Aran Sei

பீகார் தேர்தல் – சட்டமன்ற உறுப்பினர்கள் விலைபோவதைத் தடுக்க சோனியா காந்தி திட்டம்

credits : reuters

சமீபத்தில நடந்து முடிந்த பீகாரின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசை உள்ளடக்கிய மஹாபந்தன் கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியை ஒரு சில இடங்களில் முன்னிலைப் பெற்று வீழ்த்தும் என கூறியுள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உறுதியாகும் பட்சத்தில் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களைப் பாஜக கைப்பற்றுவதைத் தடுக்க இரண்டு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பீகார் விரைந்துள்ளனர் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்களான ரந்தீப் சுரஜ்வாலா மற்றும் அவினாஷ் பாண்டேவை பீகார் அனுப்பியுள்ளார். தேர்தல் வாக்குகள் சரியான முறையில் எண்ணப்படுவதைக் கண்காணிக்கவும், வேட்பாளர்களை ஒருங்கிணைக்கவும் பீகார் அனுப்பபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மணிப்பூர் மற்றும் கோவாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவை விட ஒரு சில தொகுதிகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வெற்றி பெற்றது. இருந்தும் பெரும்பாண்மையைப் பெறாத பாஜக, சில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. இது போன்ற ஒரு நிகழ்வு நடைபெறாமல் தடுக்கவே, தற்போது இரண்டு மூத்த காங்கிரஸ் தலைவர்களைப் பீகாரில் முகாமிட வைத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.

இந்தத் தேர்தலில் வெற்றிப்பெறும் அனைத்து வேட்பாளர்களையும் பாட்னாவில் இருக்கும் ஹோட்டலில் தங்க வைக்க காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகாரில் இருக்கும் 243 தொகுதிகளில் 70 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அவற்றில் 40 முதல் 45 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும் நம்பிக்கையளித்தாலும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நாளான நவம்பர் 10 அன்று மிகவும்  கட்டுபாடுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

”நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும், நிதானுத்தடனும், கண்ணியத்துடனும் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பட்டாசுகள் வெடிப்பது, வானவெடிக்கைகள் விடுவது எதிர்கட்சியினருடன் அநாகரிகமாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துக் கொள்வது போன்ற செயல்கள் கட்சியால் எந்தக் காரணத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்படாது” என கூறப்பட்டுள்ளது.

“தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் உங்கள் அரசியல் மக்கள் நலனிலும் அவர்களை முன்னேற்றுவதிலுமே இருக்க வேண்டும்” என டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் “இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் பிரதமருக்கு ஒரு தெளிவான தகவலை தெரிவித்துள்ளது என கூறியுள்ளார். வேலைவாய்ப்பு, உணவு, மருத்துவ வசதிகள், விவசாயிகள் நலன் ஆகியவையே பீகார் மக்களின் முக்கியமான பிரச்சனைகள்” என கூறியுள்ளார்.

 

மேலும் இந்துத்துவ கோட்பாடுகள், ராமர் கோயில், அரசியல்சாசன பிரிவு 370 ஐ நீக்கியது, புல்வாமா தாக்குதல் மற்றும் குடியுரிமைத் திருத்த சட்டம், எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை தேச விரோதிகள் என சொல்லுவதன் மூலமே மோடி ஆட்சியை கைபற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜோ பைடன் தன்னுடைய வெற்றி உரையில் பேசியதையே இந்தியப் பிரதமரிடம் இருந்தும் கேட்க விரும்புவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்