Aran Sei

பீகார் தேர்தல் – பாஜக 282 கோடி வசூல் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்

credits : the hindu

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 282.29 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் விற்கப்பட்டதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது என தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் ரொக்க நன்கொடைகளைப் பெறுவதைத் தவிர்த்து வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் தேர்தல் பத்திரத் திட்டதை இந்திய அரசு ஜனவரி 2018-இல் அறிமுகப்படுத்தியது.

இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 29 ஏ-இன் படி, பொதுமக்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ், இந்திய அரசியல் கட்சிகள் நன்கொடைகள் பெறலாம்.

இதற்கு வசதியாக, இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிடும் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கும் திட்டத்தை, இந்திய அரசு ஜனவரி 2018-இல் நடைமுறைப்படுத்தியது.

இந்தப் பத்திரத்தைப் பாரத ஸ்டேட் வங்கி மூலம் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வங்கிக்கணக்கில் மட்டுமே பணம் வரவு வைக்கமுடியும். நன்கொடை அளிப்பவரின், பெறுபவரின் தகவல்கள் இதில் இடம்பெறாது. தேர்தல் பத்திரம்மூலம் வந்த நன்கொடை பற்றிய தகவல்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது இல்லை. நன்கொடை கொடுப்பவர், வாங்கும்கட்சி என எல்லாத் தகவல்களும் ரகசியமாக இருக்கும். தேவையென்றால், விசாரணை அமைப்புகள் மட்டுமே அதைப்பெறலாம்.

இந்நிலையில் முன்னாள் கடற்படை தலைவரான எல்.கே.பத்ரா ”அக்டோபர் 19 முதல் அக்டோபர் 28 வரை விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் கிளை வாரியான மற்றும் பிரிவு வாரியான தகவலை” ஆர்டிஐ மூலம் கேட்டுள்ளார்.

”எஸ்பிஐயின் 9 கிளைகள் மூலம் 282,29,01,000 கோடிகளுக்குத் தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டதாகவும், மும்பையைச் சேர்ந்த ஒரு எஸ்பிஐ கிளை அதிகபட்சமாக 130 கோடிகளுக்குத் தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டதாக” ஆர்டிஐ மூலம் அவருக்குப் பதில் கிடைத்துள்ளது.

  • 1 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் 279 பிரதிகள் விற்கப்பட்டதாகவும்.
  • 10 லட்சம் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் 32 பிரதிகள் விற்கப்பட்டதாகவும்.
  • 1 லட்சம் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் 9 பிரதிகள் விற்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

`தேர்தல் பத்திரங்கள் செல்லுபடி ஆகாது’ என ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம்  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் ஆர்டிஐ மூலம் கிடைத்த பதில் மிகவும் முக்கியம்வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது என தி இந்து கூறியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பீகார் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பத்திரங்களை விற்கக் கூடாது எனத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதை அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தைக் கோரியிருந்தது.

அந்த மனுவில் “அக்டோபர் 19 முதல் 28 வரை (பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு) எஸ்பிஐ அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

”தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்த 2018 ஆம் ஆண்டின் அரசாங்க அறிவிப்பில், அவற்றின் விற்பனை ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்க வேண்டும். ஆனால் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்காத தேர்தல் பத்திரங்களின் விற்பனை தற்போது பீகார் தேர்தலுக்கு முன்னதாக நடக்கிறது” என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் கடைசி விசாரணை நடந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைத் தடை செய்யுமாறு மனுதாரர் இரண்டு முறை நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், தேர்தல் பத்திரங்களைத் தடை செய்யக் கோரிய மனுவை விசாரித்த எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இதைத் தடை செய்யத் தேவையில்லை எனக் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தி இந்துவில் வெளியான செய்தியின் மொழியாக்கம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்