பீகார் மாநிலம் சமஸ்திபூரில் கலீல் ஆலம் ரிஸ்வி என்ற இஸ்லாமிய இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு வகுப்புவாத உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிப் 19 தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான காணொளியில், முஷ்ரிகராரியில் பசு மாடு கொல்லப்படுவதற்கு யார் காரணம் என கடத்தல்காரர்கள் ரிஸ்வியிடம் கேள்வி எழுப்பும் காட்சி பதிவாகியுள்ளது.
சமூக சேவகராக இருந்து வரும் கலீம் ஆலில் ரிஸ்வி, பீகாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.
பிப். 16 தேதி விட்டை விட்டு வெளியேறியபோது கடத்தப்பட்ட ரிஸ்வியை விடுவிக்க, கடத்தல்காரர்கள் அவரது குடும்பத்தினரிடம் பணம் கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக தி வயர் இணையதளத்திடம் பேசிய ரிஸ்வியின் சகோதரர் சகீல், “பிப். 16 தேதி காலை 11 மணிக்கு கலீல் வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது அவர் கடத்தப்பட்டிருக்கிறார். அன்று மாலை ரிஸ்வியின் செல்போனில் இருந்து 5 லட்சம் கேட்டுக் கடத்தல்காரர்கள் மிரட்டினார்கள்” என தெரிவித்துள்ளார்.
”பின்னர் அப்பாவின் செல்போனிற்கு அழைத்த கடத்தல்காரர்கள் 3.75 லட்சம் பணம் அளித்தால் தான் ரிஸ்வியை விடுவிக்க முடியும் என கூறினர். பணத்தை ஒரு வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறினர். அதன்பிறகு, அவர்களிடம் இருந்து எந்த அழைப்பு வரவில்லை” என கூறியுள்ளார்.
இது தொடர்பாக முஷ்ரிகராரி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப். 19 அன்று சமஸ்திபூரில் வசிக்கும் அனுராக் ஜா என்பவரின் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியான காணொளியில், ரிஸ்வி கடத்தல்காரர்களால் தாக்கப்படும் சம்பவம் பதிவாகியுள்ளது.
மேலும் அந்த பதிவில், “இந்த சம்பவம் நம் அனைவருக்கும் கெடுவாய்ப்பானது. இந்த காணொளியை இந்து சகோதரர்கள் அனைவரும் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏழைகளை கொள்ளையடித்து மாடுகளை உண்பவர்கள் பயப்படுவதற்கும், பசுவை யாரும் தொட துணியாமல் இருப்பதற்கும் இந்து சகோதரர்கள் அனைவரும் முடிந்தவரை இதைப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
ரிஸ்வியின் கொலைக்கு வகுப்புவாத உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ள ரிஸ்வியின் சகோதரர் சகீல், ”இது பணம் பெருவதற்கான கடத்தல் அல்ல. அவர்கள் பொய் சொல்கிறார்கள். காணோளியை பாருங்கள், அவர்கள் மாட்டிற்காக ரிஸ்வியை கொன்றுள்ளார்கள். இது ஒரு கும்பல் வன்முறை. இது ஒரு திட்டமிட்ட படுகொலை” என தெரிவித்துள்ளார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.