Aran Sei

பீகார் தேர்தல் முடிவுகள் – கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? – நவநீத கண்ணன்

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நாடு சந்திக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல், வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, திட்டமிடப்படாத பொதுமுடக்கத்தால் வேலை இழந்து ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் என பல்வேறு பின்னணிகளுக்கு நடுவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது பீகார் சட்டமன்ற தேர்தல்.

தேர்தலின் முடிவில் மீண்டும் பீகாரில் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. வரும் நவம்பர் 16ஆம் தேதி பீகாரின் முதல்வராக 5ஆவது முறையாக பதவியேற்க இருக்கிறார் நிதீஷ்குமார். இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்ட கணக்குகள் நிறைவேறியுள்ளதா? தேர்தல் முடிவுகள் பீகாருக்கும் நாட்டிற்கும் உணர்த்தும் பாடம் என்ன? என்பது போன்றவற்றை ஆராய்வது அவசியமாகிறது.

நிதீஷ் குமாரின் 15 ஆண்டுகால ஆட்சியின் எதிர்ப்புணர்வை (Anti-Incumbency) காப்பாற்றிய பாஜகவின் மாபெரும் வெற்றி:

2005-யில் இருந்து தொடர்ந்து 15 ஆண்டுகளாக (8 மாதங்களைத் தவிர) பீகாரின் முதல்வராக இருந்து வரும் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து, மொத்தம் இருக்கும் 243 தொகுதிகளில் 125 தொகுதிகளை வென்றுள்ளது. தொடர்ந்து 4ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார் நிதிஷ்குமார். ஆனால் இந்த வெற்றியை முதல்வர் நிதீஷ்குமார் அல்லது ஜே.டி.யு-வின் வெற்றி என்று சொல்வதை விடவும், பாஜகவின் மாபெரும் வெற்றி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் போட்டியிட்ட 110 தொகுதிகளில் 74 தொகுதிகளை வென்று உள்ளது பாஜக. வெற்றி விகிதம் 67.27%. வேறு எந்த கட்சியும் நெருங்க முடியாத அளவில் 21 தொகுதிகளை புதிதாக வென்று பீகாரில் தன் அழுத்தமான கால் தடத்தை பதித்துள்ளது. மேலும் கூட்டணியில் இருந்தாலும் இது பாஜகவின் வெற்றி என சொல்வதற்கு ஜே.டி.யு-வின்  எதிர்பார்த்த தோல்வியும் ஒரு முக்கிய காரணம். ஏனெனில் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது 28 தொகுதிகளை இழந்து வெறும் 43 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ஜே.டி.யு.

  • ஜே.டி.யு-வும் ஆர்.ஜே.டி-யும் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) நேரடியாக மோதிய 69 தொகுதிகளில் – ஜே.டி.யு வெற்றிப் பெற்றது 22 தொகுதிகள் (32%)
  • பாஜகவும் ஆர்.ஜே.டி-யும் நேரடியாக மோதிய 59 தொகுதிகளில் – பாஜக வெற்றிப் பெற்றது 38 தொகுதிகள் (64%)
  • ஜே.டி.யு-வும் காங்கிரஸும் நேரடியாக மோதிய 27 தொகுதிகளில் – ஜே.டி.யு வெற்றிப் பெற்றது 17 தொகுதிகள் (63%)
  • பாஜகவும் காங்கிரஸும் நேரடியாக மோதிய 36 தொகுதிகளில் – பாஜக வெற்றிப் பெற்றது 29 தொகுதிகள் (81%)

பிரதமர் மோடியின் பரப்புரையும் பாஜகவின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளது. ஏனெனில் 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் முதல் கட்டத்தில் மோடி பெருமளவு பங்கேற்கவில்லை. ஆனால் இரண்டாம் மூன்றாம் கட்ட தேர்தலின்போது பரப்புரைகளில் மோடி அதிகளவில் பங்கேற்றார். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மற்றும் பீகார் மாநில பிரச்சனைகளை விடவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசப்பக்தி, தேசியவாதம் சம்மந்தமாகத்தான் அதிகளவில் பேசினார். அது அப்போது பல விமர்சனங்களுக்கு வழிவகுத்தாலும், தேர்தலில் பாஜவுக்கு பலனளித்துள்ளது என்பதையே இரண்டாம், மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

  • இரண்டாம் கட்டத் தேர்தலில் தே.ஜ.கூ. வென்ற இடங்கள் – 52. பாஜக மட்டும் – 37
  • மூன்றாம் கட்டத் தேர்தலில் தே.ஜ.கூ. வென்ற இடங்கள் – 53. பாஜக மட்டும் – 39

இது நரேந்திர மோடி என்பவர் நாட்டின் பிரதமர், செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர் என்பதைத் தாண்டி, பல கோடிப்பேரால் பின்பற்றப்படும் ஒரு ‘வழிபாட்டு பிம்பமாக (Cult following)’ இந்தி பேசும் மாநிலங்களில் மாறிவருகிறார். அவரின் சமீபத்திய அடர்ந்த வெண்தாடித் தோற்றம், அவரும் தன்னை இவ்வாறாகவே ப்ரோஜெக்ட் செய்ய விரும்புகிறார் என்பதையே காட்டுகிறது.

ஆக என்னதான் நிதீஷ்குமார் மீண்டும் முதல்வரானாலும், கூட்டணியில் ஒரு ஜூனியர் பார்ட்னர் ஆகவே அவர் கருதப்படுவார். அமைச்சரவையிலும் பாஜக எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. நிதிஷ்குமாரின் தொடர் 15 ஆண்டுகால ஆட்சியின் எதிர்ப்பை தனக்கு சாதகமாக பாஜக பயன்படுத்திக்கொண்டு நிதிஷ்குமாரையும் கரைசேர்த்துள்ளது என்றே சொல்லவேண்டும். இதன் மூலம் பீகாரில் ஒரு கூட்டணிகட்சியாக இருந்தது போக, தற்போது தனியாக நின்று ஜெயிக்கக்கூட வலிமைப் படைத்த தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது பாஜக.

தேஜஸ்வி யாதவ் – கைக்கு எட்டிய தனிப்பெரும் கட்சி அந்தஸ்து, வாய்க்கு எட்டாத முதல்வர் பதவி:

90களின் தொடக்கத்தில் ரத யாத்திரை அரசியல், மண்டல் கமிஷன் காலங்களுக்கு பிறகான ஏறக்குறைய 30 ஆண்டுகால பிகார் மற்றும் வட இந்திய அரசியலில் முக்கிய நபராக விளங்கியவர் லாலு பிரசாத் யாதவ். இதுவரை தன் தந்தையின் நிழலில் அரசியலில் வளர்ந்து வந்த கிரிக்கெட் வீரரான தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத், தீவன ஊழல் வழக்கில் சிறை சென்றப் பிறகு, ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்.ஜே.டி) கட்சியை முழுவதும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். அதன்பின் சென்றாண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை.

இருப்பினும் இச்சட்டமன்றத் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது ஆர்.ஜே.டி. இது சென்ற சட்டமன்றத் தேர்தலைவிட 5 தொகுதிகள் குறைவுதான் எனினும், வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் 97 லட்சங்களுக்கு மேல் பெற்று (23.1%) முதலிடத்தில் உள்ளது. (பாஜக வாங்கிய மொத்த வாக்குகள் 82 லட்சம் – 19.5%). ஆர்.ஜே.டி போட்டியிட்ட தொகுதிகளின் அடிப்படையில் வெற்றி விகிதம் 52%.

மாநிலத்தின் அடிப்படை ஆதாரப் பிரச்சனைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்குவது, சமூகநீதி மற்றும் பொருளாதாரம் சார்ந்த திட்டங்கள் குறித்தே தேஜஸ்வியின் பிரச்சாரங்கள் அமைந்திருந்தன. ஊடகங்கள் தேதஸ்வியின் பிரச்சாரக்கூட்டங்களில் கூடிய மக்கள் கூட்டத்தை ‘தேதஸ்வி அலை’ என்றே வர்ணித்தன. இதைக் கண்டு எதிர்கட்சியினரே சற்று அஞ்சினர். அது முதற்கட்ட தேர்தலில் மெய்யாகும் வண்ணம் 71 தொகுதிகளில் 48 தொகுதிகளை வென்றது தேதஸ்வி தலைமையிலான மகா கூட்டணி. இதில் ஆர்.ஜே.டி. மட்டும் 40 தொகுதிகளைக் கைப்பற்றியது.

இதனைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் தேஜஸ்வியே அடுத்த முதல்வர் என்று ஆருடம் கூறின. எனினும் இந்த தேர்தலில் ஆட்சி அமைக்காவிடினும், துணிச்சலாக பாஜகவை எதிர்த்து இந்தளவிற்கு வெற்றி பெற்றதும், பெருந்திரளான இளைஞர் கூட்டத்தின் ஆதரவாலும் இளம்வயதிலேயே வடநாட்டில் தவிர்க்கமுடியாத அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார் தேஜஸ்வி யாதவ்.

மகா கூட்டணியின் வெற்றியை சிதைத்த ‘காங்கிரஸ் பேரியக்கம் என்னும் மூழ்கும் கப்பல்’ :

தனிப்பெரும் கட்சியாக ஆர்.ஜே.டி வெற்றிப் பெற்றிருந்தும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு, கூட்டணி கட்சியான காங்கிரஸ் தேர்தலில் எதிர்பார்த்த அளவில் செயல்படாததும், போதுமான வெற்றிகளைப் பெறாததும்தான் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் போட்டியிட்ட 70 இடங்களில் வெறும் 21 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது (வெற்றி விதிதம் 30%). சென்றமுறை வெற்றிப்பெற்றவர்களில் வெறும் 6 பேர் மட்டுமே மீண்டும் வெற்றிப்பெற்றுள்ளனர். மேலும் முன்பே பார்த்ததுபோல் தனது பிரதான எதிரியான பாஜகவுக்கு எதிராக நேரடியாக போட்டியிட்ட 36 இடங்களில் 7-இல் மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது. காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் சரிபாதி வென்றிருந்தால்கூட இந்நேரம் தேஜஸ்வி முதல்வராகியிருப்பார் (காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் யாரும் பாஜகவுக்கு தாவாத பட்சத்தில்).

அதை தவிர்த்து தேர்தல் தொகுதி பங்கீடின் போதே அதிகப்படியான இடங்களில் நின்றிருக்காமல், தங்களது வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கக் கூடிய இடங்களை ஆர்.ஜே.டி கட்சிக்கு காங்கிரஸே கூடுதலாக விட்டு கொடுத்திருந்தாலும், அல்லது இடதுசாரி கட்சிகளுக்கு கூடுதலான இடங்களை கொடுக்க அவர்கள் முன் வந்திருந்தாலும் இந்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பு நிச்சயம் அதிகரிக்கும். மேலும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் இடங்களில் மட்டும் நின்றிருந்தால் அங்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். இதன்மூலம் மகா கூட்டணி ஆட்சியைப் பிடித்திருந்திருக்கும். ஆனால் தன் பலத்திற்கு அதிகமான இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு, அது அடையும் தோல்வி அக்கட்சியை மட்டும் பாதிக்காமல், அது அங்கம் வகிக்கும் கூட்டணியை பின்னுக்கு இழுத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பினும் அக்கட்சி/கூட்டணியின் ஆட்சி அமைப்பதையே தடுப்பதாக உள்ளது.

இது பீகாரில் மட்டும் நடக்கவில்லை. கடந்த ஆண்டு மகாராஷ்டிரா தேர்தலிலும் இதையேதான் காங்கிரஸ் செய்தது. 147 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸை விட குறைவான இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியவை அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்ததால், பாஜகவுக்கு எதிராக அணிதிரண்ட இவர்கள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிமூலம் ஆட்சியைப் பிடித்தனர். கிட்டத்தட்ட இதேதான் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் நடந்தது. உத்திரப்பிரதேசத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி இதைதான் செய்தது. அதனால் காங்கிரஸ் உடன் சேர்ந்து சமாஜ்வாதி கட்சியும் படுதோல்வி அடைந்தது. இதனால் காங்கிரஸை கூட்டணியில் சேர்த்து கொள்ள மற்ற மாநிலக் கட்சிகள் தயங்கும் நிலைதான் தற்போதைய யதார்த்தம்.

இவை அனைத்தும் உணர்த்துவது ஒன்றுதான். பல மாநிலங்களில் காங்கிரஸ் தனது இழந்த செல்வாக்கை முழுமையாக இன்னும் மீட்டெடுக்கவில்லை அல்லது மீட்டெடுப்பதற்கான உழைப்பை போதுமானதாக செலுத்தவில்லை. ஆனால் அதற்குள் காங்கிரஸ் மாநில கட்சிகளுடன் கூட்டணியில் அதிக இடங்கள் தர எதிர்ப்பார்க்கிறது. பல கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் பக்கபலமாக இல்லாமல் பாரமாகவே உள்ளது என்பதே நிதர்சனம்.

கதர் சட்டை கசிங்கிவிடுமே என்கிற கவலை விடுத்து களத்தில் இறங்கி வேலை செய்யாமல், பாராம்பரியமிக்க கட்சி, இந்தியாவிற்கு சுதந்திரத்தையே வாங்கிக்கொடுத்த இயக்கம் என்கிற தன்னுடைய பழைய ‘ப்ராண்ட்’  மதிப்புகளை மட்டுமே நம்பிக்கொண்டு, மாறிவருகிற புதிய சமூக பொருளாதார அரசியல் சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு, மாற்று சித்தாந்தத்தை முன்வைக்க அது தற்போதுவரை தயாராக இல்லை.  ஆக்கப்பூர்வமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள எந்த முயற்சியும் செய்யாமல், உட்கட்சிக்குள்ளே பல கோஷ்டிகளாக பிரிந்து சண்டை இட்டுக் கொண்டு, தனக்கு தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டு, ஓட்டைப் பிரிக்கிறார்கள் என்று அடுத்தவர்கள் மீதும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறுகிறது என்றும் பழி போட்டுக்கொண்டு இருந்தால், ‘காங்கிரஸ் முக்த் பாரத்’தை பாஜக செய்கிறதோ இல்லையோ, காங்கிரஸே தனக்கு தானே சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.

இடதுசாரிகளின் மகத்தான வெற்றி :

பீகார் தேர்தலில் அரசியல் நோக்கர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது, இடதுசாரிகளின் வெற்றிதான். மொத்தமாக இடதுசாரிகள் போட்டியிட்ட 29 தொகுதிகளில் 16 தொகுதிகளில் வென்றுள்ளனர். வெற்றிப் பெற்ற அனைவரின் வாக்கு வித்தியாசங்களும் குறைந்தது 50000 ஓட்டுக்கள். 3 தொகுதிகளில் வெறும் 500 ஓட்டுகளுக்கு குறைவாக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.

  • மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் கட்சி(CPI-ML) போட்டியிட்ட 19 தொகுதிகளில் – வென்றது 12 தொகுதிகள் – வெற்றி விகிதம் 63.16% (பாஜகவுக்கு அடுத்து சிறப்பான வெற்றி விகிதம்)
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்ட 4 தொகுதிகளில் – வென்றது 2 தொகுதிகள் – வெற்றி விகிதம் 50%.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகள் – வென்றது 2 தொகுதிகள் – வெற்றி விகிதம் 33.3%.

மொத்தமாக இடதுசாரிகளின் வெற்றி விகிதம் 55.17%, மகா கூட்டணியில் அதிக வெற்றி விகிதம்.

இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கத்திற்கு அடுத்து அதிக கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-க்கள் பீகாரில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் சாதாரணமாக இவ்வெற்றி அமைந்துவிடவில்லை. ஆயதப்போராட்டத்தை கைவிட்டு தேர்தல் ஜனநாயகப் போராட்டத்தை கையிலெடுத்தப் பின்னர், எம்.எல் அமைப்பினர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் 3 விவசாய மசோதாக்களுக்கு எதிராகவும் மிகப்பெரிய அளவில் இடதுசாரிகள் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினர்.

மேலும் பீகாரில் பல ஆண்டுகளாக நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளனர். இதனால் போஜ்புரி பகுதிகளில் வெகுஜன மக்களிடையே மிகுந்த நம்பிக்கையைப் பெற்றனர். இந்த தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் இதை பார்க்கவேண்டும். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 243 நபர்களில், இந்த 19 இடதுசாரிகள் மட்டுமே கோடீஸ்வரர்களாக இல்லை என்பது கூடுதல் சிறப்பம்சம்.

“நிதீஷ்குமாரை வீழ்த்துவேன்” என்ற சிராக் பஸ்வானின் சபதம் நிறைவேறியதா?

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன்  சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி (எல்.ஜே.பி) கட்சி, பீகார் சட்டமன்றத் தேர்தலில் மட்டும் அக்கூட்டணியில் சேராமல் தனித்துப் போட்டியிட்டது. அதிலும் லோக் ஜன சக்தி, ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட இடங்களில் மட்டுமே எதிர்த்துப் போட்டியிட்டது. பா.ஜ.க-வை எதிர்த்து வெறும் 3 இடங்களில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியது. இந்நிலையில் அக்கட்சி வெறும் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், பல இடங்களில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு விழவேண்டிய வாக்குகளை சரமாறியாக பிரித்துள்ளது. இது ஜே.டி.யு-வை பலவீனப்படுத்த பாஜக எல்.ஜே.பி-யை பயன்படுத்திக் கொண்டு தனித்து போட்டியிட வைத்து, நிதீஷ்குமாருக்கு விழவேண்டிய ஓட்டுகளை பிரித்து செய்த சூழ்ச்சி என அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நிதீஷ்குமார் கட்சியை காலிசெய்துவிட்டு, அந்த இடத்தில் தன்னை நிறப்பிக்கொண்டு பாஜகவை மையப்படுத்தியே இனி பீகார் அரசியல் நடைபெறவேண்டும் என்று அக்கட்சி நினைப்பதாக கருதுகின்றனர்.

இந்த சந்தேகத்திற்கு வலுசேர்க்கும் விதமாக தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளன்று பேட்டி அளித்த சிராக் பஸ்வான் “மற்ற கட்சிகளைப் போலவே நாங்களும் அதிக தொகுதிகளை வெல்ல வேண்டுமென்ற நோக்கத்துடனே செயல்பட்டோம். ஆனால், இந்தத் தேர்தலில் எங்களது குறிக்கோள், பாஜக-வை பீகாரில் பிரதான கட்சியாக்க வேண்டுமென்பதுதான். அதற்கான பலன் கிடைத்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க மீது, பீகார் மக்களுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியைக் காட்டுகிறது” என்று கூறினார்.

முன்னதாக “எப்போதுமே நிதிஷ்குமாரை வீழ்த்துவதுதான் லோக் ஜன சக்தியின் குறிக்கோள்” என்றும் சிராக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிராக் பஸ்வான் ஜே.டி.யு-வின் வெற்றி வாய்ப்புகளை மட்டும் குலைக்காமல், மகா கூட்டணி குறிப்பாக ஆர்.ஜே.டி-யின் வெற்றியையும் கணிசமான அளவில் குலைத்துள்ளது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அசாதுதீன் ஒவைசியை குறைக்கூறுவது நியாயமா?

பீகார் தேர்தலில் மற்றொரு சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியிருப்பது, ஹைதராபாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம்(ஏஐஎம்ஐஎம்) கட்சி, காங்கிரஸ் மற்றும் மகா கூட்டணிக்கு விழவேண்டிய இஸ்லாமிய ஓட்டுக்களை பெருமளவில் பிரித்ததாகவும், அதனாலும்தான் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிப் பெற முடியவில்லை என்றும் ஒவைசி பாஜகவின் பீ-டீம் என்றும் அவர்மீது காங்கிரஸ் தரப்பில் பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

ஆனால் உண்மையில் ஒவைசி காங்கிரஸுக்கு விழவேண்டிய வாக்குகளைப் பிரித்தார என்றால், ‘நிச்சயமாக இல்லை’ என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன. ஒவைசி கட்சி போட்டியிட்ட 20 தொகுதிகளில், அவர் வெற்றிப் பெற்ற 5 எல்லையோர சீமஞ்சல் பகுதி தொகுதிகளைத் தவிர மற்ற 15 தொகுதிகளிலும் வெற்றி விகிதத்தை பாதிக்கும் அளவிற்கு இல்லாமல்,  மிகவும் சொற்பமான வாக்குகளே அவர் கட்சி பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் எட்டிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் 4ஆவது இடத்தில்தான் உள்ளது. ஆகவே அவர் கட்சி வேட்பாளர்கள் காங்கிரஸாரின் வெற்றியை எந்த விதத்திலும் தடுக்கவில்லை என்பதே உண்மை.

மேலும் ஜனநாயகத்தில் கட்சிகள் தேர்தலில் பங்கெடுப்பதென்பது அரசியலமைப்பு சட்டம் அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமை. ஒவைசி தேர்தலில் போட்டியிட்டதால்தான் நாங்கள் தோற்றோம் என சொல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது. இவர்கள் ஒவைசிடம் எதிர்பார்ப்பது, தேர்தலில் போட்டியிடாமல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு மட்டும் தந்து விட்டு அவர் ஒதுங்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தனியாக நின்று 5 தொகுதிகளையும் தங்களால் ஆட்சியமைக்க முடியாத அளவிற்கு ஓட்டுக்களை பிரிக்கும் வல்லமை பெற்றவர்களை, தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவருவதுதானே புத்திசாலித்தனம். அதைவிடுத்து தேர்தலில் தோற்றப்பிறகு ஒவைசியை திட்டுவதால் எந்த பலனும் இல்லை. ஒவைசி தேர்தல் பரப்புரையின்போது கூறுகையில் “நான் மகா கூட்டணியில் சேர எவ்வளவோ முயன்றேன், ஆனால் அவர்கள் நம்மை ஒரு தீண்டத்தகாதவர்களாகத்தான் பார்க்கிறார்கள். சீமஞ்சல் பகுதி இஸ்லாமியர்களைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் ஓட்டு மட்டும் வாங்கிக்கொண்டு வஞ்சித்து வருகின்றனர்” என ஆதங்கப்பட்டார்.

மேலும் இது தொடர்பாக இந்தியா டுடே வில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா பேசுகையில், “பாஜக செய்யும் மதத் தீவிரமயமாக்கலுக்கு எதிரானது மதச்சார்பின்மைதான். ஆனால் ஒவைசியோ, பாஜக இந்து மதத்தை வைத்து செய்வதை, இஸ்லாம் மதத்தை வைத்து எதிர் தீவிரமயமாக்கல் (Counter- Radicalisation) செய்கிறார்” குற்றஞ்சாட்டினார்.

இதற்கு அந்நிகழ்ச்சியிலேயே பதிலளித்த ஒவைசி “சிவசேனாவோடு காங்கிரஸ் கூட்டு வைத்துள்ளது; சிவசேனா என்ன ஆகச்சிறந்த மதச்சார்பற்ற கட்சியா?” என கேள்வி எழுப்பினார். மேலும் “பாஜக தற்போது ஆட்சியில் இருப்பதற்கு காங்கிரஸின் திறனற்ற தலைமையும், அரசியல் இயலாமையும்தான் காரணம். நான் எந்த தீவிரதன்மை செய்ய அரசியலுக்கு வரவில்லை. நான் என் மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க போராடுவது எவ்வாறு தீவிரமயமாக்கல் ஆகும்? நான் எச்சிரிக்கிறேன், காங்கிரஸ் கட்சி முறையான வாதத்தை முன்வைக்கவேண்டும். இது முழுக்க முழுக்க பொய் குற்றச்சாட்டு. வெற்றியோ தோல்வியோ தேர்தலில் பங்கேற்று இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தவே நாங்கள் தேர்தலில் நிற்கிறோம். என் வாழ்நாள் முழுவதும் நான் இதையே செய்வேன்” என்றார்.

https://twitter.com/IndiaToday/status/1326343891902148609?s=19

பீகார் தேர்தல் நாட்டிற்கு உணர்த்துவது :

கொரோனாவை தவறாக கையாண்டு பெரும் சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பிறகான முதல் தேர்தலிலே, பாஜக இப்பிரச்சினைகளைத் தாண்டி இந்தளவிற்கு பீகாரிலும் மற்ற மாநில இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இது தேசிய அளவிலும், தமிழ்நாடு கேரளா தவிர்த்த மற்ற மாநிலங்கள் அளவிலும் பாஜக ஒரு மாபெரும் சக்தியாக உள்ளது என்பதையே உணர்த்துகிறது. இந்தளவிற்கு அதிகார பலத்துடன் உள்ள ஒரு கட்சியை வீழ்த்தவேண்டுமென்றால், எதிர்நிலையில் வலுவான முகமோ, கட்சியோ மட்டும் போதாது. அதைத்தாண்டி வலுவான ஒரு மாற்று அரசியல் சித்தாந்தம் தேவைப்படுகிறது. அதை தங்கள் மாநிலத்திற்கென்று தனித்த அடையாளங்களைக் கொண்ட அனைத்து மாநிலக் கட்சிகளும் இடதுசாரிகளும்புத்துயிர் பெறும் பட்சத்தில், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துதான் முன்னெடுக்கவேண்டும். அதைவிடுத்து இக்கட்சிகள் வாக்கரசியலுக்காக தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும் குறைக்கூறிக் கொண்டும், மென்மையான மதவாத சாதியவாத அரசியலை கடைப்பிடித்துக் கொண்டும் இருக்குமேயானால் அது பாஜகவிற்கே சாதகமாக அமையும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்