Aran Sei

கொரோனா காலத்தில் பீகார் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

credit: navbharattimes.indiatimes.com

ந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக வாக்குபதிவுகள் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

பீகாரில் மொத்தம் 48 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் 234 சட்டப்பேரவை தொகுதி உள்ளன.

பீகாரின் 16 மாவட்டங்களில் உள்ள 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குபதிவு அக்டோபர் மாதம் 28-ம் தேதி நடைபெறும். அடுத்த 17 மாவட்டங்களில் உள்ள 94 சட்டப்பேரவை தொகுதிக்கு நவம்பர் 2-ம் தேதி வாக்குபதிவு நடைபெறும். எஞ்சியுள்ள 15 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதி வாக்குபதிவு நடைபெறும்.

பிற மாநிலங்களிலிருந்து மீண்டும் பீகாருக்கே வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஆணையம் திரட்டியுள்ள தகவல்களின் அடிப்படையில், 18.87 லட்சம் தொழிலாளர்கள் பீகாருக்கு மீண்டும் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே 16.6 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

தனிநபர் இடைவெளியை கடை பிடிப்பதற்கு ஒரு வாக்குச்சாவடியில் 1000 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.. இதன் காரணமாக, மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாகும். பீகாரில் 2015-ம் ஆண்டு தேர்தலில் 65,337 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டன.

இந்தத் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்கான நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் 6 மணி வரை நடக்கும்.

வாக்குப் பதிவின் போது வாக்காளர்களுக்கு கையுறைகள் முகமூடிகள் தரப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் உடல் சூட்டை காட்டக்கக்கூடிய திரை வைக்கப்படவிருக்கிறது.

இந்த தேர்தலுக்காக 7 லட்சத்துக்கும் அதிகமான கிருமி நாசினி பாட்டில்களும் 6.7 லட்சத்துக்கு அதிகமான முகமூடிகள் மற்றும் 7.2 கோடி ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கையுறைகள்  வாங்கப்பட இருப்பதாகவும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

கொரோனா காலத்தில் தேர்தல் நடத்தப்படுவது குறித்து, தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுடன் அரண் செய் பேசிய போது, “தேர்தல் ஆணையம் தனிநபர் இடைவெளி போன்ற நடைமுறைகளை தேர்தலின் போது கடைப்பிடிக்கும் என்று நான் செய்தித்தாள்கள் வழியாக அறிந்துகொண்டேன். அதற்கு மேல் எனக்கு வேறெதுவும் தெரியாது” என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டிலும் வரும் ஆண்டு தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, “கொரோனா இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று தெரியாத நிலையில், தேர்தலை எத்தனை காலத்துக்கு தள்ளிவைக்க முடியும். எனவே, பீகாரில் தேர்தல் நடத்தும் போது இயல்பாகவே தமிழ்நாட்டிலும் தேர்தல் நடத்தக்கூடிய சாத்தியங்கள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.

பீகார் மாநில தேர்தல் முடிவுகள் நவம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்படும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்