Aran Sei

பீகார் தேர்தல் : எதிர்க்கட்சி கூட்டணி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

credits:thehindu.com

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கப்பட்டு நவம்பர் 7-ம் தேதி வரையில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில், 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதியும், 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன.

லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருப்பதால் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி செயல்பட்டு வருகிறது. மகாகட்பந்தன் என்று பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி அவினாஷ் பாண்டே, “தேஜஸ்வி யாதவ் தலைமையில் பீகார் மாநிலம் வளம்பெற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

கூட்டணி கட்சிகள் மத்தியில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளிலும், சி.பி.ஐ.எம்.எல் 19 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மகாகட்பந்தன் கூட்டணிக்கு எதிராக பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

பீகார் தேர்தல் குறித்து ஆலோசிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் இல்லத்துக்குச் சென்றுள்ளார்.

 

பீகார் மாநில துணை முதலமைச்சர் சுஷில் மோடி, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய், கட்சியின் பொதுச் செயலாளர் புபேந்தர் யாதவ் ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.

2015-ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய ஜனதாளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நித்திஷ் குமார் முதலமைச்சராகவும் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி ஏற்று ஆட்சி அமைத்தனர்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்