேரும், கூட்டணி கட்சிகளிலிருந்து தலா ஒருவரும் பதவி பிரமாணம் எடுத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே பி நட்டா, முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2015 தேர்தலில் நிதீஷ் குமார் கட்சிக்காக பணியாற்றிய தேர்தல் திட்டமிடல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் “பாஜக நியமித்த முதலமைச்சராக பதவியேற்கும் நிதீஷ் குமாருக்கு வாழ்த்துக்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்,

மேலும், “களைப்படைந்து விட்ட, அரசியல் ரீதியாக சிறுமைப்படுத்தப்பட்டு விட்ட முதலமைச்சர் காரணமாக பீகாரில் இன்னும் சில ஆண்டுகள் நிர்வாக தேக்க நிலை தொடரும்” என்று அவர் கூறிநுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்த பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளது. பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அமைப்பது பீகார் மக்களின் தீர்ப்புக்கு துரோகம் இழைப்பதாகும் என்றும், “மக்களின் தீர்ப்பு மோசடி மூலம் மாற்றப்பட்டு விட்டது” என்றும் எதிர்க்கட்சி கூட்டணி தெரிவித்துள்ளது.

பீகார் தேர்தல்: ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு’ – இடதுசாரிகள் புகார்

“இரண்டு கையாலாகாத கட்சிகளின் கையாலாகாத அரசாங்கம்” பீகாருக்குக் கிடைக்கிறது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூறியுள்ளது. “பலவீனமானவராக, சோம்பேறியாக, ஊழல்வாதியாக நிரூபிக்கப்பட்ட ஒருவர் பீகாரின் முதலமைச்சர் ஆகிறார்” என்றும், “கூட்டணியின் மூத்த பங்காளியான பாஜகவிடம் முதலமைச்சராக நிறுத்துவதற்கு ஆளுமை இல்லை, பெரும்பான்மை பெறுவதற்காக அக்கட்சி மோசடிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது” என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக scroll.in செய்தி வெளியிட்டுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஷ்வி யாதவ் முதல்வர் பதவி ஏற்ற நிதீஷ் குமாருக்கு ஒரு குத்தலான வாழ்த்துச் செய்தியையும் தெரிவித்திருக்கிறார்.

“முதலமைச்சராக ‘நியமிக்கப்பட்டதற்கு’ நிதீஷ் குமாருக்கு வாழ்த்துக்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். “தனது அரசியல் ஆசைகளை நிறைவேற்ற முயற்சிக்காமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்களித்த 19 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வேலை வாய்ப்பு, கல்வி, மருத்தும் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தும் அவர் செயல்படுவாம் என்று நம்புவதாகவும் தேஜஷ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

“முதலமைச்சர் ஆனதற்கு வாழ்த்துக்கள், உங்களை முதலமைச்சர் ஆக்கியதற்கு பாஜகவுக்கு வாழ்த்துக்கள்” என்று சிராக் பாஸ்வான் நிதீஷ் குமாருக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், பாஜகவின் தயவில்தான் நிதீஷ்குமார் முதலமைச்சர் ஆகியுள்ளார் என்பதை அவர் குத்திக் காட்டுகிறார் என்று என்டிடிவி கூறுகிறது.

சென்ற ஆட்சிக் காலத்தில் பாஜக துணை முதல்வராக இருந்த, நிதீஷ் குமாருடன் இணக்கமாக நடந்து கொள்ளும்  சுஷில் மோடி, பீகார் அமைச்சரவையில் சேர்க்கப்படாதது மூலம், இனிமேல் பாஜகதான் ஆட்சியில் மேல்கை கொண்டிருக்கும், முதலமைச்சர் பதவி நிதீஷ் குமாருக்கு கிடைக்கப் போகும் ஒரு சில சலுகைகளில் ஒன்றே என்று டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

“நிதீஷ் குமார் 5 ஆண்டுகள் பதவியில் நீடிப்பது சந்தேகம்தான்” என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா தலையங்கத்தில் எழுதியுள்ளது.

பீகார் தேர்தல் தோல்வியைப் பற்றி விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்